india

img

பயிற்சி மருத்துவர்களை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தல்.....

புதுதில்லி:
பயிற்சி பெற்ற மருத்துவர்களை கொரோனா சிகிச்சையில் பயன்படுத்த வேண்டும் என்று மாநிலங்களிடம் மத்திய ஆயுஷ் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இதற்கான சுற்றறிக்கை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தேசிய பேரிடர் நிர்வாக நிதியை ஆயுஷ் அமைச்சகம் பெற்று மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கிறது. இவை ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் தலா ரூ.2 கோடி வரை ஒதுக்கப்படுவது தெரியவந்துள்ளது. மாநிலங்கள் தம் ஆயுஷ் துறையின் சார்பில் துவக்கி நடத்தி வரும் தன்னார்வ கொரோனா சிகிச்சை மையங்களுக்கு மத்திய அரசு  உதவி வருகிறது.இந்நிலையில் ஆயுஷ் அமைச்சகம் சார்பில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில்,  நாடு முழுவதிலும் சுமார் எட்டு லட்சம் ஆயுஷ் மருத்துவர்கள் உள்ளனர். பயிற்சி பெற்ற இவர்களை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் சிகிச்சைக்காக பயன்படுத்தலாம். இதுவரையில் நாடு முழுவதிலும் உள்ள 750 ஆயுஷ் மருத்துவக் கல்லூரிகளில் சுமார் 50 ஆயிரம் படுக்கைகள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளன. இதற்கு மத்திய ஆயுஷ் அமைச்சகமும் உதவியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த வருடம்ஆயுஷ் துறையினர் கொரோனா சிகிச்சையில் ஈடுபட்டனர். இதில், தமிழகத்தில் மட்டும் சுமார் ஒரு லட்சம் பேர் குணமடைந்தனர். நாடு முழுவதிலும் ஆயுஷ் மருத்துவத் துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையங்களில் 28,473 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

;