india

img

வேளாண் சட்டங்களை முழுமையாக ரத்து செய்க.... அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் பிரதமரிடம் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்....

புதுதில்லி:
விவசாயிகளுக்கு விரோதமான  3 புதிய வேளாண் சட்டங்களையும் முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று  அனைத்துக்கட்சி கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் பிரதமர் மோடியிடம் வலியுறுத்தினர். 

விவசாயிகளுக்கு விரோதமாக மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தில்லி எல்லையில் பல்வேறு மாநில விவசாயிகள் 60 நாட்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர். யாருடனும் ஆலோசிக்காமல் வேளாண் சட்டங்களை நிறைவேற்றிய மத்திய பாஜக அரசைக் கண்டித்தும் இச்சட்டங்களை உடனடியாக ரத்து செய்யக் கோரியும் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் ஜனவரி 29 அன்று துவங்கிய நாடாளுமன்றக் கூட்டத்தொடரில்  ஜனாதிபதி உரையை காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, திமுக உள்ளிட்ட 20 எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாக புறக்கணித்தன. ஆனால் ஜனாதிபதி உரையில், வேளாண் சட்டங்களை ரத்து செய்ய முடியாது என்று மோடி அரசு ஆணவமாக தெரிவித்தது. இதைத்தொடர்ந்து விவசாயிகளின் போராட்டம் மேலும் பல பகுதிகளில் பரவி மாபெரும் போராட்டமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பட்ஜெட் கூட்டத் தொடரை சுமூகமாக நடத்த எதிர்க்கட்சிகளிடம் ஒத்துழைப்பு கோரி, பிரதமர் மோடி தலைமையிலான அனைத்துக்கட்சிளின்  கூட்டம் சனிக்கிழமையன்று நடைபெற்றது. இதில், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், பிரகலாத் ஜோஷி மற்றும் காங்கிரஸ், உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். வீடியோ கான்பரன்சிங் மூலம் நடந்த இக்கூட்டத்தில், 3 வேளாண் சட்டங்களையும் முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் வலியுறுத்தினர். 

காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவைக்குழு தலைவர் குலாம் நபி ஆசாத் பேசுகையில், ‘‘விவசாயிகள் போராட்டம் தொடர்பாக காங்கிரஸ் ஏற்கனவே அரசை எச்சரித்து வந்தது. தற்போது அப்போராட்டத்தின் விளைவுகளையும் அரசுதான் சமாளிக்க வேண்டும். இதற்கு ஒரே தீர்வு 3 வேளாண் சட்டங்களையும் நிரந்தரமாக ரத்து செய்வது மட்டுமே என்றார்.தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பேசுகையில், ‘வேளாண் சட்டங்கள் குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் மண்டி முறையை பலவீனப்படுத்தி விடும். குறைந்தபட்ச ஆதரவு விலை உறுதிப்படுத்தப்பட வேண்டும், மேலும், அதை வலுப்படுத்த வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் சட்டத் திருத்தம், கார்ப்பரேட் நிறுவனங்கள் விளை பொருட்களை பதுக்கி வைத்து அதிக லாபத்தில் நுகர்வோருக்கு விற்க வழிவகுக்கும். எனவே, புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்,’’ என்று கூறினார். 

ஆம் ஆத்மி கட்சியின் பகவந்த் மன் கூறுகையில், விவசாயிகள் போராட்டத்தில் சில அந்நிய சக்திகள் நுழைந்து, வன்முறையை தூண்டி விட்டுள்ளன. ஆனால், உண்மையான விவசாயிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் இரு அவைகளிலும் வேளாண் சட்டங்கள் குறித்து மீண்டும் அரசு விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர். 

பேச்சுவார்த்தைக்கு அரசு தயார்: பிரதமர் கூறுகிறார் இதற்கு பிரதமர் மோடி பதிலளிக்கையில், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் அனைத்து விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கஅரசு தயாராக உள்ளது.விவசாயிகள் பிரச்சனையில் அரசு திறந்த மனதுடனே செயல்படுகிறது. இப்பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க அரசு தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளும். வேளாண் சட்டங்களை 18 மாதத்திற்கு நிறுத்தி வைத்து, அதிலுள்ள பிரச்சனைகளை பேசித் தீர்க்கலாம் என 11-வது கட்ட பேச்சுவார்த்தையில் மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் விவசாய சங்க பிரதிநிதிகளிடம் பரிந்துரைத்துள்ளார். அதே நிலைப்பாட்டில் அரசு இப்போதும் உள்ளது. விவசாயிகள் எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தைக்காக அமைச்சர் தோமருக்கு ஒரே ஒரு தொலைபேசி அழைப்பு செய்தால் போதும். பேச்சுவார்த்தைக்கு அரசு தயாராக உள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை சுமூகமாக நடந்த பெரிய கட்சிகள் ஒத்துழைப்பு தர வேண்டும். சிறிய கட்சிகளுக்கு அதிக நேரம் பேச வாய்ப்பு வழங்கப்படும். சிறிய கட்சிகளின் எம்பிக்கள் தங்கள் கருத்துக்களை முழுமையாக எடுத்து வைக்க பாஜக உள்ளிட்ட பெரிய கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். குடியரசு தினத்தன்று நடந்த வன்முறை விவகாரத்தை பொறுத்தவரையில், சட்டம் அதன் கடமையை செய்யும் என்று கூறினார்.அமெரிக்காவில் காந்தி சிலை அவமதிக்கப்பட்ட தற்கு கடும் கண்டனம் தெரிவித்த மோடி, இதுபோன்ற வெறுப்பு சூழல்கள் உலகில் யாரும் வரவேற்கமாட்டார்கள் என்றார்.
 

;