india

img

ராஜினாமா செய்தார் எடியூரப்பா....

பெங்களூரு:
பாஜக மேலிடத்தின் உத்தரவின்பேரில் கர்நாடக முதல்வர் பதவியிலிருந்து எடியூரப்பா விலகி உள்ளார். முதலமைச்சராக பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில், தனது முதல்வர் பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்தார். 
கர்நாடகாவில் மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததை தொடர்ந்து, கடந்த  2019 ஜூலை 26 ஆம் தேதி பாஜக ஆட்சி அமைத்தது. எடியூரப்பா முதல்வராக  பதவியேற்றார். இவருக்கு78 வயதாகி விட்டதால், பாஜக-வின் கொள்கைப்படி பதவியில் இருந்து விலக வேண்டும். அவரை பதவி நீக்கம் செய்யும்படி கர்நாடக பாஜக எம்எல்ஏ.க்கள், அமைச்சர்களில் ஒரு பிரிவினர் பல மாதங்களாக போர்க்கொடி தூக்கி வருகின்றனர். இதனால், எடியூரப்பாவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

கடந்த வாரம் தில்லி சென்ற எடியூரப்பா, பிரதமர் மோடி, ஒன்றிய  உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோரை சந்தித்து பேசினார். பின்னர், ‘கட்சி மேலிடம் கேட்டுக்கொண்டால் பதவியை  ராஜினாமா செய்வேன்’ என்று எடியூரப்பா அறிவித்தார். ஆனால், அவர் ராஜினாமா செய்தால் கர்நாடகாவில் பாஜக கடும் பின்னடைவை சந்திக்க நேரிடும் என்று பாஜக தலைமைக்கு லிங்காயத்து மடாதிபதிகள்  எச்சரிக்கை விடுத்தனர்.இந்நிலையில், 2 ஆண்டு ஆட்சி நிறைவு பெறுவதை முன்னிட்டு கட்சி நிர்வாகிகள், எம்எல்ஏ-களுக்கு பெங்களூருவில்  திங்களன்று  காலை எடியூரப்பா விருந்து அளித்துள்ளார். அப்போது. தனது ராஜினாமாவை அறிவித்துள்ளார்.இதைத் தொடர்ந்து கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார்.

;