india

img

கொரோனா தடுப்பூசி போடும் பணி நாடு முழுவதும் துவங்கியது....

புதுதில்லி:
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை பிரதமர் மோடி ஜனவரி 16 சனிக்கிழமையன்று காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.ஐதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆய்வுகவுன்சிலுடன் இணைந்து ‘கோவேக்சின்’ தடுப்பூசியை உருவாக்கியது. இங்கிலாந் தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், ஆஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனமும் இணைந்து உருவாக்கிய தடுப்பூசியை புனேயைச் சேர்ந்த சீரம் நிறுவனம் ‘கோவிஷீல்டு’ என்ற பெயரில் தயாரித்துள்ளது. 

நாடுமுழுவதும் 3 ஆயிரம் மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. முதற்கட்டமாக 3 கோடி முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசிசெலுத்தப்படுகிறது. இந்த திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். 

மதுரையில் துவங்கியது
தமிழகத்தில் மதுரை அரசு இராஜாஜிமருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்வில் தடுப்பூசி போடும் பணியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். அரசு மருத்துவமனை ஒப்பந்த தூய்மைக் காவலர்கள் முத்துமாரி, கலைச்செல்வி, இந்திய மருத்துவ சங்கதமிழகத் தலைவர் மருத்துவர் செந்தில்,அகில இந்தியத் தலைவர் ஜெ.ஏ.ஜெயலால் மருத்துவமனை முதன்மையர் சங்குமணி, ஐஎம்ஏ மாநிலத்தலைவர் இராமகிருஷ்ணன் மற்றும் செவிலியர்கள். 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள்தடுப்பு மருந்தை போட்டுக்கொண்டனர்.தமிழகத்தில் சனிக்கிழமை காலைநிலவரப்படி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள 6 லட்சத்து 83 ஆயிரத்து 929 பேர் பதிவு செய்துள்ளனர். இவர்களில் 4 லட்சத்து 96 ஆயிரத்து 869 பேர் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள். 1,07,240 பேர் காவல்துறை மற்றும் உள்துறை பணியாளர்கள். 99,820 பேர் உள்ளாட்சித்துறை ஊழியர்கள்.

தமிழகத்திற்கு மத்திய அரசு 5 லட்சத்து 56ஆயிரத்து 500  தடுப்பூசி மருந்துப்புட்டிகளை கொடுத்துள்ளது. இதில் 5,36,500 மருந்துப்புட்டிகள் கோவிஷீல்டு ஆகும். 20 ஆயிரம் கோவாக்சின் மருந்துப்புட்டிகள் ஆகும்.ஒவ்வொருபயனாளிக்கும் இரண்டு கட்டமாக தடுப்பூசி போடவேண்டியுள்ளதால் 2 லட்சத்து 28 ஆயிரத்து 250 பேர் முதற்கட்டமாக பயனடைவார்கள். முதற்கட்டமாக கோவாக்சின் மருந்தை செலுத்திக்கொண்டவர்கள் இரண்டாவது முறையாக அதே மருந்தைத்தான் போட்டுக்கொள்ள வேண்டும். இதே நடைமுறை கோவிஷீல்டு மருந்துக்கும் பொருந்தும்.நம்மிடையே பேசிய சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், “ தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு முன் பதிவு அவசியம். இணையதளத்தில் பதிவுசெய்யலாம். முதற்கட்டமாக முன்களப்பணியாளர்கள் தேர்வு செய்யும் வகையில் இணையதளம் வடிவமைக்கப் பட்டுள்ளது. அறிவியல் பூர்வமாக தடுப்பூசியை போட்டுக்கொள்வது நல்லது. இது நமக்கும் பிறருக்கும் பாதுகாப்பை அளிக்கும் என்றார்.

தடுப்பூசியை செலுத்திக்கொண்ட இந்திய மருத்துவர் சங்கத்தின் அகில இந்தியத் தலைவர் ஜெ.ஏ.ஜெயலால், “ தடுப்பூசியை போட்டுக்கொண்டதில் திருப்தி. மகிழ்ச்சியாகவும் உள்ளது. அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டுமென்பதே எனது விருப்பம் என்றார். இதனுடைய வீரியம் எத்தகையது எனக் கேட்டதற்கு பதிலளித்த அவர், “ எந்த ஒரு தடுப்பு மருந்தும் 65 சதவீதம் முதல் 70 சதவீத வெற்றியை அளிக்கும் இதன் மூலம் தொற்றுப் பரவலை முற்றாக தடுக்க முடியும்” என்றார்.செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர்எடப்பாடி பழனிசாமி, “ கொரோனா தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு இன்றைக்கு அது பயன்பாட்டிற்கு வந்துள்ளது. வரலாற்றில் முக்கியமான நாள் இது (ஜனவரி 16). விரைவில் நான்எனது குடும்பத்தினர் விரைவில் போட்டுக்கொள்வோம். தமிழக மக்கள்அனைவரும் தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டுமென்றார். இந்த தடுப்பூசி 42- ஆவது நாளிலிருந்து பயனாளிகளிடையே நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும், தடுப்பூசி போடுவதற்கு 266 இடங்களில் ஒத்திகை நடத்தப்பட்டு, 166 இடங்களில் தடுப்பூசி போடப்படுகிறது.

போராட்ட வழக்கு வாபஸ்?
ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் பங்கேற்றவர்களின் வழக்குகள் திரும்பப்பெறப்படுமா என ஊடக செய்தியாளர் ஒருவர் கேள்வியெழுப்பியதால், “டென்ஷனான” முதல்வர் நல்ல நாளில்என்ன கேள்வியெழுப்புகிறீர்கள் என்றார்.

எம்ஆர்பி செவிலியர்கள் நிரந்தரம்
கொரோனா முன்களப் பணியில் ஈடுபட்டுள்ள எம்ஆர்பி செவிலியர் 12 ஆயிரம் பேர் எப்போது நிரந்தரப்படுத் தப்படுவார்கள் என நமது செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முதல்வர், “அவர்கள் படிப்படியாக நிரந்தரம் செய்யப்படுவார்கள்” என்றார்.இந்த நிகழ்வில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், தேனி மக்களவை உறுப்பினர் ப.ரவீந்திரநாத்குமார். மருத்துவமனை முதன்மையர் சங்குமணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

படக்குறிப்பு : மதுரையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொரோனா தடுப்பூசி போடும் பணியை துவக்கி வைத்தார்.

;