india

img

அயோத்தியில் மசூதி கட்டுவதற்கான நன்கொடைக்கு வரி விலக்கு.....

புதுதில்லி:
அயோத்தியின் தனிப்பூர் கிராமத்தில் கட்டப்படும் மசூதிக்கான நன்கொடைக்கு மத்திய அரசின் வரி விலக்கு கிடைத்துள்ளது என்று மசூதியை கட்டி வரும் அறக்கட்டளையான, இந்தோ இஸ்லாமிக் கல்சுரல் பவுன்டேஷன் (ஐஐசிஎப்) தெரிவித்துள்ளது.

சங்பரிவாரக்கும்பல்களால் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதன் இடம் குறித்த வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி,அயோத்தியில் மசூதி கட்ட 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. ராமர் கோவிலில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில்உள்ள தனிப்பூர் கிராமத்தில் மசூதி கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மசூதியுடன் 300 படுக்கைகள் கொண்ட சிறப்பு மருத்துவ சிகிச்சை மையம், நூலகம், தேசிய ஒற்றுமைக்கான ஆய்வகமும் இந்த 5 ஏக்கர் மசூதி வளாகத்தில் அமைக்கப்பட உள்ளன.
இப்பணிக்காக நாடு முழுவதிலும் ஐஐசிஎப் நன்கொடை பெறத் தொடங்கியுள்ளது. இந்த நன்கொடை அளிப்பவர்களுக்கு மத்திய அரசின் வருமான வரித்துறை சார்பில் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஐஐசிஎப் தலைவர் ஜபர் பரூக்கி கூறும்போது, “வருமான வரிச் சட்டம் 80 ஜி பிரிவின் கீழ் வரிவிலக்கு பெறுவதற்காக கடந்த ஆண்டு செப்டம்பரில் விண்ணப்பித்தோம். விண்ணப்பத்தில் இருந்த சில குறைபாடுகள் காரணமாக அப்போது வரிவிலக்கு கிடைக்கவில்லை. பிறகு மீண்டும் இந்தஆண்டு பிப்ரவரியில் விண்ணப்பித்ததில் தற்போது வருமான வரி விலக்குக்கான சான்றிதழ் தரப்பட்டுள்ளது. இதையொட்டி நன்கொடைக்கான விழிப்புணர்வு முகாம்களை விரைவில் தொடங்கவுள்ளோம்” என்று தெரிவித்தார்.இதுபோன்ற வரிவிலக்கு அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவிலுக்கும் கடந்த ஆண்டு அளிக்கப்பட்டுள்ளது. இதில் இதுவரை ரூ.21,000 கோடி வசூலியாகி உள்ளது.

;