india

img

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி கருப்பு தினம்... மோடி அரசுக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள், எதிர்க்கட்சிகள் எழுச்சிமிகு போராட்டம்....

புதுதில்லி/சென்னை:
விவசாயிகள் விரோத சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி தில்லியை முற்றுகையிட்டு நடைபெற்று வரும் மிகப்பிரம்மாண்டமான விவசாயிகளின் எழுச்சி மே 26 அன்று 6வது மாதத்தைஎட்டியுள்ளது. விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மறுத்து, சட்டங்களை திரும்பப்பெற மறுத்துவரும் மோடி அரசுக்கு எதிராக நாடு முழுவதும் மே 26 புதனன்று கருப்புத் தினம்கடைப்பிடிக்கப்பட்டது.

கடந்த 7 ஆண்டு காலமாக நாட்டின் அனைத்துநலன்களையும் சீர்குலைத்துள்ள மோடி அரசுபதவிவிலக வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கருப்புக்கொடி ஏற்றியும் பதாகைகளை ஏந்தியும் முழக்கமிட்டனர். சம்யுக்த கிசான் மோர்ச்சா என்னும் ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் அழைப்பின்பேரில், தில்லியை சுற்றியுள்ள எல்லைப் பகுதிகளில் நீடித்து வரும் விவசாயிகளின் போராட்டக்களங்களில் கருப்பு தினத்தையொட்டி எழுச்சிமிகு முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இப்போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, திமுக உள்ளிட்ட 12 எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன. இந்த ஆதரவை களத்தில் வெளிப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் இடதுசாரிக் கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகள் சார்பில் கருப்புக்கொடி ஏற்றியும் முழக்கப்பதாகைகளை உயர்த்திப்பிடித்தும், கொரோனாபாதுகாப்பு விதிகளின்படி வீடுகளின் முன்பிருந்தவாறே போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு சிஐடியு, விவசாயத் தொழிலாளர் சங்கம், மாதர், வாலிபர், மாணவர்சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்து கருப்பு தின போராட்டத்தை நாடுமுழுவதும் நடத்தின. 

தமிழகம்
தமிழகத்தில் பல நூற்றுக்கணக்கான மையங்களில் விவசாயிகள் சங்கம், மார்க்சிஸ்ட்கட்சி மற்றும் சிஐடியு, விவசாயத்  தொழிலாளர் சங்கம், மாதர், வாலிபர், மாணவர் சங்கங்கள் சார்பில் கருப்புக்கொடி ஏற்றப்பட்டது. இதன் ஒரு பகுதியாக சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் கருப்புக்கொடியை அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் ஏற்றி வைத்தார். மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்று மோடி அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

சிஐடியு, விவசாயிகள் சங்கம்
சென்னை அருகே ஆவடியில் சிஐடியு, விவசாய சங்கங்கள் இணைந்து அண்ணா சிலை சந்திப்பில் நடந்த கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆவடி தொகுதி செயலாளர் ராஜன் தலைமை தாங்கினார்.தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலபொதுச் செயலாளர் பெ.சண்முகம்  கலந்துகொண்டு உரையாற்றுகையில், “மோடி அரசுக்குஎதிராக விவசாயிகள் மட்டுமின்றி பொது மக்களும் தங்களுடைய கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்” என்றார்.தொடர்ந்து ஆறு மாத காலமாக லட்சக் கணக்கான விவசாயிகள் மத்திய அரசை எதிர்த்து போராடி வருகிறார்கள். இந்திய வரலாற்றில் இதுவரை இம்மாதிரியான போராட்டங்கள் நடைபெற்றது இல்லை என்று கூறும் அளவுக்கு ஒரு புதிய சரித்திரத்தை விவசாயிகள் உருவாக்கியிருக்கிறார்கள்  470 விவசாயிகள் மரணம் அடைந்த நிலையிலும் போராடி வரும் விவசாயிகளை அழைத்து பேசி பிரச்சனையை தீர்ப்பதற்கு பதிலாக மத்திய அரசு ஒரு பிடிவாதமான போக்கையே கடைபிடித்து வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர மூன்றுசட்டங்களையும் திரும்பப்பெற வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருப்பதுடன் தமிழக சட்டப் பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று அறிவித்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுக்களை தெரிவிக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

மாதர் சங்கத்தினர் போராட்டம்
அனைத்துத்துறைகளிலும் தோல்வி அடைந்துள்ள மோடி அரசு பதவி விலகக்கோரியும்,பெருந்தொற்று காலத்தில் மக்களை பாதுகாக்கத் தவறிய மத்திய அரசை கண்டித்தும், இந்த தொற்று காலத்தில் வாழ்வை இழந்துதவிக்கும்  உழைக்கும் மக்களை பாதுகாக்கக் கோரியும், மே 26 ஆம் தேதி ஜனநாயக மாதர் சங்கஉறுப்பினர்கள் வீடுகளின் முன்பு கருப்பு பட்டை அணிந்து போராட்டம் நடத்தினர். தமிழகம் முழுதிலும் 3083 வீடுகளின் முன்பு இப்போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் மாதர் சங்க அகில இந்திய தலைவர்கள் சுதா சுந்தரராமன், உ.வாசுகி, மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, மாநிலப் பொதுச் செயலாளர் பி.சுகந்தி மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

வேளாண் சட்டங்களை திரும்பப்பெற முதலமைச்சர் வலியுறுத்தல்

இந்நிலையில் விவசாயிகளின் நாடு தழுவிய போராட்டத்திற்கு திமுக ஆதரவு தெரிவித்த நிலையில் வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசுதிரும்பப் பெற வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். மேலும் அவர் கூறியிருப்பதாவது:

விவசாயிகளின் நியாயமான கோரிக்கைக ளை மதித்து வேளாண் சட்டங்களை திரும்பப்பெற மத்திய அரசு இதுவரை முன்வரவில்லை. வேளாண் சட்டங்களை திரும்பப்பெற தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படும்.6 மாத காலமாக விவசாயிகள் போராட்டம் நடத்திவரும் நிலையில் இன்னும் தீர்வு ஏற்பட வில்லை. வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

படக்குறிப்பு : மே 26 நரேந்திர மோடி பதவியேற்று 7ஆம் ஆண்டு தினத்தை கருப்பு தினமாக கடைப்பிடிக்குமாறு விடுக்கப்பட்ட நாடு தழுவிய அறைகூவலை ஏற்று, விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விவசாயிகள் இயக்கங்கள், வெகுஜன அமைப்புகள் சார்பில் கருப்பு கொடி ஏற்றி போராட்ட தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி

1. சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் கருப்புகொடி ஏற்றி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கருப்புக்கொடியை ஏற்றி வைத்தார். மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்று முழக்கமிட்டனர்.

2. சென்னை ஆவடியில் நடைபெற்ற கருப்புக் கொடி இயக்கத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பெ.சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

3. கோயம்புத்தூரில் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தமது இல்லத்தில் கருப்புக்கொடி ஏற்றியும், கோரிக்கை பதாகையை ஏந்தியும் மோடி அரசுக்கு தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.

4. சென்னையில் தமது இல்லத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, கருப்புக்கொடி, கோரிக்கை பதாகையை ஏந்தினார்.

5. புதுச்சேரியில் தமது இல்லத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் சுதா சுந்தரராமன் கருப்புக்கொடி பதாகையை ஏந்தினார்.

;