india

img

சிஐடியு மகத்தான தலைவர் ரஞ்சனா நிருலா காலமானார்....

புதுதில்லி:
இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு)வின் மகத்தான தலைவர்களில்ஒருவரும், முன்னாள் அகில இந்திய பொருளாளருமான தோழர் ரஞ்சனா நிருலா காலமானார். அவருக்கு வயது 75. 

வியட்நாம் மீதான அமெரிக்க யுத்தத்தை எதிர்த்து நெஞ்சத்தில் கனன்ற ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வால் இடதுசாரி இயக்கத்திற்குள் ஈர்க்கப்பட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இயக்கத்திலும், சிஐடியு தொழிற்சங்க பணிகளிலும் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட தோழர் ரஞ்சனா நிருலா மறைவுச் செய்தி நாடு முழுவதுமுள்ள சிஐடியு தலைவர்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான தோழர்களது உள்ளத்தை உலுக்கியுள்ளது. அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தி சிஐடியு பொதுச் செயலாளர் தபன்சென் விடுத்துள்ள இரங்கல் அறிக்கை வருமாறு:

தோழர் ரஞ்சனா நிருலா மறைவுக்கு சிஐடியு இதயப்பூர்வமான அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறது. சங்கத்தின் முன்னாள் பொருளாளரான அவர் தற்சமயம் மத்திய செயற்குழு உறுப்பினராகவும், சுகாதாரத் திட்ட ஊழியர்களின் அகில இந்திய ஒருங்கிணைப்பு குழு கன்வீனராகவும் செயலாற்றி வந்தார். கடந்த சில மாதங்களாகஉடல் நலக்குறைவால் பாதிக்கப் பட்டிருந்த அவர் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக சிகிச்சையில் இருந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி மே 10 திங்களன்று இரவு 11 மணியளவில் காலமானார்.

1945 இல் தில்லியில் ஒரு பணக்கார பஞ்சாபி குடும்பத்தில் பிறந்தவர் ரஞ்சனா. அவரது தந்தை ஐ.நா. சபையில் மருத்துவராக பணியாற்றி வந்தார். ரஞ்சனா தனது கல்விக்காகஅமெரிக்கா சென்றார். அச்சமயத்தில்வியட்நாம் யுத்தம் நடந்து கொண்டி ருந்தது. வியட்நாம் யுத்தத்திற்கு எதிரான இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு இடதுசாரி இயக்கத்துடன் நெருக்கமானார். படிப்பு முடித்து இந்தியாவுக்கு 1970களின் துவக்கத்தில் திரும்பிய அவர், இங்கு இடதுசாரி இயக்கத்துடன் தன்னை இணைத்துக் கொண்டார். 1978ல் சிஐடியுவின் முழு நேர ஊழியரான அவர், தில்லி மாநில சிஐடியு பொருளாளராக தேர்வு செய்யப்பட்டார். தெற்கு தில்லியிலும் பரீதாபாத்திலும் தொழிலாளர்கள் வசிக்கும் காலனிகளிலேயே தங்கிப் பணியாற்றினார். ஆலை தொழிலாளர்கள் மத்தியில் சங்கத்தை கட்டமைத்தார். 

1979ல் தில்லியில் சிஐடியு உழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்புக் குழுவை உருவாக்கியதிலும், தில்லியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தை உருவாக்கியதிலும் முதன்மை பங்கு வகித்தவர். மாதர் சங்கத்தின் மத்தியக்குழு உறுப்பின ராக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தில்லி மாநிலக் குழு உறுப்பினராகவும் பணியாற்றினார்.தோழர் ரஞ்சனா ஒரு மகத்தான மனிதநேயர். சிறப்புத் தேவை உள்ள குழந்தைகளுக்கு கற்பிப்பதில் சிறப்பு திறன் பெற்றவர். சில காலம் அத்தகையஒரு ஆசிரியையாகவும் பணியாற்றி னார். 1998 முதல் சிஐடியு அகில இந்திய மையத்தில் பணியாற்றத் துவங்கிய அவர், 1980 முதல் வெளியிடப்பட்டு வரும் பெண் தொழிலாளர்களுக்கான சிஐடியு பத்திரிகையான ‘தி வாய்ஸ்ஆப் ஒர்க்கிங் வுமன்’ பத்திரிகையின் பொறுப்பாசிரியாகவும் செயலாற்றினார். 1979 முதல் சிஐடியு அகில இந்திய உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழுவில் பணியாற்றி வந்த அவர் பீடித் தொழிலாளர்கள் மத்தியில் சங்கத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்தினார். 2009ல் அகில இந்திய சுகாதாரத் திட்ட ஒருங்கிணைப்புக் குழுவை சிஐடியு அமைத்தபோது அதற்கு பொறுப்பேற்ற அவர் தற்போது வரை அப்பொறுப்பில் பணியாற்றி வந்தார். சிஐடியுவின் முதல் பெண் பொருளாளர் தோழர் ரஞ்சனா. 2010ல் நடைபெற்ற சிஐடியுவின் 13 வது அகில இந்திய மாநாட்டில் பொருளாளாராக தேர்வு செய்யப்பட்ட அவர் 2017 வரை அப்பொறுப்பில் செயல்பட்டார்.

பெண்களின் சம உரிமைக்கான உறுதிமிக்க போராளி; பாசிச மதவெறிசக்திகளுக்கு எதிராக துளியும் அச்சமற்ற விமர்சனத்தை முன்வைத்த வர்; சிஐடியுவின் ஊழியர்களை வளர்த்தெடுப்பதிலும் அரவணைப்பதி லும் மிகவும் அன்பை பொழிந்த ஒருஅற்புதமான தலைவர் தோழர் ரஞ்சனா. அவரது மறைவு இந்திய தொழிற்சங்க இயக்கத்துக்கு பேரிழப்பாகும். குறிப்பாக சிஐடியு அகில இந்திய மையத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். தோழர் ரஞ்சனா மறைவுக்கு சிஐடியுதனது செங்கொடியை தாழ்த்தி கவுரவமிக்க மரியாதையை செலுத்துகிறது; அவரை இழந்து வாடும் குடும்பத்தின ருக்கு இதயப்பூர்வமான இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தலைவர்கள் இரங்கல்
தோழர் ரஞ்சனா நிருலா மறைவுக்கு சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் ஏ.கே.பத்மநாபன், மாநில தலைவர் அ.சவுந்தரராசன், மாநிலப் பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன், அகிலஇந்திய செயலாளர் ஆர்.கருமலை யான், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க இணை செயலாளர் எம்.கிரிஜா உள்ளிட்ட தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

;