india

img

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எதிர்ப்பை மீறி பொது காப்பீடு தனியார்மய சட்டமுன்வடிவு நிறைவேற்றம்....

புதுதில்லி:
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எதிர்ப்புகளை மீறி மக்களவையில் பொதுத்துறையில் இயங்கிடும் பொது காப்பீட்டு நிறுவனங்கள் நான்கையும் தனியாருக்குத் தாரை வார்க்க வகைசெய்யும் ஜெனரல் இன்சூரன்ஸ் வர்த்தகம் (தேசியமயம்) திருத்தச் சட்டமுன்வடிவை நிறைவேற்றியுள்ளது மோடி அரசு. 

அதேபோல் மாநிலங்களவையில் உள்நாட்டு நதிநீர்ப் போக்குவரத்து சட்டமுன்வடிவையும் நிறைவேற்றியுள்ளது. இருஅவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எதிர்ப்பு முழக்கங்கள் கடுமையாக இருந்தபோதிலும், ஒன்றிய அரசாங்கம் சட்டமுன்வடிவுகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றுவதிலேயே குறியாக இருக்கிறது.

மக்களவை
மக்களவை காலை 11 மணிக்குக் கூடியதும் சபாநாயகர், ஆகஸ்ட் 1அன்று ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் பெற்றுள்ள வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்து இரு ஒலிம்பிக்சில் பதக்கங் களைப் பெற்றிருப்பதாகக் குறிப்பிட்டார்.பின்னர் கேள்வி நேரம் தொடங்கியது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபாநாயகரின் இருக்கைக்கு அருகில் வந்து முழக்கங்களை எழுப்பிக்கொண்டிருந்தபோதிலும் கேள்வி நேரத்தை பிடிவாதமான முறையில் நடத்தினார்.கேள்வி நேரம் முடிந்தபின், நடுவர்மன்றங்கள் சீர்திருத்தங்கள் (பகுப்பாய்வு செய்தல் மற்றும் பணிகளின் நிலைமைகள்) சட்டமுன்வடிவு,2021 விலக்கிக் கொள்ளப்பட்டு, புதிதாக, நடுவர் மன்றங்கள் சீர்திருத்தங்கள் சட்டமுன்வடிவு,2021 அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

பி.ஆர். நடராஜனின் ஒத்திவைப்பு தீர்மானம்
மதியம் 2 மணிக்கு அவை தொடங்கிய பின்னர், பொது காப்பீடு வர்த்தகம் (தேசிய மயம்) திருத்தச்சட்டமுன்வடிவு, 2021 விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்தச்சட்டமுன்வடிவு தனியார்மயத்திற்கு வசதி செய்து கொடுத்திருக்கிறது எனக் கூறினார்கள். இதன்மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் ஓர் ஒத்திவைப்புத்தீர்மானம் கொண்டு வந்தார். அதில் அவர் இது நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் கேடு விளைவிக்கும் என்றும்குறிப்பிட்டிருந்தார். எனினும் அது சபா நாயகரால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.காங்கிரஸ் உறுப்பினர் அதிர் ரஞ்சன் சௌத்ரி, கடந்த பல ஆண்டுகளாக கட்டி எழுப்பப்பட்ட இந்த நிறுவனங்களை இந்த அரசாங்கம் விற்றுக்கொண்டிருக்கிறது என்று குற்றம்சாட்டினார்.எனினும் குரல்வாக்கெடுப்பில் இது நிறைவேற்றப்பட்டது. பின்னர் மக்களவை புதன்கிழமை காலை 11 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

மாநிலங்களவை
மாநிலங்களவை கூடியதும் அவைத்தலைவர் வெங்கய்யா நாயுடு, ஒலிம்பிக்கில் வெற்றி பெற்ற பி.வி.சிந்துவுக்கு வாழ்த்துக்களைத்தெரிவித்தார். கடின உழைப்புக்கு தனிப்பட்ட முறையில் அவர் சாட்சியாக நிற்கிறார் என்று புகழ்மாலை சூட்டினார்.பின்னர் அவையை நடத்தத்தொடங்கி யவுடன் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பெகாசஸ் உளவு பார்க்கும் விவகாரம், வேளாண்சட்டங்கள் ரத்து தொடர்பாக முழக்கங்கள் இட்டதால் அவையை 12 மணி வரை ஒத்தி வைத்தார்.பின்னர் அவை 12 மணிக்குக் கேள்வி நேரம் தொடங்கியது. எதிர்க்கட்சிஉறுப்பினர்களின் எதிர்ப்பு முழக்கங்களுக்கு இடையே அவைத் துணைத்தலைவர் 12.30மணிவரை கேள்வி நேரத்தை நடத்தினார். பின்னர் மதியம் 2 மணி வரை ஒத்தி வைத்தார்.  அரசமைப்புச்சட்டம் (பட்டியல் பழங்குடியினர்) உத்தரவு (திருத்தச் சட்டமுன் வடிவு, 2021 அறிமுகப்படுத்தப்பட்டது.உள்நாட்டு நதிநீர்ப்போக்குவரத்து சட்டமுன் வடிவு, 2021(The Inland Vessels Bill, 2021) பரிசீலனைக்காகவும், நிறைவேற்றுவதற்காகவும் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் அவையில் அமளிக்கிடையே  நிறைவேற்றப்பட்டது.பின்னர் அவை புதன் காலை 11 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. (ந.நி.) 

;