india

img

கொரோனா காலத்திலும் தனியார் கொள்ளை லாபம் ஈட்ட வசதிகளை செய்து கொடுத்த ஒன்றிய பாஜக அரசு.... மாநிலங்களவையில் சிபிஎம் எம்.பி.,எளமரம் கரீம் சாடல்....

புதுதில்லி:
கொரோனா வைரஸ் தொற்று காலத்தில்கூட, தடுப்பூசி தயாரித்திடும் தனியார் நிறுவனங்கள் கொள்ளை லாபம் ஈட்டுவதற்கே ஒன்றிய பாஜக அரசு வசதி செய்து தந்திருக்கிறது என்று மாநிலங்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் எளமரம் கரீம் சாடினார்.நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. செவ்வாய்க் கிழமையன்று மாநிலங்களவையில்  கொரோனா வைரஸ் பெருந்தொற்று, தடுப்பூசிக் கொள்கை அமலாக்கப்பட்ட விதம்மற்றும் மூன்றாவது அலை சவாலை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட வேண்டியநடவடிக்கைகள் குறித்து குறுகிய காலவிவாதம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு எளமரம் கரீம் பேசியதாவது:

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்காக முன்களப்பணியாளர்களாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கும் மருத்து வர்கள், சுகாதார ஊழியர்கள், ‘ஆஷா’ ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், காவல்துறையினர் முதலானவர்களுக்கு என்முதற்கண் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை நாட்டு மக்களின் உயிர்களைப் பெருமளவில் பறித்துள்ளது. கோவிட்- 19க்கு எதிராக உள்கட்டமைப்பு வசதிகள், ஆக்சிஜன், மருத்துவமனையில் படுக்கை வசதிகள் மற்றும் அத்தியாவசிய மருந்துகள் அளித்திருந்தால் உயிரிழப்புகளைக் கணிசமான அளவிற்குக் குறைத்திருக்க முடியும். மக்களின் துன்பதுயரங்கள் மீது அக்கறையற்ற தன்மை, மிகவும் கொடூரமான முறையில் இரக்கமற்ற நிலையில் ஒன்றிய அரசாங்கம் நடந்துகொண்ட விதம் இத்தகைய மோசமான நிலைமையை உருவாக்கியது. 

தடுப்பூசிக்கொள்கையிலும் பாகுபாடு
ஒன்றிய அரசாங்கம் தடுப்பூசிக் கொள்கையிலும் பாகுபாடு காட்டி வருவது நாடு தழுவியஅளவில் கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. அரசாங்கத்தின் தடுப்பூசி கொள்கை குறித்து கடும் எதிர்ப்பு எழுந்ததன் காரணமாக அது தன்னுடைய முந்தைய பிழையான மற்றும் பேரழிவு தரும் தடுப்பூசிக் கொள்கையை விலக்கிக் கொண்டது. அதன்பிறகு இப்போது அறிவித்துள்ள தடுப்பூசிக் கொள்கையிலும் உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகளில் 25 சதவீதத்தைத் தனியார் துறைக்கு ஒதுக்கியிருக்கிறது. அந்த தடுப்பூசிகள் சமூகத்தின் உயர்தர வர்க்கத்தினருக்குச் செல்லும். இது தனியார் மருந்து உற்பத்தியாளர்கள் கொள்ளை லாபம் ஈட்டுவதற்கு உரிமம் அளித்திருப்பதைத் தவிர வேறல்ல. நாட்டு மக்களுக்குப் போதிய அளவிற்குத் தடுப்பூசிகள் கிடைக்காது பற்றாக்குறை நிலவும் சமயத்தில், இதுபோன்றதொரு கொள்கையை ஒன்றிய அரசு தொடர்ந்து பின்பற்றுமானால் கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலையைத் தடுக்கக்கூடிய விதத்தில் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி வழங்கமுடியாது, இக்கொள்கையைப் பலவீனப்படுத்திடும்.

அனைத்துத் தடுப்பூசிகளையும் கொள்முதல் செய்து, விநியோகித்திடுக 
ஒன்றிய அரசாங்கம் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உற்பத்தி செய்யப்படும் அனைத்துத் தடுப்பூசிகளையும் கொள்முதல் செய்து, அனைத்து மாநிலங்களுக்கும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்து விநியோகித்திட வேண்டும்.  கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் குறித்து நம் நாட்டில் 2020 ஜனவரியிலேயே கண்டுபிடிக்கப்பட்டபோதிலும், முதல் அலை வந்த சமயத்தில் ஒன்றிய அரசாங்கம் அதனைக் கட்டுப்படுத்திட அவசரகதியில் செயல்படவில்லை. இரண்டாவது அலையானது, கிராமங்களுக்கும் மிகவும் வேகமாகப் பரவியது. கிராமங்களில் போதிய அளவிற்கு சுகாதார உள்கட்டமைப்பு வசதிகளோ, மருத்துவ வசதிகளோ இல்லாததன் காரணமாக, அது இள வயதினரை அதிகஅளவில் கடுமையாகப் பாதித்தது. அரசாங்கத்தின் தரப்பில் அளிக்கப்பட்டி ருக்கும் புள்ளிவிவரங்களைவிட 5-10 மடங்கு அதிக அளவில் இத்தொற்றால் பாதிக்கப்பட்டு மக்கள் மரணம் அடைந்திருக்கிறார்கள் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.  கொரோனா வைரஸ் தொற்றுக் காலத்தில் பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்திருக்கிறார்கள், தங்கள் வருமானங்களை இழந்திருக்கிறார்கள். வருமானத்தை இழந்த ஏழை மக்களுக்கு மானியம் எதுவும் அளிக்கப்படவில்லை. ஒன்றிய அரசின் இந்த அணுகுமுறை மாற்றப்பட வேண்டும். கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுத்திட அனைத்து மக்களுக்கும் தடுப்பூசிகள் உடனடியாக போடப்பட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். (ந.நி.)

;