india

img

முஸ்லிம் எதிர்ப்பு தப்பெண்ணமே லட்சத்தீவு விவகாரத்திற்கு காரணம்.. ஒன்றிய அரசைச் சாடும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஒமேஷ் சைகல்....

புதுதில்லி:
முஸ்லிம்களுக்கு எதிரான தவறான எண்ணங்களும், ஒன்றிய அரசின் அறியாமையும்தான் லட்சத்தீவுகளில் பிரச்சனைகள் உருவாகக் காரணம் என்று ஐஏஎஸ் அதிகாரியும், லட்சத்தீவுகளின் முன்னாள்நிர்வாகியுமான ஒமேஷ் சைகல் கூறியுள்ளார்.
1982 முதல் 1985 வரை லட்சத்தீவு நிர்வாகத் தலைவராகவும், அதன்பின் தில்லியின் தலைமைச் செயலராகவும் பணியாற்றி ஓய்வுபெற்றவர் ஒமேஷ் சைகல். அவர்,‘தி வயர்’ ஏட்டிற்காக, பிரபல பத்திரிகையாளர் கரண் தாப்பருக்கு விரிவான நேர்காணல் ஒன்றை வழங்கி யுள்ளார். அதில் தற்போதைய லட்சத்தீவு விவகாரம் பற்றி, அவர் குறிப்பிட்டிருப்பதாவது:

“தற்போது முன்மொழியப் பட்டுள்ள லட்சத்தீவு மேம்பாட்டு ஒழுங்குமுறை விதிகள், லட்சத்தீவுகள் குறித்த அறியாமையையே பிரதிபலிக்கின்றன. இன்னும் மோசமான விஷயம் என்னவென்றால், அவர்களில் சிலர் முஸ்லிம்-விரோத தப்பெண்ணத்தை பிரதிபலிக் கிறார்கள்.லட்சத்தீவு விலங்குகள் பாதுகாப்பு விதிமுறைகளில் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தங்கள் மாட்டிறைச்சி மற்றும் மாட்டிறைச்சி பொருட்களை சேமித்து வைப்பது, கொண்டு செல்வது மற்றும் வாங்குவதைத் தவிர, மாடுகள், கன்றுகள், காளைகள் மற்றும் எருமைகளை படுகொலை செய்வதையும் தடைசெய்கின்றன. இந்த நடவடிக்கை களை கேலிக்குரியதாக நான் பார்க்கவில்லை. ஆனால், கால்நடை வதைக்கு எதிரான எந்தவொரு தடையும், தீவு மக்களின் பரந்துபட்ட ஆலோசனைக்குப் பிறகே மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும், அவர்களின் நடவடிக்கைகள் முஸ்லிம் எதிர்ப்பு தப்பெண்ண த்தை பிரதிபலிப்பதுதான் சிக்கல்.குறிப்பாக, மாட்டிறைச்சி மற்றும்கோழி இறைச்சியை மதிய உணவுக்கு வழங்குவதற்கு லட்சத்தீவு நிர்வாகத் தலைவர் விதித்த தடையை (இதை கேரள உயர்நீதி மன்றம் தற்போது தடுத்து நிறுத்தி யிருந்தாலும்) ஏற்க முடியாது. 

மக்கள் என்ன சாப்பிட வேண்டும்என்பதை தீர்மானிப்பது நிர்வாகியின் வேலை அல்ல. பள்ளிக் குழந்தைகளுக்கு ஒதுக்கப்பட்ட பட்ஜெட்டிற்குள் மதிய உணவுதர முடிகிறதா? என்பதைத்தான் பார்க்க வேண்டும். அவற்றின் கலவை மற்றும் உள்ளடக்கத்தில் அவர் தலையிட முடியாது.மக்கள் வசிக்கும் தீவுகள் என்று அழைக்கப்படும் இடங்களில் மது அருந்த அனுமதிக்கும் முடிவும் இதேபோன்றதுதான். தீவுவாசிகள், தங்கள் தீவுகளில் மது அருந்துவதை விரும்பவில்லை என்றால், அதனை உறுதிப்படுத்த அவர் களுக்கு உரிமை உண்டு. அதற்கு மாறாக, மதுவை அவர்கள் மீது திணிக்க நிர்வாகிக்கு ஒரு அவசியமும் இல்லை.

சமூக நடவடிக்கைகளைத் தடுக்கும் சட்டம் என்று அழைக்கப்படும் ஒரு புதிய தடுப்புக் காவல் சட்டமும் லட்சத்தீவுகளுக்குத் தேவையற்றது, ஏனெனில் இந்தியாவிலேயே மிகக் குறைந்த குற்றவிகிதத்தைக் கொண்டது லட்சத்தீவுகள்தான். அங்குள்ள மக்கள் இரவில்கதவுகளை கூட பூட்டுவதில்லை.இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றவர்கள் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்கும் விதிமுறைகள் புதிதாக லட்சத்தீவுகளில் கொண்டுவரப்பட்டு உள்ளன. லட்சத்தீவுக்கு சட்டமன்றம் இல்லாததால், தீவுகளில் உள்ள ஒரே ஜனநாயக அமைப்பு பஞ்சாயத்துகள்தான். ஆனால் அதனையும் கட்டுப்படுத்தும் வகையில் ஒரு சட்டம் தேவை யற்றது.புதிய மேம்பாட்டு ஆணைய ஒழுங்குமுறை விதிகள், நகைப்புக்குரியவை மட்டுமல்ல, அவற்றில் பல தில்லியில் இருந்து கடன் வாங்கப்பட்டுள்ளன. இது லட்சத்தீவுகளின் சூழ்நிலைக்குப் பொருந்தாது.லட்சத்தீவில் வளர்ச்சித் திட்டங்கள் எவ்வாறு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது குறித்து தற்போதைய அரசாங்கம் மட்டுமல்ல, முந்தைய அனைத்து அரசாங்கங்களுமே கவனமாக சிந்திக்கவில்லை. லட்சத்தீவுகளுக்கு பொருந்தாத மாதிரிகளையே அவர்கள் முன்மொழிகின்றனர்.

கடல் சார்ந்த வளர்ச்சி மாதிரிகள்தான் லட்சத்தீவுகளுக்கு பொருந்தும். அது இப்போதும் கவனத்தில் கொள்ளப்படவில்லை. கடந்த காலத்திலும் முயற்சிக்கப் படவில்லை.லட்சத்தீவில் முன்மொழியப் பட்ட மாற்றங்களை விமர்சித்து ஒன்றிய உள்துறை அமைச்சருக்கு மே 28 அன்று கடிதம் எழுதினேன். “வரைவு விதிமுறைகளை ஒரு நிமிடம் கூட லட்சத்தீவுகளில் நடைமுறைப்படுத்தக் கூடாது” என்று அந்தக் கடிதத்தில் எடுத்துரைத் திருந்தேன். ஆனால், தனக்கு இதுவரை எந்த பதிலும் இல்லை. கடிதத்தின் நகல் அமைச்சரவை செயலாளர் மற்றும் உள்துறைச் செயலாளர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர்களும் பதிலளிக்கவில்லை.

தனது கடிதத்திற்கு துணைச்செயலாளர் நிலை அதிகாரியிட மிருந்து ஒரு தொலைபேசி அழைப்பாவது வரும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அது கூட நடக்கவில்லை.இவ்வாறு ஒமேஷ் சைகல் குறிப்பிட்டுள்ளார்.மாட்டிறைச்சிக்குத் தடை என்ற பெயரில், லட்சத்தீவில் பால் பண்ணைகளை மூடவும், பள்ளிச் சிறார்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு திட்டத்தில் இருந்துஇறைச்சி வகைகளை நீக்கவும் யூனியன் பிரதேச நிர்வாகி பிரபுல் ஹோடா படேல் பிறப்பித்த 2 உத்தரவுகளுக்கு கேரள உயா்நீதிமன்றம் கடந்த செவ்வாய்க்கிழமை இடைக்காலத் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது. லட்சத்தீவு யூனியன் பிரதேசத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் அஜ்மல் அகமது தாக்கல் செய்த பொதுநல வழக்கில், கேரள உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ். மணிகுமார்,நீதிபதி ஷாஜி பி ஆகியோர் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

;