india

img

இன்னொரு பொதுமுடக்கமா..? நம்ம நாடு தாங்காது... அலறல் அறிக்கை வெளியிட்ட ரிசர்வ் வங்கி...

புதுதில்லி:
இந்தியாவில், கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமெடுத்து உள்ளது. பிப்ரவரி மாதத்தில் கொரோனா பாதிப்புக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை நாளொன்றுக்கு 9 ஆயிரத்து 800 ஆக இருந்தது. இது தற்போது 40 ஆயிரத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 47 ஆயிரத்து 264 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 28 ஆயிரத்து 699 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. கர்நாடகத்தில் 2 ஆயிரத்து 10 பேருக்கும், கேரளத்தில் ஆயிரத்து 985 பேருக்கும், தமிழகத்தில் ஆயிரத்து 437 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. செவ்வாயன்று ஒரே நாளில்நாடு முழுவதும் 277 பேர் பலியாகியுள்ளனர்.தொற்று பரவலைத் தடுக்க நாட்டின் பல்வேறு பகுதிகளில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. பகுதி நேர ஊரடங்கு மற்றும் பொதுமுடக்கம் பற்றியும் ஆலோசிக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில், ரிசர்வ் வங்கி அறிக்கையொன்றைவெளியிட்டுள்ளது. அதில், தற்போதுள்ள நிலையில் மீண்டும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டால், அதை நாடு தாங்காது என்று எச்சரிக்கை செய்துள்ளது.

“தற்போது நாட்டின் பொருளாதார வளர்ச்சியைத் துரிதமாக்கும் கட்டாயமான சூழலில் இருக்கிறோம். தொடுதல் தொடர்பான சேவைகளைக் கொண்ட துறைகள் தீவிரமாக இயங்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்நிலையில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு, ஊரடங்கு, கட்டுப்பாடுகள் என்ற நிலை ஏற்படுமெனில் அதன் பாதிப்பை நிச்சயம் தாங்க முடியாது” என்று ரிசர்வ் வங்கியின் மாதாந்திர அறிக்கையில் துணை ஆளுநர் மைக்கேல் தேபபிரதா பத்ரா குறிப்பிட்டுள்ளார்.இதையே டூஷே வங்கியின் (Deutsche Bank) தலைமை பொருளாதார வல்லுநர் கவுசிக் தாஸூம் கூறியுள்ளார். ‘‘ரிசர்வ் வங்கிக் கணிப்புப்படி ஏப்ரல் - ஜூன் காலாண்டில் வருடாந்திர பொருளாதார வளர்ச்சி 26.2 சதவிகிதமாகக் கணிக்கப்பட்டு உள்ளது. இந்த விகிதம் மிகக் குறைவு. எங்களுடைய கணிப்பில் இது இன்னும் குறைவாக 25.5 சதவிகிதம்என்ற நிலையில் உள்ளது. இந்நிலையில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரிக்கும்பட்சத்தில் பொருளாதாரம் மோசமான பாதிப்பைச் சந்திக்கும்’’என்று அவர் தெரிவித்துள்ளார்.கொரோனா தொற்றுப் பரவலையொட்டி, நாட்டில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு, இன்றுடன் (மார்ச் 25) ஓராண்டு நிறைவு பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

;