india

img

பஞ்சாப், ஹரியானாவில் விரட்டியடிக்கப்படும் பாஜக தலைவர்கள்... வீட்டைவிட்டே வெளியே வர முடியவில்லை; தெருவில் நடக்க முடியாது; கொடிகட்டி காரிலும் செல்ல முடியாது...

புதுதில்லி:
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக, நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றாலும், பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் மத்தியில் மிகப்பெரிய அளவிற்கு எதிர்ப்பு உள்ளது. குறிப்பாக, ஜனவரி 26 குடியரசுத் தினத்தன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியையொட்டி, மத்திய பாஜக அரசு அவர்கள் மீது கட்டவிழ்த்து விட்ட வன்முறை, தடியடித் தாக்குதல், தேடித்தேடி நடத்திய கைது. ஆகியவை பஞ்சாப், ஹரியானா மக்களை கொந்தளிக்கச் செய்துள்ளது.

அதிலும், பஞ்சாப் மாநிலஉள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டு, வேட்புமனுத் தாக்கல், பிரச்சாரம் துவங்கியுள்ள நிலையில், அம்மாநிலத்தில் பாஜக தனித்து  விடப்பட்டுஉள்ளது.பாஜக-வுடன் இருந்த சிரோமணி அகாலிதளம் கட்சி வெளியேறிவிட்ட நிலையில், கூட்டணிக்கு ஆள் கிடைக்கவில்லை. இதனால் 100 சதவிகித இடங்களிலும் பாஜக-வே வேட்பாளர்களை நிறுத்த வேண்டும். ஆனால்,மூன்றில் இரண்டு பங்கு இடங்களில் போட்டியிடுவதற்கு ஆள் கிடைக்கவில்லை. வேட்புமனுத்தாக்கல் செய்த இடங்களிலும் பிரச்சாரத்திற்கு செல்ல முடியவில்லை.

30-க்கும் மேற்பட்ட பாஜக தலைவர்களின் வீடுகளுக்கு வெளியே, கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக ‘பக்கா தர்ணாக்கள்’ (Pacca-Morcha) நடைபெற்று வருகின்றன. இரவு -பகலாக இந்தப் போராட்டம் தொடர்வதால், முக்கியமான பல பாஜக தலைவர்கள் வீட்டைவிட்டு வெளியே வரமுடியவில்லை.ஒவ்வொரு தர்ணாவிலும் 200 பேர் பங்கேற்றுள்ளனர். கூடாரம் அமைத்து தங்கியுள்ளனர். எங்களை ஏன் பயங்கரவாதிகள் என அழைக்கிறீர்கள்? என்றும் என்ன சொன்னாலும் ‘கறுப்பு’ வேளாண் சட்டங்களை ரத்து செய்யும்வரை விட மாட்டோம்..? என்றும், அனைத்து விவசாயிகளும் தில்லியை முற்றுகையிடுவோம் (Aao saare Dilli chaliye) என்றும் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.

விவசாயிகளின் இந்த போராட்ட அலையை தாக்குப்பிடிக்க முடியாமல், பாஜக தலைவர்கள் கூட்டம் கூட்டமாக கட்சியை விட்டு ஓடிக் கொண்டிருக்கின்றனர். ஜனவரி மாதத்தில் மட்டும் 20-க்கும் மேற்பட்டவர்கள் ஓட்டம் பிடித்துள்ளனர். பாஜக ஒரே சீக்கிய முகமான மால்விந்தர் சிங் கங்-கும் விலகியவர்களில் பட்டியலில் இருக்கிறார். கட்சியில் இருப்பவர்களும் அதனை வெளியே சொல்லவே அஞ்சுகின்றனர். தங்களின் கார்களில் மாட்டப்பட்டிருந்த கட்சிக் கொடிகளை பலர் அகற்றி விட்டனர். உயர்ந்த பதவி வழங்குகிறோம் என்று கூறினாலும், அதை இந்த நேரத்தில் யாரும்ஏற்கத் தயாராக இல்லை.

பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான, பஞ்சாப் மாநில பாஜக தலைவர் அஸ்வனி சர்மா அக்டோபர் முதல்போராட்டங்களை எதிர்கொண்டுஉள்ளார். அவர் இப்போது பொது நிகழ்ச்சிகளை முழுவதுமாக தவிர்த்து விட்டார்.விவசாயிகளுடன் பேச்சு நடத்தும் பாஜக குழுவில் ஒருவராகவும் சீக்கிய முகமாகவும் இருந்த மால்விந்தர் சிங்கங் பாஜகவை விட்டே விலகிவிட்டார். அவருக்கு அடுத்தபடியாக பாஜக-வின் சீக்கிய முகமாக இருந்தவர் ஹர்ஜித் சிங் கிரெவால். ஆனால், விவசாயிகளை ‘நகர்ப்புற நக்சல்கள்’ என்று விமர்சித்துவிட்டு, இப்போதுவரை அவர் வீட்டிற்கு உள்ளேயே முடங்கிக் கிடக்கிறார். சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்.

கிரெவாலின் விவசாய நிலத்தை நாங்கள் யாரும் குத்தகைக்கு எடுப்பதில்லை என்று முடிவு செய்திருப்பதாகவும், அதேபோல, நகராட்சி மன்றத் தேர்தலில் முடிந்தால் போட்டியிட்டுப் பார்க்குமாறும் பஞ்சாப்பில் உள்ள தனுலா கிராமவாசியான மொஹிந்தர்சிங், கிரெவாலுக்கு சவால் விடுகிறார்.வீடுகளை விட்டு வெளியேறுவதற்கு முன்பு- அன்றைய தினம் விவசாயிகள் எங்கெல்லாம் போராடுகிறார்கள் என்ற போராட்டத் திட்டங்களைச் சரிபார்த்துவிட்டு- அதன்பிறகே வெளியே செல்ல முடிகிறது என்று பாஜக மூத்த தலைவர் ஒருவர் மிகுந்த அவமானத்துடன் குறிப்பிடுகிறார்.“ஆர்ப்பாட்டக்காரர்கள் எங்களைப் (பாஜக-வினரை) பார்த்து விட்டால், உடனேயே சுற்றி வளைத்து விடுகிறார்கள்” என்று ஜலந்தரின் முன்னாள் பாஜக மாவட்டத் தலைவரும், சங்ரூர் மாவட்டம் சுனம் உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளருமான ரமேஷ் சர்மா பகிரங்கமாக புலம்புகிறார். விவசாயிகள் எங்களை எல்லா இடங்களிலும் பின்தொடர்கிறார்கள். இதனால் ஒரு பதற்றத்திலேயே நாங்கள் இருக்கிறோம் என்றும் அவர் கூறுகிறார்.இந்த சுனம் பகுதியில் மட்டும் பாஜக புறநகர் மாவட்டத் தலைவர் ரிஷிபால் கெரா மற்றும் கட்சியின் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் வினோத் குப்தா ஆகிய இருவரின்வீடுகளுக்கு முன்னால் விவசாயிகள் பக்கா தர்ணாக்களை நடத்தி வருகின்றனர்.

அக்டோபர் 2 வரை தங்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்று விவசாயிகள் அறிவித்துள்ள நிலையில், போராடும் விவசாயிகளின் கூடாரத்திற்கு, 20 கி.மீ. சுற்றளவிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை தொடர்ந்து கொடுத்து உதவுகின்றனர். பஞ்சாப் மாநில பாஜக-வினரோ எந்நேரமும் போராட்டத்தை எதிர்கொள்ள வேண்டிய பதற்றத்திலேயே உள்ளனர். தங்களின் அகில இந்தியத் தலைமை விரைந்து ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும்; அதுதான் தங்களுக்கும் நல்ல நாளாக இருக்கும் என்று கருதுகின்றனர்.

;