india

img

கால்டாக்ஸிகளும் கம்யூனிஸ்டுகளும்...

ஆகஸ்ட் 5 வியாழனன்று காலை தமிழகத்திலிருந்து தில்லி வந்த விவசாயிகளை  ரயில் நிலையத்தில் வரவேற்க சிபிஎம் மாநிலச்செயலாளர்  கே.பாலகிருஷ்ணன், கோவை மக்களவைஉறுப்பினர் பி.ஆர் நடராஜன்  ஆகியோ ரோடு நானும் புறப்பட்டேன். பி.ஆர் நடராஜனும் நானும் ரயில் நிலைய வரவேற்பினை முடித்துவிட்டு 11 மணிக்குள் நாடாளுமன்றம் வந்து சேர வேண்டியிருந்தது. கே.பாலகிருஷ்ணன் அவர்களோ விவசாயிகளை வரவேற்று அவர்களுடன் சிங்கூ எல்லைக்குப் போய் மாலை வரை அவர்களுடன் இருந்து விட்டு இரவு சென்னை செல்ல திட்ட மிட்டிருந்தார்.கே.பாலகிருஷ்ணன் சிங்கூ எல்லை வரை போய் திரும்ப வசதியாக முழு நாளுக்கு ஒரு வாடகைக் கார் அமர்த்திக்கொள்ளலாமா என கேட்டோம். அவரோ “வேண்டாம் தோழர், ரயில் நிலையம் வரை கால் டாக்ஸியில் போய் விடுவோம், அங்கிருந்து தில்லி போலீஸ் தமிழக விவசாயிகளை சிங்கூ எல்லைக்கு அவர்களின் வாகனத்தில் அழைத்துச் செல்லும் போது, அதே வாகனத்தில் நானும் சென்று விடுகிறேன்” என்றார்.

சரி என்று ரயில் நிலையம் செல்ல, கால் டாக்ஸி பதிவு செய்து விட்டு காத்திருந்த போது, அதே அடுக்ககத்தில் குடியிருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் து.ராஜாவும் காத்திருப்பு பகுதிக்கு வந்தார்.தற்செயலாக அமைந்த நல்லதொரு சந்திப்பு. கால் டாக்ஸி வந்து சேர்வதற்குள் தில்லியின் ஆறு முனைகளில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டம், ஜந்தர் மந்தர் பகுதியில் நடக்கும் விவசாயிகள் நாடாளுமன்றம், தமிழகத்திலிருந்து வந்துள்ள மீனவர்களை தில்லி போலீஸ் ரயில் நிலையத்திலேயே கைது செய்துள்ள விவகாரம், போராட்டக்காரர்கள் ஒருவர் கூட தனது பார்வையில் இருந்து தப்பி தில்லியின் மத்திய பகுதிக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காக தில்லி போலீஸ் செய்து கொண்டிருக்கும் ஜனநாயக விரோத செயல் என அனைத்தும் பேசப்பட்டுவிட்டது. 

கால் டாக்ஸி வந்ததும் நாங்கள் மூவரும் புறப்பட்டோம், சிறிது தூரம் போன பின் யோசித்தேன், “தோழர் ராஜா எதில் போவார் என்று நாம் கேட்க மறந்து விட்டோமே!”பின்னர் தோன்றியது, அவரும் ஒரு ஓடிபி நம்பரோடுதான் காத்திருப்பார் இந்நேரம் கால் டாக்ஸி வந்திருக்கும்.நாங்கள் ரயில்  நிலையத்தை அடைந்தோம். தில்லி போலீஸ் தீவிரவாதிகளை வளையமிட்டிருப்பதைப் போல தமிழக விவசாயிகளை வளைய மிட்டிருந்தது.விவசாயிகள் சங்கத் தலைவர்கள் தில்லி போலீசாரோடு நடத்திக் கொண்டிருக்கும் போராட்டத்தை நேரடியாகவும் பார்த்தோம்.

253 நாட்கள் நடந்து கொண்டிருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டத்தின் நாயகர்கள் ஹன்னன் முல்லா, அசோக்தாவ்லே, விஜு கிருஷ்ணன் ஆகியோரோடு உரையாற்றிவிட்டு, போராட்டத்தை வாழ்த்தி பேசினோம். சிறிது தூரம் ஊர்வலத்தில்பங்கெடுத்தோம். அனுமதிக்கப்பட்ட  தூரத்தை ஏற்க மறுத்து திமிறிக்கொண்டிரு ந்தனர் எம் தோழர்கள். பி.ஆர்.நடராஜன் அவர்களுக்கும் எனக்கும் நாடாளுமன்றம் செல்வதற்கான நேரமாகிவிட்டது. எனவே பேரணியின் முகப்பில் இருந்து, காவல்துறையின் தடுப்புகளை கடந்து வர வேண்டியிருந்தது.தோழர்களுக்கும் காவல்துறைக்கும் வழக்கம் போலான தள்ளுமுள்ளுகள் நடந்து கொண்டிருந்தது. அந்த பிரச்சனை க்கு நடுவில் தில்லியை சேர்ந்த தோழர் ஒருவர் “இவர்கள் இருவரும் எம்.பி.க்கள். இவர்களை தடுப்புகளை தாண்டிச்செல்ல அனுமதியுங்கள்” என்று காவல் உயர் அதிகாரியிடம் ஹிந்தியில் பேசினார். அந்த கடுமையான நேரத்தில் தில்லியின் மத்தியபகுதி துணை ஆணையர் எங்களை தடுப்புகளை சற்றே விலக்கி வெளியில் அழைத்து வந்தார்.காவலர்கள் சூழ வெளியில் வந்ததும்  “உங்கள் வாகனம் எங்கே இருக்கிறது?” எனக் கேட்டார்.அப்பொழுது தான் டாக்ஸி பதிவு செய்ததால் ஓடிபி தான் வந்திருந்தது, டாக்ஸி வர 10 நிமிடம் என்று ஓலாவின் வரைபடம் காட்டியது. அது வரை  பி. ஆர்.நடராஜன் அவர்களும் நானும் பேசிய படி நின்றோம். அந்த காவல் அதிகாரி, “வாகனம் எங்கே நிற்கிறது?” என்று மீண்டும் கேட்டார், 
“டிராஃபிக்கில் மாட்டிக் கொண்டு நிற்கிறது, சிறிது நேரத்தில் வந்துவிடும்” என்றேன்.

“ஏன், நீங்கள் இங்கேயே நிறுத்தியிருக்கலாமே?” என்றார் அவர்.

“அது சொந்த வாகனமல்ல, வாடகை டாக்ஸி  என்றேன்”அதன் பிறகு அவர் எங்களுடன் பேசவேயில்லை, காவல்துறையின் வெவ்வேறு அதிகாரிகளுடன் ஏதேதோ ஹிந்தியில் பேசிக்கொண்டே இருந்தார்.தடுப்புக்கு பின்புறம் தோழர்களின் முழக்கம் அதிகமாகிக்கொண்டே இருந்தது.டாக்ஸி வர தாமதமாகிக் கொண்டிருந்ததால், தோழர் பி .ஆர். நடராஜன் “வெங்கடேசன், ரெம்ப நேரமாகுது, நாம 11 மணிக்குள்ள அவைக்குள் போய் ஆகணும்,ஒரு ஆட்டோ பிடிச்சு போயிருவோம்” என்றார்.
நான் சொன்னேன் “தோழர், கால் டாக்ஸி புக் பண்ணிருக்கோம்னு சொன்னதில் இருந்து அந்த காவல்துறை அதிகாரி, நாம் ரெண்டு பேரும் எம். பி. தானான்னு சந்தேகப்பட்டு சுத்தி சுத்தி விசாரிச்சுக்கிட்டு இருக்கார். இப்போ ஆட்டோ பிடிச்சோம்னா உறுதியா முடிவுக்கு போயிருவார். நம்மோட கண்டிசன மீறி இங்கிருந்து ஜந்தர் மந்தர் போராட்டத்துல போய் கலந்துகிறதுக்காக இப்படி சொல்றானுக அப்படீன்னு நெனச்சு நம்ம ரெண்டு பேரையும் விவசாயிகளுக்காக காத்திருக்கிற அந்த பஸ்லயே ஏத்தி சிங்கூவுக்கு கொண்டு போயிருவார். உங்களுக்கு எது வசதி, சிங்கூவுக்குப் போவோமா அல்லது பார்லிமெண்டுக்கு போவோமா?” எனக்கேட்டேன்.“எங்க போனாலும் போராடத்தான் போறோம், நமக்கு கொடுத்திருக்கிற எடத்துல போய் போராடுவோம். பத்து நிமிடம் காத்திருந்தாலும் கால் டாக்ஸியிலே போயிருவோமப்பா” என்றார் தோழர்.

சு.வெங்கடேசன் எம்.பி.,

;