india

img

மற்றொரு முறை காற்றில் பறக்கவிடப்பட்ட விதிமுறைகள்.... தேசிய கூட்டு ஆலோசனைக்குழு கூட்டத்தில் அரசின் நடவடிக்கை குறித்து ஊழியர் தரப்பு விமர்சனம்....

புதுதில்லி:
அனைத்திந்திய அஞ்சல் மற்றும் ஆர்.எம்.எஸ்ஓய்வூதியர் அமைப்பின் பொதுச்செயலாளர் கே..ராகவேந்திரன், மாநிலப் பொதுச்செயலாளர் பி.மோகன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஒன்றிய அரசு ஊழியர்களின் சம்மேளனங்கள் மற்றும் ஒன்றிய அரசுக்கும் இடையே ஊழியர் பிரச்சனைகள் குறித்து விவாதித்து முடிவு காணும் பேச்சு வார்த்தை அமைப்பான “தேசிய கூட்டு ஆலோசனைக் குழு” (National Council of Joint Consultative Machinery) ஜூன் 26 அன்று ஒன்றிய அரசினால் கூட்டப்பட்டது.ஊழியர் தரப்பில் புதுதில்லியில் உள்ள  சிவகோபால் மிஸ்ரா (ஊழியர் தரப்பு செயலர்);எம்..ராகவய்யா (ஊழியர் தரப்புத் தலைவர்);சி.ஸ்ரீகுமார் (பாதுகாப்பு ஊழியர் சம்மேளனம்); ஆர்.என். பராசர் (தேசிய   ஊழியர் சம்மேளனம்) உட்பட சில முக்கியத் தலைவர்களும், கே.கே.என்.குட்டி (நிலைக்குழு உறுப்பினர்) உள்படப் பல தலைவர்கள் காணொலிக் காட்சி வாயிலாக நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்திற்கு முன்னதாக தனியே நடைபெற்ற ஊழியர் தரப்புக் கூட்டத்தில் மூன்று முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டிருந்தன. அந்த அடிப்படையில் ஆலோசனைக்கூட்டத்தில் ஊழியர் தரப்பின் கருத்துக்கள் அரசின் முன் வலியுறுத்தப்பட்டன. அவற்றில் முக்கியமானவை: அரசு தன்னிச்சையாக முடிவெடுத்துள்ள 41பாதுகாப்புத் துறை சார்ந்த ஆலைகளை 7 கார்ப்பரேசன்களாக மாற்றியமைக்கும் அரசின்முடிவு கடுமையாக எதிர்க்கப்பட்டது. ஏற்கனவேபல வாக்குறுதிகளை வழங்கியிருந்த அரசுஅவற்றை மீறும் வண்ணம் இந்த முடிவெடுத்துள்ளதை எதிர்த்து பாதுகாப்புத் துறை ஊழியர்களின் மூன்று சம்மேளனங்களும் வேலைநிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன. எனவே அரசுதன் முடிவுகளைக் கைவிட்டு போராட அறிவித்துள்ள ஊழியர் தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி மேற்கண்ட ஆலைகளை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து முடிவெடுக்கவேண்டும்.

1.1.2020 முதல் முடக்கப்பட்டுள்ள மூன்று தவணை கிராக்கிப்படி குறித்து  இக்கூட்டம் நல்ல முடிவை எடுக்கும் என்று லட்சக்கணக்கான ஊழியர்களும் ஓய்வூதியர்களும் ஆவலோடு காத்திருக்கின்றனர். பொருளாதாரம் முன்னேறி வருவதாக அரசே கூறிவரும் இந்நிலையில் முடக்கப்பட்ட DA/DR தொகையை ஊழியர்களுக்கும் ஓய்வூதியர்களுக்கும் வழங்குவதற்கான உத்தரவை அரசு வெளியிட வேண்டும்.புதிய பென்சன் திட்டத்தைக் கைவிட்டு அனைத்து ஊழியர்களையும் பழைய பென்சன் திட்டத்தின் கீழ் கொண்டு வரவேண்டும் என்று கோரி வருகிறோம். இதற்கிடையில் குறைந்தபட்சம் தங்கள் கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் என்பதை என்பிஎஸ் திட்டத்தின் கீழும் குறைந்த பட்ச பென்சனாக வழங்குவதற்கு ஏற்பாடு வேண்டும் என்று ஊழியர் தரப்பு கோரி வந்துள்ளோம். இதை அரசு உடனடியாகப் பரிசீலிக்க வேண்டும்.ஆலோசனைக்கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.முடக்கப்பட்ட மூன்று தவணை கிராக்கிப்படியை வழங்குவது குறித்து நிதியமைச்சகம் ஒன்றிய அமைச்சரவை ஒப்புதலைப் பெற நடவடிக்கை மேற்கொள்ளும் என்று அரசுத் தரப்பில் முடிவு கூறப்பட்டது. ஊழியர் தரப்பு நிலுவைத்தொகையை வழங்குவது குறித்து ஊழியர் தரப்போடு தனியே பேசவேண்டும் என்றும்; 1.1.2020-க்கும் 31-06.2021-க்கும் இடையில் பணி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு மேற்கண்ட கிராக்கிப்படியின் நன்மையை சேர்க்க வேண்டும்என்றும் கோரியுள்ளது.CGHS என்னும் ஒன்றிய அரசு சுகாதாரத்திட்டத்திற்கு வெளியில் உள்ள பகுதிகளில் வாழும் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு ஒரு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை உருவாக்கமைய அரசின் சுகாதார அமைச்சகம் பரிசீலிக்கும்.கொரோனாவால் உயிரிழக்கும் ஊழியர்களின் குடும்பத்தில் மற்றொருவருக்கு வேலை கொடுக்க அரசினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள 5 சதவீத பதவிகள் என்னும் உச்சவரம்பு நீக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையும்; பொருளாதார நிவாரணமாக 20 லட்சம் வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கையும் DOPT இலாகாவினால் பரிசீலிக்கப்படும்.

கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் வாய்ப்புள்ள மூடப்பட்ட பொதுத்துறை சார்ந்த மருத்துவ ஆலைகளைத் திறக்க ஒன்றிய சுகாதார அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.1.1.2004-க்குப் பின்னர் தேர்வான புதிய ஊழியர்களுக்கும் ஜிபிஎப் முறை அமலாக்க அரசு பரிசீலிக்கும்.7-வது ஊதியக்குழுவின் பின் அமைக்கப்பட்ட ஊதிய முரண்பாட்டுக் குழு அரசினால் கூட்டப்படும்.வேலைநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் விதவை மனைவிமார்களுக்கு கருணை ஓய்வூதியம் (Compassionate Pension) வழங்கும் பிரச்சனை பென்சன் அமைச்சகத்தின் பரிசீலனையில் உள்ளது.  80-வயதை எட்டிய பென்ஷனர்களுக்கு வருமான வரியில் இருந்து முழு விலக்கு அளித்தல் என்ற கோரிக்கை அரசின் நிதித்துறையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.நீதிமன்றத் தீர்ப்புகளை அனைவருக்கும் விரிவுபடுத்துதல் உள்ளிட்ட 7 இதர பிரச்சனைகள் DOPT செயலருடன் ஊழியர் தரப்பு விவாதிக்கும். 

இவ்வாறாகப் பல்வேறு முக்கியப் பிரச்சனைகளுக்கும் அரசின் இலாகாக்கள் அல்லது அமைச்சகங்கள் பரிசீலிக்கும் என்பதாக பதில்அளிக்கப்பட்டுள்ளதே தவிர, ஜேசிஎம் விதிகளின்படி கூட்டத்திற்கு வரும் முன்பே அரசுத்தரப்பு இதர இலாகாக்களுடன் தெளிவாகப் பேசியபின்னர் இறுதி பதிலுடன் தான் வரவேண்டும் என்ற விதி மறுபடியும் காற்றில் விடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;