india

img

காலத்தை வென்றவர்கள் : அன்னை லட்சுமி நினைவு நாள்...

1948-49ஆம் ஆண்டுகள் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மிகவும் சோதனையான ஆண்டுகள்! அடக்குமுறை பேயாட்சி தலைவிரித்தாடிய ஆண்டுகள். அன்னை லட்சுமியும்மகள் பாப்பாவும் கட்சி ஸ்தாபன வேலைக்கு உதவும் பொருட்டு தலைமறைவாகி சென்னை மாநில கமிட்டியின் தலைமறைவு அலுவலகத்தில் இணைக்கப்பட்டனர்.  

1950ஆம் ஆண்டு பிப்ரவரி 5ஆம்தேதியன்று தலைமறைவு இடம் போலீசுக்குத் தெரிந்து வீடு சுற்றி வளைக்கப்பட்டது. கதவின் சந்து மூலம் போலீஸாரைப் பார்த்த அன்னை லட்சுமி, தனது இடுப்பில் பத்திரமாக வைத்திருந்தசில விவரங்கள் இருந்த காகிதத்தைக்கிழித்து வாயில்போட்டு மென்று முடிக்கவும் கதவை உடைத்துக் கொண்டு போலீஸ் நுழையவும் சரியாக இருந்தது. ‘ஏன் கதவைத் திறக்காமல் இருந்தாய்’ என்று போலீஸ்காரர்கள் அன்னை லட்சுமியைப்பிடித்துத் தள்ளியதில் மல்லாக்காக விழுந்து மண்டையில் அடி, கையிலும் சிராய்ப்பு காயம்.  போலீஸாரைப் பார்த்ததும் உயரமானமாடியிலிருந்து பின்பக்கம் குதித்ததால்தோழர் உமாநாத்தின் கணுக்கால் எலும்பு முறிந்து அடி எடுத்து நடக்கமுடியாத நிலையில் அவரும் கைதானார். மற்ற தோழர்களுடன் பாப்பா உமாநாத்தும் முதல் நாள் பல்லாவரம் போலீஸ் நிலையத்திலும் மறுநாள் பரங்கிமலை போலீஸ் ஸ்டேஷன் லாக்கப்பில் வைக்கப்பட்டனர்.

மறுநாள் பிப்ரவரி 10ஆம்தேதி ஒவ்வொருவரும் தனித்தனியாக லாக்கப்பில் இருக்க வேண்டுமென கட்டாயஉத்தரவு.  மலபார் ஸ்பெஷல் போலீசும்,ரிசர்வ் போலீசும் ஏராளமாக வரவழைக்கப்பட்டு தடியடிப் பிரயோகம் நடத்தப்பட்டது. அனைவரும் தனித் தனியாக லாக்கப்பில் அடைக்கப்பட்டனர். இந்தக்கொடுமையை எதிர்த்து பிப்ரவரி 10ஆம்தேதி அனைவரும் உண்ணாவிரதம்மேற்கொண்டனர். உண்ணாநோன்பு ஆரம்பித்து ஒரு வாரமாகியதும்ஒவ்வொருவராக சென்னை மத்திய சிறைக்குகொண்டு சென்றார்கள். அன்னை லட்சுமியை அழைத்துப்போன 4 தினங்கள் கழித்து பாப்பா உமாநாத்தையும் கொண்டு போனார்கள். அன்னைலட்சுமி உண்ணாநோன்பின் 25ஆவது நாள் (மார்ச் 4) வீர மரணமடைந்தார். இறப்பதற்கு முன்பும் இறந்த பின்னரும்கூட மகள் பாப்பா உமாநாத்தால், பெற்றுஆளாக்கிய அன்னையைப் பார்க்கவே முடியவில்லை.

;