india

img

தில்லி குடியரசு தின சதி-வன்முறைகள்.. நீதி விசாரணை கோரும் விவசாய அமைப்புகள்....

புதுதில்லி:
குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் அணிவகுப்பின் போது நடந்த சம்பவங்கள் அதன் பின்னணியில் உள்ள சதி மற்றும் விவசாயிகள் மீது பதிவு செய்யப்பட்ட போலி வழக்குகள் குறித்து உயர் மட்ட நீதி விசாரணை நடத்த விவசாயிகள் அமைப்புகள் கோரியுள்ளன.

இதுகுறித்து விவசாயிகளின் போராட்டத்திற்கு தலைமை தாங்கும் கூட்டமைப்பான கிசான் மோர்ச்சா சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய அணிவகுப்பின் போது நடந்த சம்பவங்கள், அதன் பின்னணியில் உள்ள சதி மற்றும் விவசாயிகள் மீது பதிவு செய்யப்பட்ட போலி வழக்குகள் குறித்து உச்ச நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்றத்தில் இருந்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.தில்லி அணிவகுப்பில் பங்கேற்ற 112 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். பதிவு செய்யப்பட்ட 44 வழக்குகளில் 14 வழக்குகளில் இவர்கள்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கிசான் மோர்ச்சா சட்ட உதவி குழு சனியன்று (பிப்.13) சிறைகளுக்குச் சென்ற விவசாயிகளை சந்தித்தது. அப்போது அவர்களிடம் சட்ட உதவிக்குழுவினர் விசாரணை நடத்தினர்.

குடியரசு தின நிகழ்வுகளுக்குப் பிறகு பதினாறு விவசாயிகளை இன்னும் காணவில்லை. ஹரியானாவில் ஒன்பது விவசாயிகளும், ராஜஸ்தானில் ஒருவரும், பஞ்சாபில் ஆறு விவசாயிகளும் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை. கைது செய்யப்பட்ட விவசாயிகள் அனைவரையும் ஒரேசிறைக்கு மாற்ற வேண்டும். இந்த கோரிக்கையுடன் கிசான் மோர்ச்சா தலைவர்கள் தில்லி அமைச்சர் ராகவ் சத்தலாவை சந்தித்தனர்.கைது செய்யப்பட்டவர்களுக்கு அனைத்து சட்ட உதவிகளும் வழங்கப்படும். சிறை கேண்டீனில் பயன்படுத்த ஒவ்வொரு விவசாயியின் கணக்கிலும் இரண்டாயிரம் ரூபாய் டெபாசிட் செய்யப்படும். தில்லி காவல்துறையினரிடமிருந்து நோட்டீஸ் பெறும் விவசாயிகள் நேரில் ஆஜராகக்கூடாது என்றும் சட்ட உதவி குழுவை தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் தலைவர்கள் தெரிவித்தனர்.

மேலும் 2 விவசாயிகள் பலி
தில்லி எல்லையான சிங்குவில் 70 நாட்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஹன்சா சிஜு மற்றும் நைப் சிங் ஆகியோர் உயிரிழந்தனர். பஞ்சாபில் உள்ள தாராவைச் சேர்ந்த நாயப் சிங்,வெள்ளியன்று போராட்டத்தில் இருந்து வீடு திரும்பியிருந்தார். சனியன்று அவர் இறந்தார். 72 வயதான ஹன்சா சிஜு போராட்ட மையத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்தார், இவர் பஞ்சாபின் தரம் கோட்டைச் சேர்ந்தவர்.வேலைநிறுத்தம் தொடங்கியதில் இருந்து இதுவரை 233 விவசாயிகள் இறந்துள்ளனர். இவர்களில் 13 பேர் தற்கொலை  செய்துகொண்டவர்களாவர்.புல்வாமாவில் உயிரிழந்த படையினரின் தியாகத்தின் ஆண்டுவிழாவான ஞாயிறன்று, விவசாயிகள் நாடு தழுவிய டார்ச்லைட் ஊர்வலங்கள் மற்றும் மெழுகுவர்த்தி ஏந்தி அணிவகுப்புகளை நடத்தினார்கள். உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நாடு தழுவிய அளவில் நடைபெற்றது.
 

;