india

img

இந்தியர்கள் கினியா பன்றிகள் அல்ல என கொதிப்பு .... பில்கேட்ஸ் தயாரிப்பு தடுப்பூசிக்கு சுப்பிரமணியசாமி எதிர்ப்பு....

புதுதில்லி:
ஆக்ஸ்போர்டு- ‘அஸ்ட்ராஜெனெகா’ (Oxford -AstraZeneca vaccine) தயாரித்துள்ள தடுப்பூசியை இந்தியர்களுக்கு செலுத்துவதற்கு பாஜகவைச் சேர்ந்த சுப்பிரமணியசாமி எம்.பி.எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த, அமெரிக்கா, ரஷ்யா, சீனா என பல்வேறு நாடுகளிலும் தடுப்பூசிகள் கண்டுபிடிக் கப்பட்டு, அவை பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இந்தியாவிலும் 6-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் வெற்றிபெற்றுள்ளன.பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலுடன் இணைந்து உருவாக்கியுள்ள கோவேக்சின் (COVAXIN) தடுப்பூசி மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனையில் உள்ளது. ஜைடஸ் கெடிலா நிறுவனத்தின் ஜைகோவ்-டி தடுப்பூசி,இரண்டாம் கட்ட பரிசோதனையில் இருக்கிறது.

அதுபோல, உலகப் பெரும்பணக்காரரான பில்கேட்ஸ் நிதியுதவியுடன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனகா மருந்து நிறுவனமும் (Oxford-AstraZeneca vaccine)கூட்டாக உருவாக்கி உள்ள தடுப்பூசியை இந்தியாவில் ‘கோவிஷீல்டு’ (Covishield) என்ற பெயரில் தயாரித்து வழங்குவதற்கான சீரம் நிறுவனத்தின் (Serum Institute) சோதனையும் இறுதிக் கட்டத்தில் உள்ளது.இந்நிலையில்தான், அஸ்ட்ராஜெனகா நிறுவன தடுப்பூசிக்கு சுப்பிரமணியசாமி டுவிட்டரில் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவசரத்திற்கு பயன்படுத்துவதற்கு கூட அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனம் (WHO) இதுவரை அனுமதிவழங்கவில்லை. அவ்வாறிருக்கையில், அந்த நிறுவனத்தின் தடுப்பூசிஇந்தியாவில் செலுத்தப்படும் என்றால், இந்தியர்கள் என்ன, சோதனைக்கூட கினியா பன்றிகளா? என மோடி அரசை சாடியுள்ளார்.

தற்சார்பு பாரதம் என்று அறிவித்து விட்டு, இந்தியாவில் தயாரித்த தடுப்பூசிகளை பயன்படுத்தாமல், பிரிட்டன் வழியாக பில் கேட்ஸ்நிறுவனம் தயாரித்த மருந்துகளை இறக்குமதி செய்வதா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.கொரோனா தடுப்பில், அமெரிக்காவைச் சேர்ந்த மாடர்னா நிறுவன தடுப்பூசி 92 சதவிகிதமும், அதைத்தொடர்ந்து பைசர் (Pfizer)நிறுவன தடுப்பூசி 82 சதவிகிதமும், ஆக்ஸ்போர்டு நிறுவனத்தின் அஸ்ராஜெனெகா நிறுவன தடுப்பூசி 70 சதவிகிதமும் நல்ல பலனைஅளிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

;