india

img

உத்தர்கண்ட் மாநில அரசு மத நிகழ்வுகளை நடத்துவதற்கு உயர்நீதிமன்றம் கண்டனம்....

புதுதில்லி:'
உத்தர்காண்ட் மாநிலத்தில் சார்தாம் போன்று மத நிகழ்வுகளை அனுமதித்து, கொரோனா வைரஸ் தொற்று பரவுவதற்கு உதவுவதா என்று உத்தர்காண்ட் மாநில அரசை உயர்நீதிமன்றம் கடிந்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவிக் கொண்டிருக்கக்கூடிய நிலையில், மாநிலத்தில் சார்தாம் போன்று மத நிகழ்வுகளை அனுமதித்திருப்பது குறித்து அம்மாநில உயர்நீதிமன்றம் கேள்விஎழுப்பியிருக்கிறது. மேலும், கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்திடுவதற்கானத் தயாரிப்புப் பணிகள் எதையும் செய்யாதிருப்பதைச் சுட்டிக்காட்டி, “இப்போதாவது தூக்கத்திலிருந்து விழித்துக் கொள்ளுங்கள்” என்றும் கடிந்து கொண்டிருக்கிறது.

“கொரோனா வைரஸ் பெருந்தொற்று நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கையில் அது குறித்துக் கிஞ்சிற்றும் கவலைப்படாது, நெருப்புக்கோழி தன் தலையை மணலுக்குள் புதைத்துக் கொண்டது என்ற பழமொழிக்கிணங்க எங்களால் இருந்துவிட முடியாது,” என்று உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஆர்.எஸ்.சௌஹான் மற்றும் நீதிபதிஅலோக் குமார் வர்மா ஆகியோர் அடங்கியஅமர்வு தெரிவித்துள்ளது.கொரோனா வைரஸ் பெருந்தொற்று மக்களைத் தாக்கி ஓராண்டாகியும், அதற்குஎதிராக உத்தர்காண்ட் அரசு ஏன் எவ்வித நடவடிக்கையையும் இதுவரை எடுக்கவில்லை என்று கேட்ட நீதிபதிகள், அடுத்து மூன்றாவது அலை வரும் என்ற முன்கணிப்புகளையும் சுட்டிக்காட்டினர்.

 கும்பமேளாவின் பாதிப்பு தொடர்கிற அதே சமயத்தில், இப்போது பூர்னகிரி மேளா நடைபெற்று, அங்கே பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றிருக்கிறார்கள். இதனால்தான் இப்போது கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறதா? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.மேலும், ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் சார்தாம் யாத்ரா இந்த ஆண்டு ரத்துசெய்யப்பட்டுவிட்டது என்று அரசாங்கத்தின் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், கோவில்களின் மேலாண்மை வாரியம் அதனை நடத்துவதற்கான நடைமுறைகளை வெளியிட்டிருக் கின்றன. இது எப்படி என்றும் நீதிபதிகள் வினவினர். கொரோனா வைரஸ் தொற்றுக்குஎதிராகப் போராட, அனைத்துவளங்களையும் அரசாங்கம் பயன்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் கேட்டுக் கொண்டனர்.“நாம் கண்ணுக்குப் புலப்படாத எதிரிக்கு எதிராக ஓர் உலக யுத்தத்தை நடத்திக்கொண்டிருக்கிறோம். இதனை முறியடித்திட நம் சக்தி அனைத்தையும் பயன்படுத்த வேண்டும். அரசமைப்புச் சட்டத்தின் 21-வது பிரிவின்கீழ் குடிமக்களின் உயிர்களைப் பாதுகாப்பது அரசின் முழுமுதற் கடமையாகும்” என நீதிபதிகள் கூறினர்.     (ந.நி)

;