india

img

உச்சநீதிமன்றம் அமைத்த குழு : மத்திய அரசின் சூழ்ச்சி.... விவசாயிகள் சங்கத் தலைவர்கள் நிராகரிப்பு....

புதுதில்லி:
உச்சநீதிமன்றம் அமைத்த வல்லுநர் குழுஎன்பது கார்ப்பரேட்டுகளுக்குத் துதி பாடுபவர்களே, அரசின் வேளாண் சட்டங்களுக்கு வக்காலத்து வாங்குபவர்களே. இக்குழு அரசின் சூழ்ச்சித் திட்டமே எனக்கூறி போராடும் விவசாயிகள் சங்கத்தலைவர்கள் வல்லுநர் குழுவை நிராகரித்தனர்.வேளாண் சட்டங்கள் குறித்து ஆய்வு செய்துஅறிக்கை தாக்கல் செய்திடுமாறும், அதன்அறிக்கையின் மீது உத்தரவு பிறப்பிக்கும் வரை வேளாண் சட்டங்களை நிறுத்தி வைப்பதாகவும் செவ்வாய்க்கிழமையன்று உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கூறியதுடன் ஒரு வல்லுநர் குழுவை நியமித்தும் உத்தரவு பிறப்பித்தார்.  

ஆயினும் இந்த வல்லுநர் குழுவே அரசின்சூழ்ச்சித் திட்டம்தான் என்றும், குழுவில் இடம்பெற்றிருக்கும் நால்வரும் அரசின் சீர்திருத்தங்களுக்கு வக்காலத்து வாங்குபவர்களே என்றும்,இதனை ஏற்க முடியாது என்றும் போராடும் விவசாய சங்கத் தலைவர்கள் தெரிவித்தனர். “வேளாண் சட்டங்களை அரசு ரத்து செய்யும் வரை எங்கள் போராட்டம் தொடரும்” என்றும், அமைதியான முறையில் குடியரசு தினத்தன்று “டிராக்டர்கள் அணிவகுப்பு” நடை பெறும் என்றும்அவர்கள் தெரிவித்தனர்.“இந்தக்குழு அரசின் சூழ்ச்சித்திட்டம்என்று நாங்கள் புரிந்து கொண்டிருக்கிறோம். எங்கள் கவனத்தைத் திசைதிருப்பவும்,அரசாங்கத்தின் மீதான எங்கள் நிர்ப்பந்தத்தைக் குறைத்திடவுமே இது ஏற்படுத்தப்பட்டிருக்கிறது,” என்று பல்பீர் சிங் ரஜேவால் கூறினார்.“இந்தக் குழுவில் இடம்பெற்றிருக்கும் அனைவருமே அரசுக்கு ஆதரவானவர்களே. அரசின் இந்தச் சட்டங்கள் விவசாயிகளின் நலன்களுக்கானவை என்று ஆரம்பம் முதலே வக்காலத்து வாங்கி வருபவர்கள்,”  என்று அவர் மேலும்கூறினார்.

இந்தக்குழுவில் இடம்பெற்றுள்ள பிரமோத்குமார் ஜோஷி என்னும் உணவு மற்றும் வேளாண்கொள்கை வல்லுநர், “விவசாயிகள் இச்சட்டங்களை ரத்து செய்யவேண்டும் என்று கோருவதுவிநோதமாக இருக்கிறது” என்று ஏற்கனவே கருத்து கூறியவர்.இந்தக்குழுவில் இடம்பெற்றிருக்கும் மற்றொரு வேளாண் வல்லுநரான அசோக்குலாதி, மத்திய அரசின் புதிய வேளாண்சட்டங்களை வரவேற்று, “இது சரியான திசைவழியில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரியதுணிச்சலான நடவடிக்கைகள்” என்று கூறியவர்.இதேபோன்ற மற்ற இருவரும் அரசின் வேளாண் சட்டங்களுக்கு வக்காலத்து வாங்கி கருத்துக்களைக் கூறியிருக்கிறார்கள்.“இவ்வாறு குழு அமைப்பதை கொள்கைரீதியாகவே நாங்கள் எதிர்க்கிறோம். இதில்யார் அங்கம்வகிக்கிறார்கள் என்பதே பிரச்சனைஇல்லை. எங்களுக்கு இதுபோன்றகுழு தேவைஇல்லை. நாங்கள் இவ்வாறு குழு வேண்டும்என்று கேட்கவே இல்லை. எங்கள் போராட்டம்எங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்துடனானது என்பதாலும் இதுதான் கொள்கை முடிவுகளுக்குப் பொறுப்பேற்க வேண்டியது ஆகும் என்பதாலும் நாங்கள் எங்கள் கோரிக்கைகளுக்காக நீதிமன்றத்திற்கும் செல்லவில்லை” என்று விவசாய சங்கத் தலைவர்களில் ஒருவரான தர்ஷன் பால் கூறினார். (ந.நி.)

;