india

img

பேரழிவு பட்ஜெட்.... சிஐடியு கடும் விமர்சனம்....

புதுதில்லி:
மத்திய பட்ஜெட், நாசகரமானது மட்டுமல்லாமல், மக்களின் துன்ப துயரங்கள் குறித்து கொஞ்சம் கூட கவலைப்படாத, உணர்வற்ற கொடூரமான பட்ஜெட்டுமாகும் என்று சிஐடியு கடுமையாக விமர்சித்துள்ளது. இதுதொடர்பாக சிஐடியு பொதுச் செயலாளர் தபன்சென் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

2021-22 மத்திய பட்ஜெட், வழக்கம்போலவே உழைக்கும் மக்களின் துன்பதுயரங்கள் குறித்து கொஞ்சம் கூட கவலைப்படாத பட்ஜெட் என்பதை மெய்ப்பித்திருக்கிறது. நிதியமைச்சர் ,மக்களின் நுகர்வோர் தேவைகளைப் பெருக்குவதற்கும்,  பொருளாதார மந்தத்தை சரிசெய்திடவும் கவனம் செலுத்தியிருப்பதாக ஆடம்பரமான முறையில் அறிவித்தபோதிலும், அவர் முன்மொழிந்துள்ள பட்ஜெட் செலவினம் கிட்டத்தட்ட சென்ற 2020-21 திருத்திய மதிப்பீட்டில் குறிப்பிடப்பட்ட அதே தொகைதான். உண்மையான ரூபாய் மதிப்பில் கணக்கிட்டோமானால் சென்ற ஆண்டைவிடக் குறைவான தொகையேயாகும்.  

நூறுநாள் வேலை- மதிய உணவுத் திட்டத்திற்கு நிதிக்குறைப்பு
மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்புச் சட்டம், ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து திட்டம், மதிய உணவுத் திட்டம், வேலைகள் மற்றும் திறன் வளர்ச்சித் திட்டம் போன்ற சமூக நலன் தொடர்பான திட்டச் செலவினங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தொகை என்பது உண்மையில் மிகவும் குறைவாகும்.  மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்புச் சட்டத்திற்கு ஒதுக்கியுள்ள தொகை, சென்ற 2020-21இல் உண்மையில் செலவு செய்த தொகையில் 41 சதவீதம் தொகையை வெட்டியிருக்கிறது. 

மதிய உணவுத் திட்டத்திற்கும் சென்ற ஆண்டில் செலவு செய்த தொகையில் 1,400 கோடி ரூபாய் வெட்டி இருக்கிறது. ஒருங்கிணைந்த ஊட்டச் சத்துத் திட்டத்திற்கு ( ICDS), சென்ற ஆண்டு பட்ஜெட் ஒதுக்கீட்டுடன் ஒப்பிடும்போது 30 சதவீதம் குறைக்கப்பட்டிருக்கிறது. வேலைகள் மற்றும் திறன் வளர்ச்சிக்கு, சென்ற ஆண்டு பட்ஜெட் ஒதுக்கீட்டுடன் ஒப்பிடும்போது 35 சதவீதம் குறைத்திருக்கிறது. இதேபோன்று எண்ணற்ற எடுத்துக்காட்டுக்களைக் காண முடியும்.பட்ஜெட்டை முழுமையாக ஆராயும்போது, அது அந்நிய மற்றும் உள்நாட்டுக் கார்ப்பரேட்டுகளும், பெரும் வர்த்தக நிறுவனங்களும் “தாங்கள் புரிந்திடும் வணிகத்தை எளிமையாக செய்வதற்கு” ( ease of doing business ) வகை செய்யும் விதத்தில் அமைந்திருப்பதைக் காண முடிகிறது.  கார்ப்பரேட்களிடம் வசூலிக்காத ரூ.10.57 லட்சம் கோடி வரி நிதியமைச்சர் கோவிட் 19 கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் நிதி வருவாய் நெருக்கடிக்கு உள்ளானதாக புலம்பியுள்ள அதே சமயத்தில், கார்ப்பரேட்டுகள் அரசுக்கு அளிக்க வேண்டிய நேர்முக வரிகள் ( direct taxes ), (அதாவது கார்ப்பரேட் மற்றும் வருமான வரிகள்) கடந்த ஐந்தாண்டுகளில் சுமார் 10.57 லட்சம் கோடி ரூபாய் வசூலிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருப்பது குறித்து, ஒரு வார்த்தை கூட எதுவும் கூறவில்லை.

இத்தொகையில் 2.29 லட்சம் கோடி ரூபாய் வரி நிலுவைத்தொகை குறித்து எவ்விதத் தாவாவும் கிடையாது, எனினும் இத்தொகை வசூலிக்கப்படவில்லை. இதே ஐந்தாண்டு காலத்தில்கார்ப்பரேட் வரி விகிதம் கடுமையாக குறைக்கப் பட்டிருக்கிறது. “வணிகத்தை எளிமையாக செய்வதற்குஉதவிசெய்கிறோம்” என்ற பெயரில் கார்ப்பரேட்டுகள் வரி ஏய்ப்பு செய்வதற்கு ஊக்குவிக்கப்படுவது,  மோடி அரசாங்கத்தின் முத்திரைச் சின்னமாக மாறியிருக்கிறது. இதன் விளைவாக, அரசின் கஜானாவிற்கு வரவேண்டிய தொகைகள் அரசின் ஆதரவுடன் கார்ப்பரேட்டுகளால் சூறையாடப்படுகிறது.

சாராம்சத்தில், ஒட்டுமொத்த பட்ஜெட்டும் கார்ப்பரேட்டுகள் கம்பெனிகள் சட்டத்தின் கீழும், தொழிலாளர் சட்டங்களின் கீழும் அரசுக்கு அளிக்க வேண்டிய கடமைகளைச் செய்வதிலிருந்து அவர்களுக்கு விலக்கு அளிக்கும் விதத்திலேயே அமைந்திருக்கிறது.சிறு குறு, நடுத்தரத் தொழில்களுக்கு (MSMEs) அளித்துள்ள சலுகைகள், பெயரளவிலானவையே ஆகும். இவை நடைமுறைக்கு வராது.

தனியாருக்கு தாரைவார்ப்பு-நாட்டிற்கே பேரழிவு
மேலும் பட்ஜெட்டானது, நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களை மூடிவிட இருப்பதாகக் கூறியுள்ள அதே சமயத்தில், லாபம் கொழிக்கும் பொதுத்துறை நிறுவனங்களை, தனியாரிடம் தாரை வார்த்திடவும் மூர்க்கத்தனமான முறையில் திட்டமிட்டிருக்கிறது. ரயில்வே, துறைமுகம் போன்றபொதுத்துறை நிறுவனங்களின் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நிலம் உட்பட அனைத்தையும் தனியாரிடம் ஒப்படைத்திட கவனம் செலுத்தியிருக்கிறது. இவற்றின் மூலமாக அரசாங்கத்திற்குச் சொந்தமான சுமார் 1.75 லட்சம் கோடி ரூபாயை தனியாரிடம் இந்த ஆண்டில் விற்பனை செய்திட முடிவு செய்திருப்பதுபோல் தோன்றுகிறது.

ரயில்வே, நகர்ப்புற போக்குவரத்து, எரிவாயு குழாய்கள், மின்சாரம் போன்ற துறைகளிலும் பல்வேறு துறைகளை பிரிவுகளை பி-பி-பி மார்க்கமாக தனியாரிடம் தாரை வார்த்திட நடவடிக்கைகள் எடுத்திருக்கிறது.  இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீட்டுக்கு 74 சதவீதம் என்பதும், பொதுத்துறை வங்கிகளைத் தனியாரிடம் தாரை வார்த்திட நடவடிக்கைகள் எடுத்திருப்பதும் நாட்டின் கஜானாவிற்கு மட்டுமல்ல நாட்டிற்கே பேரழிவினை ஏற்படுத்தக்கூடியவைகளாகும்.இதேபோன்று பொது சுகாதாரம் குறித்து பட்ஜெட்டில் மிகவும் பீற்றிக்கொண்டுள்ளபோதிலும், நடைமுறையில் அதன் செயலாக்கம் என்பது பி-பி-பி என்னும் மார்க்கத்தின் வழியே தனியார் சுகாதார வர்த்தகர்களிடம் ஒப்படைக்கும் விதத்திலேயே அமைந்திருக்கிறது.
உருக்கு பாகங்களுக்கு சுங்க வரியைக் குறைத்திருப்பது, உள்நாட்டு உருக்குத் தொழிலைக் கடுமையாகப் பாதிக்கும்.அனைத்துத் துறைகளிலும் கார்ப்பரேட்டுகளுக்கு ஏராளமாக சலுகைகள் கடந்த ஆறு ஆண்டு காலமாகவே அளிக்கப்பட்டு வருகின்றன. எனினும் அவர்களால் வேலை வாய்ப்பை உருவாக்கிட எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. இதே போன்றே இந்த ஆண்டும் பட்ஜெட்டில் அவர்களுக்கு சலுகைகள் வாரி வழங்கப்பட்டிருக்கிறது.  ஒட்டுமொத்தத்தில், அரசாங்கத்தின் கொள்கைகள், நாட்டின் பொருளாதாரத்தை நாசகரப் பாதையில் செலுத்துவது தொடர்கிறது. இந்தப் பின்னணியில் வளர்ச்சி 11 சதவீதம் அதிகரித்திருப்பதாகக் கூறுவது வாய்ச்சவடால்தானே தவிர, சாராம்சத்தில் அநேகமாக எதுவும் கிடையாது.

தொழிலாளரின் உரிமைகளை அழித்த சட்டத்திருத்தம்
தொழிலாளர் நலச் சட்டங்களை மாற்றியமைத்திருப்பதன் மூலம் அனைத்துத் தொழிலாளர்களுக்கும் சமூகப் பாதுகாப்பையும், குறைந்தபட்ச ஊதியத்தையும் உத்தரவாதப்படுத்தி யுள்ளோம் என்று நிதியமைச்சர் கூறியிருப்பதற்கும் உண்மை நிலைக்கும் எவ்விதச் சம்பந்தமும் கிடையாது. இப்போது அரசு மாற்றியமைத்துள்ள தொழிலாளர் சட்டங்கள் தொழிலாளர்களுக்கு இருந்துவந்த, சமூகப் பாதுகாப்பு மற்றும் குறைந்தபட்ச ஊதியம் உட்பட  அனைத்து உரிமைகளையும் அழித்துவிட்டன. அதனால்தான்  ஒட்டுமொத்த தொழிற்சங்க இயக்கமும் இப்புதிய தொழிலாளர் சட்டங்களை நிராகரித்துள்ளன.

விவசாயத்தைப் பொறுத்தவரை, நிதியமைச்சர் கூறியுள்ள குறைந்தபட்ச ஆதார விலை என்பது பயிர்களில் 6 சதவீத அளவிற்கே அளிக்கப்படுகிறது. எஞ்சிய பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யப்படுவதில்லை. மேலும் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்யும்போது எம்.எஸ். சுவாமிநாதன் ஆணையத்தின் பரிந்துரையின்படி சி2 + 50 சதவீதம் பின்பற்றப்படுவதில்லை. இப்போது நிறைவேற்றப்பட்டுள்ள வேளாண் சட்டங்களுக்குப்பின், குறைந்தபட்ச ஆதார விலையைக்கூட ஓர் உரிமையாக விவசாயிகள் கோர முடியாது.

ஒட்டுமொத்தத்தில் இந்த பட்ஜெட், மக்களுக்கு எதையும் அளித்திடவில்லை. நாட்டில் கடுமையாக அதிகரித்துள்ள வேலையில்லாத் திண்டாட்டம் குறித்து பட்ஜெட் வாயே திறக்கவில்லை. வருமானம் மற்றும் உணவு இன்றி தவிக்கும் மக்களுக்கு நிவாரணம் அளித்திட எதுவும் இந்த பட்ஜெட்டில் கூறப்படவில்லை. இந்த அரசாங்கம் இதுவரை கடைப்பிடித்துவந்த மக்கள்விரோத நாசகரக் கொள்கைகளை மேலும் கொடூரமான முறையில் பின்பற்றிச் செல்வதையே இந்த பட்ஜெட்டும் அறிவித்திருக்கிறது. எனவே  உழைக்கும் மக்கள் இதனை ஒட்டுமொத்தமாகக் கண்டித்திட வேண்டும். (ந.நி.)

;