india

img

சட்டவிரோதமாக திஷா ரவி கைது.... தில்லி காவல்துறை ஆணையருக்குத் தண்டனை வழங்கிடுக.... அகில இந்திய விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு வலியுறுத்தல்..

புதுதில்லி:
விவசாயிகளுக்கு விரோதமான வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்ததற்காக, கைது செய்யப்பட்ட திஷா ரவி தில்லி நீதிமன்ற கூடுதல் அமர்வு நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டிருப்பதற்கு, அகில இந்திய விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு நன்றியையும் வரவேற்பையும் தெரிவித்துள்ளது.  மேலும் தில்லிக் காவல்துறை ஆணையருக்கு உரிய தண்டனை வழங்க  வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக சங்க ஒருங்கிணைப்புக்குழு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சமூக ஊடகத்தில் (டூல்கிட்) கருத்துக்களைப் பதிவேற்றம் செய்தமைக்காக, பெங்களூர் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் திஷா ரவி என்பவர் (22 வயது) மீது தேசத் துரோகக் குற்றப்பிரிவு (இ.த.ச.124-ஏ) மற்றும் பகைமையை ஏற்படுத்துதல் (இ.த.ச.153ஏ) ஆகிய குற்றப்பிரிவுகளின் கீழ் தில்லிக் காவல்துறை முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்து, அவரை சிறையில் அடைத்தது. இதற்கெதிராக நாடு முழுவதும் அனைத்துத் தரப்பினர் மத்தியிலிருந்தும் கண்ட
னக் குரல்கள் எழுந்தன.

இவரை பிணையில் விடுவிக்கக் கோரி தில்லிக் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை ஏற்றுக்கொண்டு அவரைப் பிணையில் விடுவித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள அதே சமயத்தில், அரசின் கொள்கைகளை விமர்சிப்பதற்காக நாட்டின் குடிமக்களைச் சிறைகளில் அடைப்பதை ஒப்புக்கொள்ள முடியாது என்று கூறி தில்லிக் காவல்துறையையும் மத்திய அரசையும் கடுமையாகக் கண்டித்துள்ளது. மேலும் திஷா ரவி பதிவேற்றம் செய்துள்ள கருத்துக்களை ஆய்வு செய்யும்போது அதில் அவர் வன்முறையைத் தூண்டினார் என்பதற்காக எவ்விதமான அழைப்பும் இல்லைஎன்றும், இதனை வைத்துக்கொண்டு தேசத்துரோகக் குற்றஞ்சாட்ட முடியாது என்றும் தெரிவித்துள்ளது. அது மேலும், தில்லிக் காவல்துறை ஆணையர்  எஸ்.என்.ஸ்ரீவஸ்தவா, திஷா ரவியைக் கைது செய்ததன் மூலம்  சட்டவிரோதமாக நடந்து கொண்டிருக்கிறார் என்றும், திஷா ரவி விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்தார் என்பதற்காக சட்டவிரோதமாக அவரைக் கைது செய்திருக்கிறார் என்றும் உயர்நீதிமன்றம் குறிப்பிட்டிருக்கிறது.

இவ்வாறு நீதிமன்றம் திஷா ரவியைப் பிணையில் விடுவித்திருப்பதற்கும், மத்திய அரசையும், தில்லிக் காவல்துறையையும் கண்டித்திருப்பதற்கும் அகில இந்திய விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தன் திருப்தியை வெளிப்படுத்திக்கொள்கிறது.   மத்திய அரசாங்கம், விவசாயிகளின் போராட்டத்தை நசுக்கிட அரசமைப்புச்சட்டத்திற்கு விரோதமாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தில்லிக் காவல்துறை இதற்கு உடந்தையாக இருந்து வருகிறது. தில்லிக் காவல்துறை ஆணையர் அவருடைய பதவியிலிருந்து உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்றும், சட்டத்தின்படி நாட்டுக் குடிமக்களுக்குப் பாதுகாப்பு அளிக்க அவர் தவறியமைக்காக அவருக்கு உரிய தண்டனை அளித்திட வேண்டும் என்றும் அகிலஇந்திய விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு கோருகிறது. இந்த ஆணையரின் கட்டுப்பாட்டின்கீழ் தில்லிக் காவல்துறை குடிமக்களை ஒடுக்கும் கருவியாகவும், அக்கிரமங்களின் குகையாகவும் மாறியிருக்கிறது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. (ந.நி.)

;