india

img

அத்தியாவசியப் பணிகள் பாதுகாப்பு மசோதா, திவால் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றம்.... விவாதமே இல்லாமல் மோடி அரசு அராஜகம்...

புதுதில்லி:
எதிர்க்கட்சி எம்.பி.க்களின் வேண்டுகோளை புறக்கணித்து, ராணுவ தளவாட துறையை தனியாருக்கு தாரைவார்க்க வகை செய்யும் அத்தியாவசியப் பணிகள் பாதுகாப்பு மசோதா,  நடுவர் மன்றங்கள் சீர்திருத்தங்கள் மசோதா, திவால் சட்டத் திருத்த மசோதா ஆகியவை  மோடிஅரசால் குரல் வாக்கெடுப்பில் நிறைவேற்றப் பட்டது.

மக்களவை
மக்களவையில் கேள்வி நேரம் திங்கள் கிழமை நடைபெற்றதைபோலவே எதிர்க்கட்சி உறுப்பினர்களின் முழக்கங்களுக்கிடையே செவ்வாயன்று தொடர்ந்து நடைபெற்றது. பின்னர்,  அத்தியாவசியப் பணிகள் பாதுகாப்பு சட்டமுன்வடிவு,2021 எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்தச் சட்டமுன்வடிவு, இதுதொடர்பாக பிறப்பிக்கப்பட்டுள்ள அவசரச்சட்டத்தை மாற்றுகிறது. இதன்மீது அரசாங்கத்தின் தரப்பில் பேசிய பாதுகாப்பு இணை அமைச்சர் அஜய் பட், இந்தச்சட்ட முன்வடிவு எதிர்க்கட்சியினர் கூறுவது போன்று அரசமைப்புச்சட்டத்திற்கு விரோதமானது அல்ல. லடாக்கிலும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் உள்ள நிலைமைகள் எங்களுக்குத் தெரியும். நம் படையினரை இழக்க முடியாது என்றார்.  என்.கே.பிரேமசந்திரன் எம்.பி.பேசுகையில், ராணுவத்தளவாட உற்பத்திச் தொழிற்சாலை களைத் தனியாருக்கு தாரை வார்க்கக்கூடாது என்றார்.காங்கிரஸ் மக்களவைத் தலைவர்  அதிர் ரஞ்சன் சௌத்ரி பேசுகையில், இந்த சட்டமுன்வடிவு ஜனநாயக விரோதமானது. இது முற்றிலுமாக நிராகரிக்கப்பட வேண்டிய ஒன்று என்று கூறினார். 

இந்தச் சட்டம் ஓராண்டுக்குத்தான் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். பின்னர் இந்தச் சட்டமுன்வடிவு குரல்வாக்கெடுப்பில் நிறைவேற்றப்பட்டது.அடுத்து, மக்களவையில் நடுவர் மன்றங்கள் சீர்திருத்தங்கள் சட்டமுன்வடிவு, 2021 மூலம்  இது தொடர்பாக பிறப்பிக்கப்பட்டிருந்த அவசரச்சட்டம் மாற்றி அமைக்கப்பட்டது. இதன் மீது எவ்வித விவாதமும் இன்றி குரல் வாக்கெடுப்பில் நிறைவேற்றப்பட்டது. பின்னர் அவை புதன்கிழமை வரை ஒத்தி வைக்கப்பட்டது.

மாநிலங்களவை
மாநிலங்களவையில் கேள்விநேரம் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் முழக்கங்களுக்கு இடையே  நடத்தப்பட்டது. பின்னர் திவால் சட்டத்திருத்தச்சட்டமுன்வடிவு,2021 விவாதத்திற் காகவும் நிறைவேற்றுவதற்காகவும் எடுத்துக் கொள்ளப்பட்டது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி., ஜான் பிரிட்டாஸ் பேசுகையில், இந்தச் சட்ட முன்வடிவை எதிர்க்கிறோம் என்றார். இந்தச் சந்தர்ப்பத்தில் பெகாசஸ் உளவு விவகாரத்தை எழுப்பினார். உங்கள் தொலைபேசி கூட ஒட்டுக் கேட்கப்படும் என்று ஜான் பிரிட்டாஸ் கூறினார். பின்னர் இந்தச்சட்டமுன்வடிவு குரல் வாக்கெடுப்பில் நிறைவேற்றப்பட்டது. பின்னர் அவை புதன்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது.(ந.நி.)

;