india

img

24 மணிநேரமும் எரியும் தில்லி சுடுகாடுகள்... உடல்களை எரிக்க 20 மணிநேரம் உறவினர்கள் காத்திருப்பு.....

புதுதில்லி:
கொரோனா தொற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் தில்லி சுடுகாடுகள் 24 மணி நேரமும் எரிந்து கொண்டிருக்கின்றன. இடைவெளி இல்லாமல் பிணங்கள் குவிவதால் அவற்றை எரிக்க முடியாமல் மயான ஊழியர்கள் திணறி வருகின்றனர்.

தகன மேடைகள் 24 மணி நேரமும் எரிந்து கொண்டே இருப்பதால், கொரோனாவில் உயிரிழந்தவர்களை எரிப்பதற்கு, அவர்களின் உறவினர்கள் சுமார் 20 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.தில்லியில் மொத்தம் 28-க்கும் மேற்பட்ட தகன மேடைகள் உள்ளன. ஆனால் அதிகரித்துவரும் உடல்களை எரிக்க இந்த தகன மேடைகள் போதுமானதாக இல்லை. இதனால் ஏற்கெனவே உள்ள தகன மேடைக்கு அருகிலேயே கொஞ்சம் இடம் விட்டு, அடுத்தடுத்த உடல்களை, அங்குள்ள மயான ஊழியர்கள் எரித்து வருகின்றனர்.

கடந்த சனிக்கிழமையன்று 348 பேரும், ஞாயிற்றுக்கிழமையன்று 357 பேரும், திங்களன்று 380 பேரும் உயிரிழந்தனர். நாளொன்றுக்கு சராசரியாக 300-க்கும் அதிகமானவர்கள் தில்லியில் உயிரிழந்து கொண்டிருக்கின்றனர்.
சாராய் காலே கான் என்ற இடத்திலுள்ள சுடுகாட்டில் சராசரியாக 22 உடல்கள் எரிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது நாளொன்றுக்கு 60 முதல் 70 உடல்கள் எரிக்கப்படுகின்றன. ஒரு பெரிய தகன மேடையில் மட்டும் ஒரே நேரத்தில் 50 உடல்கள் எரியூட்டப்படுகின்றன. 

24 மணி நேரமும் உடல்கள் வந்து கொண்டே இருப்பதால் சில தகன மேடைகளில் டோக்கன் முறை கடைப்பிடிக்கப்படுகிறது. இதனால் மருத்துவமனைகளில் இருந்து உடல்களை கொண்டு வரும் ஆம்புலன்ஸ்கள், ஆட்டோக்கள், கார்கள், அமரர் ஊர்தி உள்ளிட்ட வாகனங்கள் மயானங்களின் முன்பு நீண்ட வரிசையில் காத்துக் கிடக்கின்றன. சில இடங்களில் இந்த வாகனங்களை நிறுத்துவதற்கு கூட இடமில்லை. இறந்தவர் ஏழையானாலும் சரி, பணக்காரர் ஆனாலும் சரி ஒருவரின் உடலை தகனம் செய்ய சுமார் 20 மணி நேரம் வரை ஆவதாக கூறப்படுகிறது. ‘தில்லியில் இதுபோன்ற மோசமான சூழ்நிலையை நான் என் வாழ்க்கையில் இதற்கு முன்பு பார்த்ததில்லை. உயிரிழந்த தங்களின் அன்புக்குரியவர்களுக்கு இறுதி மரியாதை செய்ய முடியாமல் மக்கள் திணறி வருகின்றனர். கிட்டத்தட்ட அனைத்து தில்லி தகன மேடைகளும் இறந்த உடல்களால் நிரம்பி வழிகின்றன’ என்று இறுதிச் சடங்குகளை மேற்கொள்ளும் மயான ஊழியர்களே கண்ணீர் விடுகின்றனர்.

இந்நிலையில், தில்லியில் உள்ள முக்கிய பூங்கா ஒன்றை சுடுகாடாக மாற்றி அங்கு உடல்களை எரிப்பதற்கான புதிய ஏற்பாடுகளில் மாநில நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. தில்லியின் வடக்கு மாநகராட்சி நிர்வாகமானது, மங்கோல்புரி பகுதியில், ஐந்து ஏக்கரில் புதிதாக இந்துக்களுக்கான தகன மேடைகளை அமைத்து வருகிறது. இதேபோல 3 ஏக்கரில் முஸ்லிம்களுக்கும், 2 ஏக்கரில் கிறிஸ்தவர்களுக்கான அடக்கஸ்தலங்களையும் அமைத்து வருகிறது.

;