india

img

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை ஏழைகளுக்காகவே உருவாக்கப்பட்டதாம்... மாநிலங்களவையில் நிதியமைச்சர் ‘ஆச்சரிய’ பேச்சு....

புதுதில்லி:
ஏழைகளுக்காகவே டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறை நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மாநிலங்களவையில் தெரிவித்தார். 

கொரோனா நெருக்கடி மற்றும் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்காக மத்திய பட்ஜெட்டில் உருப்படியான எந்த திட்டமும் இல்லை என்று பொதுமக்கள், அரசியல் கட்சியினர், பொருளாதார வல்லுநர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 100 நாள் வேலைக்கான திட்ட நிதியையும் குறைத்துள்ளது பாஜக அரசு. கார்ப்பரேட்டுகளுக்கான பட்ஜெட்டாகவே இது உள்ளது என்றும் சாடியுள்ளனர். ஆனால் மக்களின் துயரங்களைப்பற்றி கவலைப்படாமல் மத்திய பாஜக அரசின் அமைச்சர்கள் பொய்களையே கூறிவருவதாக கண்டித்துள்ளனர். 

இந்நிலையில் மத்திய பட்ஜெட் மீதான விவாதத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மாநிலங்களவையில்  பேசுகையில், ‘இந்த வருடம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் சுயசார்பு இந்தியாவுக்கான பட்ஜெட் மற்றும் சிறப்பான பட்ஜெட் ஆகும்.ஏழைகள் நலனுக்காக மத்திய அரசு அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.முதலாளிகளுக்கு மட்டுமே மத்திய அரசு திட்டங்கள் தீட்டுவதாக எதிர்க்கட்சிகள் தவறான தகவல்களை பரப்பி வருகின்றன. ஏழைகள், பட்டியலினத்த
வர்கள், பழங்குடியினர் நலனை கருத்தில் கொண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உள்கட்டமைப்பை உருவாக்குதல், சீர்திருத்தத்தை தொடருதல் உள்ளிட்டவை பட்ஜெட்டின் சிறப்பு அம்சங்கள்.பாதுகாப்பு துறைக்கான நிதி ஒதுக்கீட்டை குறைக்கவில்லை. 

ஏழைகளுக்காகவே டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறை நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.ஏழைகள், சிறுவணிகர்கள் உள்ளிட்டோர் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை பயன்படுத்துகின்றனர்.கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2020 வரை 3.6 லட்சம் கோடி டிஜிட்டல் பணப்பரிவத்தனைகள் நடைபெற்றுஉள்ளது.முத்ரா திட்டம் மூலம் சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோருக்கு ரூ.27 ஆயிரம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.100 நாள் வேலை திட்டத்தில் முரண்பாடுகள் களையப்பட்டு நிதி ஒதுக்கீடுகள் முறையாக பயன்படுத்தப்படுகிறது. இதுவரை இல்லாத அளவு 100 நாள் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு ரூ. 90,460 கோடி பயன்படுத்தப்பட்டுஉள்ளது. பல்வேறு துறைகளில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நிதி ஒதுக்கீடுகள் அதிகம். பணக்காரர்களுக்கு ஆதரவான அரசு என்றால் ஊரக சாலைகளுக்கு பணம்செலவிடப்படுமா? பாதுகாப்புத்துறையின் ஒவ்வொரு தேவைக்கும் பட்ஜெட்டில் கூடுதல் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேற்கு வங்க அரசு விவசாயிகளின் பட்டியலை தராததால் உதவித் தொகை சென்றடையாமல் உள்ளது’ என்றார்.

;