india

img

முதல்வர் என்பதாலேயே அறிவுரை கூறும் தகுதி வந்து விடாது... உத்தரகண்ட் முதல்வருக்கு குவிந்த கண்டனங்கள்.....

டேராடூன்:
பெண்கள் முழுமையாக உடலை மறைக்கும் ஆடைகளைத்தான் அணிய வேண்டும்; ஜீன்ஸ் போன்ற உடைகளை அணியும் பெண்களால்தான் சமூகம் சீர்கெட்டுப் போகிறது என்று, உத்தரகண்ட் பாஜக முதல்வர் தீரத் சிங் ராவத் பேசியிருந்தது, கடும் கண்டனங்களுக்கு உள்ளாகி இருக்கிறது. 

அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் பலரும் தீரத் சிங் ராவத்தின் பேச்சைக் கண்டித்துள்ளனர்.தீரத் சிங் ராவத்தின் பேச்சு அதிர்ச்சி அளிப்பதாக, காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் கூறியுள்ளார்.“ஒருவரின் ஆடை குறித்து பேச யாருக்கும் உரிமை இல்லை. இது ஆணாதிக்க மனநிலையின் அடையாளம்” என்று ராவத்தை, பெண்கள் உரிமை ஆர்வலர் ஹீரா ஜங்பாங்கி கண்டித்துள்ளார்.“ராவத்தின் பேச்சு மிகவும் கேவலமான ஒன்றாகும். முதலமைச்சராக இருப்பதன் மூலமாகவே யாருடைய வாழ்க்கை முறை தேர்வுகள் குறித்தும்.. உணவுப் பழக்கம், உடைப் பழக்கம் குறித்தும் கருத்து தெரிவிக்கும் உரிமை ராவத்துக்கு வந்து விடாது” என்று காங்கிரஸ் தலைவர் கரிமா தசவுனி சாடியுள்ளார். 

சமாஜ்வாதி கட்சித் தலைவர்களில் ஒருவரும் எம்.பி.யுமான ஜெயாபச்சன் அளித்துள்ள பேட்டியில், “யார் பண்பட்டவர்கள், யார் பண்பட்டவர்கள் இல்லை என்பதை அணியும் உடைகளை வைத்தே நீங்கள் தீர்மானித்து விட முடியுமா, என்ன?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். “பாஜக முதல்வர் தீரத் சிங் ராவத்தின் பேச்சு, பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஊக்குவிக்கும் மனநிலை கொண்டது” என்றும், “இதுபோன்ற பேச்சுக்கள் ஒரு முதலமைச்சர் பேசக்கூடியது அல்ல!” என்றும் கூறியுள்ளார்.
உத்தரகண்ட் முதல்வரின் கருத்துக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி சற்று காட்டமாகவே பதிலளித்திருக்கிறார். ஆர்எஸ்எஸ் சீருடையுடன் தலைவர்கள் இருக்கும் புகைப்படங்களைப் பகிரிந்து.. “ஐயோ கடவுளே இவர்களின் முழங்காலும் தெரிகிறதே...” என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.உத்தரகண்ட் காங்கிரஸ் தலைவர் ப்ரீதம் சிங், “தீரத்தின் பேச்சு அவமானகரமானது... அவர் பெண்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.'

;