india

img

மேகதாது அணை கட்ட கர்நாடகாவுக்கு அனுமதி வழங்கவில்லை... தமிழக அனைத்துக்கட்சிகள் குழுவிடம் ஒன்றிய அமைச்சர் தகவல்....

புதுதில்லி:
மேகதாது பகுதியில் அணை கட்ட கர்நாடகாவுக்கு அனுமதி வழங்கக்கூடாதுஎன்று ஜூலை 16 வெள்ளிக்கிழமையன்று தில்லியில் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை நேரில் சந்தித்து தமிழக அனைத்துக்கட்சிகள் குழுவலியுறுத்தின.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் கர்நாடக அரசு அணை கட்டுவதை தடுக்க சட்டப்பூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழகஅரசு மேற்கொண்டு வருகிறது. டெல்டா பகுதி விவசாயத்தை அழிக்கும் வகையில் அணை கட்டும் கர்நாடக அரசைக்கண்டித்து தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகள் மற்றும் விவசாயத்தொழிலாளர் சங்கங்கள், அரசியல் கட்சிகள் போராட்டங் களை நடத்தி வருகின்றன.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து மேகதாதுஅணை பிரச்சனை குறித்து தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை விளக்கி, தமிழக விவசாயிகளின் நலன் காக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், சமீபத்தில் ஒன்றிய நீர்வளத் துறை அமைச்சரைச் சந்தித்து, இந்தப் பிரச்சனையில் ஒன்றிய அரசு தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றுகோரினார்.மேகதாது அணை அமைக்க தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது எனக் கோரி கர்நாடக முதல்வர் எடியூரப்பா தமிழக முதல்வருக்குக் கடிதம் எழுதினார். அணை கட்டக்கூடாது என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் கர்நாடக முதல்வருக்கு பதில் கடிதம் எழுதினார்.

ஜூலை 12 ஆம் தேதியன்று தமிழக அரசு சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில்,உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரியின் கீழ்ப்படுகை மாநிலங்களின் முன் அனுமதியைப் பெறாமல்மேகதாதுவில் எந்தவொரு கட்டுமானப் பணியையும் மேற்கொள்ளக் கூடாது என்றும்  மேகதாது திட்டத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கக் கூடாது என்பதுஉள்ளிட்ட மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்தவும் முடிவு செய்யப்பட்டது. இதன்படி, தமிழக நீர்ப்பாசன துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்,  அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக் குமார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிதலைவர் தொல்.திருமாவளவன், மதிமுகபொதுச்செயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கோபண்ணா, மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக பாஜகவழக்கறிஞர் பிரிவுத்தலைவர் பால் கனகராஜ், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட 13 கட்சிகளின் பிரதிநிதிகள்  ஜூலை 16  மதியம் 1 மணியளவில் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர்  கஜேந்திர சிங் செகாவத்தை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

துரைமுருகன்
ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சருடனான சந்திப்பிற்குப் பின்னர்  தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், கீழ்பாசன மாநிலங்களிடம் அனுமதி இல்லை.எனவே காவிரி நீர் மேலாண்மை வாரியஒப்புதலும் தேவை. அவையும் கொடுக்கப்படவில்லை என ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேகதாது அணையை கட்டக்கூடாதுஎன சுமார் 45 நிமிடங்களுக்கு மேலாக ஒன்றிய அமைச்சரிடம் பேசினோம். மேகதாதுஅணையை கட்டுவதற்கான சாத்தியக் கூறுகள் கர்நாடகாவுக்கு இல்லை என்று ஒன்றியஅமைச்சர் கூறினார். மேகதாது அணைக்கு அனுமதி தரக்கூடாது என ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரிடம் வலியுறுத்தினோம். கர்நாடகஅரசின் விரிவான திட்ட அறிக்கையை ஏற்க மாட்டோம்.கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதற்கு ஒன்றிய அரசு துணை போகக் கூடாது என்று அழுத்தமாக வலியுறுத்தினோம்.காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது அணைக்குஅனுமதி வழங்கப்பட மாட்டாது. மேகதாது விவகாரத்தில் கர்நாடகாவுக்கு ஒன்றிய அரசு துணை போகக்கூடாது என வலியுறுத்தினோம் என்று தெரிவித்தார்.

கே.பாலகிருஷ்ணன்
அனைத்துக் கட்சி குழுஒன்றிய அமைச்சரை சந் தித்து பேச்சுவார்த்தை நடத்தியது குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கான டிபிஆர் அறிக்கை தயாரிக்க நீர்வளக் குழு அனுமதியளித்ததே தவறுஎன வலுவாக எடுத்துரைக்கப்பட்டது. அதற்கு அமைச்சர் அணை கட்ட ஒன்றிய அரசு அனுமதி அளிக்கவில்லை. காவிரி நதிநீர் ஆணையம் மற்றும் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் அனுமதி பெற வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளோம். ஆனால் இதுவரை அணை கட்ட அனுமதி வழங்கவில்லை என்றார்.நீர்வளக் குழு அனுமதிகொடுத்ததே விதிமுறைகளுக்கும், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கும் எதிரானது எனகே.பாலகிருஷ்ணன் கூறினார்.

இந்த செய்தி தொகுப்பு 1 மற்றும் 6 என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது... தோழர்கள் தொடர்ந்து படிக்கும் வசதிக்காக ஒரே தொகுப்பாக கொடுக்கப்பட்டுள்ளது....     

;