india

img

டீசலும் 100ஐத் தொடுகிறது.... கொரோனாவில் தப்பிப் பிழைத்தாலும் மக்களை மோடி அரசு தாக்குகிறது... யெச்சூரி.....

புதுதில்லி:
இந்திய வரலாற்றில் முதல்முறையாக டீசல் விலை 100 ரூபாயைத் தொட இருக்கிறது. நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு தனது ஏழு ஆண்டு கால “சாதனைகளை” தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கும் வேளையில் பெட்ரோல் விலை மட்டுமல்ல, டீசல் விலையும் சதம் அடிக்கும் அபாயத்தை எட்டியுள்ளது. 

கடந்த 37 நாட்களில் 21 முறை இடைவிடாமல் பெட்ரோல் - டீசல் விலைகளை உயர்த்தி “சாதனை” படைத்துள்ளது மோடி அரசு. புதனன்று மேலும் 25 பைசா டீசல் விலை உயர்த்தப்பட்டதன் விளைவாக 100 ஐ நெருங்கியிருக்கிறது. நாட்டில் அதிகபட்சமாக ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்காநகரில் டீசல் விலை லிட்டருக்கு ரூ.99.50 ஆக அதிகரித்துள்ளது; பெட்ரோல் விலை இங்கு ரூ.106.64 என்ற அளவிற்கு அதிகரித்துள்ளது. 5 மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான இரண்டு நாட்களுக்குப் பிறகு, மே 4 அன்று பெட்ரோல் - டீசல் விலைகள் உயர்த்தி அறிவிக்கப்பட்டன. படிப்படியாக பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5.16மற்றும் டீசல் விலை ரூ.5.74 அளவிற்கு அதிகரித்து நாடு முழுவதும் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. புதனன்று தில்லியில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.95.56; டீசல் லிட்டருக்கு ரூ.86.47; மும்பையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.101.76; டீசல் லிட்டருக்கு ரூ.93.85 என்று விற்கப்பட்டது. மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஆந்திரப்பிரதேசம், மத்தியப்பிர தேசம், கர்நாடகம் உள்பட நாடு முழுவதும் உள்ள மாநகரங்களில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.100ஐ எட்டிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.97.19; மதுரையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.97.51 என தமிழகத்திலும் 100ஐத் தொட்டுவிடும் உயரத்திற்கு வந்துவிட்டது. ஒட்டுமொத்தமாக பெட்ரோல் - டீசல் விலைகளை மிகக் கடுமையாக உயர்த்தியதன் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் மீதும் மிகக் கடுமையான தாக்குதலை கட்டவிழ்த்து விட்டுள்ளது ஒன்றிய பாஜக அரசு. 

சீத்தாராம் யெச்சூரி விமர்சனம்
இதுதொடர்பாக கடும் விமர்சனத்தை வெளியிட்டுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, “பெருந்தொற்றில் சிக்கி இந்த நாட்டில் மக்கள் உயிர் தப்பி வாழ முயன்றாலும் கூட மோடி அரசு இந்த மக்களை வாழ்வதற்கு அனுமதிக்காதுபோல் தெரிகிறது. இடைவிடாமல் 21 முறை பெட்ரோல் - டீசல் விலைகளை உயர்த்தியுள்ளது பாஜக அரசு. தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கத் தேர்தல்களில் மிகப்பெரும் தோல்வியை தழுவிய பிறகு இந்தக் கொடூரத்தை அரங்கேற்றிவருகிறது. பெட்ரோலிய பொருட்கள் மீதான மிக மிக அதிகபட்ச வரிகளை உடனடியாக ஒன்றிய அரசு திரும்பப்பெற வேண்டும். மக்களின் வாழ்வாதாரங்கள் மீது நடத்துகிற இத்தகைய கிரிமினல்தனமான தாக்குதல்களை ஒன்றிய அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

ராகுல் காந்தி
“மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) மிகப்பெரும் வீழ்ச்சி; வேலையின்மை மிகப்பெரும் வளர்ச்சி; எரிபொருள் விலைகள் ராக்கெட் வேகம்... இந்தியாவைக் கொள்ளையடிக்கும் பாஜக இன்னும்  எத்தனை வழிகளில்பயணிக்கப்போகிறதோ என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சாடியுள்ளார்.

;