india

img

வேளாண் உள்கட்டமைப்பு நிதியம் - 3 வேளாண் சட்டங்கள் குறித்து பாஜக அரசு கூறிய அனைத்தும் பொய்யானவை.....

புதுதில்லி:
வேளாண் உள்கட்டமைப்பு நிதியம் மற்றும் மூன்று வேளாண் சட்டங்கள் தொடர்பாக ஒன்றியஅரசாங்கம் பொய்யானவற்றைக்கூறி மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறது என்று எஸ்கேஎம் என்னும் அனைத்து விவசாயிகள் முன்னணி (சம்யுக்த கிசான் மோர்ச்சா) கூறியிருக்கிறது.

அனைத்து விவசாய முன்னணி சார்பில் பல்பீர்சிங் ரஜேவால், டாக்டர் தர்ஷன் பால், குர்ணாம் சிங் சாருணி, ஹன்னன் முல்லா, ஜக்ஜித் சிங் தாலேவால், ஜோகிந்தர் சிங் உக்ரஹான், சிவகுமார் ஷர்மா, காக்காஜி, யுத்வீர் சிங்,யோகேந்திர யாதவ் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:பொதுமக்களை ஏமாற்றுவதற்காகப் போலியான வாக்குறுதிகளையும் மிகைப்படுத்தப்பட்ட எண்ணிக்கைகளையும் அவிழ்த்துவிடுவதில் கொஞ்சமும் சளைத்ததல்ல மோடி அரசாங்கம் என்பதை அனைவரும் அறிவோம். மோடி அரசாங்கத்தின் பொய்க்கதைகளுக்குப் பதிலாக உண்மை விவரங்களை கார்ப்பரேட் ஊடகங்கள்உட்பட அனைத்து ஊடகங்களும் வெளியிட வேண்டும் என்று கேட்டு கீழ்க்கண்ட உண்மை விவரங்களை அளிக்கிறோம்.

ஒரு லட்சம் கோடி ஒதுக்கீடு என்பது வெற்று உரையே
ஒன்றிய அமைச்சரவையின் கூட்டத்தில் வேளாண் உற்பத்தி சந்தைக் குழுக்களுக்கு (Agricultural Produce Market Committee)ஒரு லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இதனை ஊடகங்களும் பெரிதாக வெளியிட்டிருக்கின்றன. உண்மையில் அரசாங்கத்திடமிருந்து ஆயிரம் கோடி ரூபாய்கூட ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இது வெறுமனே ஒரு தலைப்பினை உருவாக்கி இருக்கிறது. அந்தத் தலைப்பின்கீழ் வங்கிகளில் கடன் பெறலாமாம். இந்தியா
வில் உள்ள வங்கிகள் பெரும் முதலாளிகளுடன்எந்த அளவிற்கு கூடிக்குலாவிக் கொண்டிருக்கிறது என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயம்தான்.

மோடி அரசாங்கம், கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான வேளாண் சட்டங்களை நிறைவேற்றிவிட்டு, வேளாண் உற்பத்தி சந்தைக் குழுக்களைஅதன்மூலம் முற்றிலுமாக நிலைகுலையச் செய்துவிட்டு, இப்போது அவை வங்கிகளிடமிருந்து கடன் பெறலாம் என்று கூறியிருப்பது வெற்று உரையேயாகும். கடந்த ஆறு மாதங்களில் அனைத்து வேளாண் உற்பத்தி சந்தைக் குழுக்களின் வர்த்தகமும் அநேகமாகப் பாதியளவுக்கும் கீழாகச் சென்று, தங்களுடைய வருவாயைக் கடுமையாக இழந்திருக்கின்றன. பொதுச் சந்தையை கட்டி விரிவுபடுத்துவதற்கோ அல்லது சிறு விவசாயிகள் பயன் பெறும் வகையில் கிடங்கு உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கித்தருவதற்கோ ஒன்றிய அரசாங்கம் எவ்வித உறுதிமொழியும் அளித்திடவில்லை. அது அதானிகள், வால்மார்ட்டு, ரிலையன்ஸ் முதலானவர்கள் தங்கள் தனியார் சந்தைகளையும்,பதப்படுத்தும் வசதிகளை ஏற்படுத்திக்கொள்ளவும், சேமிப்புக் கிடங்குகளை ஏற்படுத்திக்கொள்ளவும் வசதி செய்து தருவதற்குத் தான் உதவிசெய்துகொண்டிருக்கிறது.ஒன்றிய அரசாங்கம் இப்போது அறிவித்திருக்கிற வேளாண் உள்கட்டமைப்பு நிதியம் (Agriculture Infrastructure Fund) என்பது அதன் கார்ப்பரேட் ஆதரவு மூன்று வேளாண் சட்டங்களுக்கு முன்னோடியேயாகும். 

வேளாண் உள்கட்டமைப்புக்கு நிதி இல்லை
நாட்டிலுள்ள கிடங்குகளில் மூன்றில் ஒரு பங்கு ஏற்கனவே அதானிக்குச் சென்றுவிட்டது. அதானி சமீபத்தில் பிலிப்கார்ட்/வால்மார்ட் நிறுவனங்களுடன் உடன்பாடு ஏற்படுத்திக்கொண்டு நாட்டிலுள்ள கிடங்குகள் வசதியை முழுமையாகத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்திருக்கிறார். அதானியின்,அதானி அக்ரி லாஜிஸ்டிக்ஸ் லிமிடெட் (AALL-Adani Agri Logistics Limited) என்னும் நிறுவனம்இந்திய உணவுக் கழகத்துடன் பிரத்யேக பணி ஒப்பந்தம் (exclusive service agreement) செய்து கொண்டிருக்கிறது. அதே சமயத்தில் அதானி வில்மார் நிறுவனம் உணவுப் பதப் படுத்தும் முறைக்குள் நுழைந்திருக்கிறது. நாட்டின் உணவு விநியோக சங்கிலித் தொடரைஅதானி நிறுவனம் தன் முழு ஆதிக்கத்திற்குள் கொண்டுவர விரும்புகிறது.ஜனநாயக விரோதமான, அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமான வேளாண் சட்டங்களுக்கு எதிரக 2020 ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நாட்டின் பல பகுதிகளிலும் விவசாயிகள் போராட்டங்கள் நடைபெற்றன.வேளாண் உள்கட்டமைப்பு நிதியத்திற்கு அரசிடமிருந்து எவ்வித நிதி ஒதுக்கீடும் கிடையாது.ஒன்றிய அரசாங்கமும், வேளாண் அமைச்சரும் போராடும் விவசாயிகளை முட்டாள்கள் எனக்கருதக்கூடாது. அரசாங்கம் அவிழ்த்துவிடும் சரடுகளை எல்லாம் அவர்கள் நன்கு அறிவார்கள். உண்மையில் இந்த அரசாங்கம் விவசாயிகளின் நலன்கள் மீது எந்த அளவிற்கு அக்கறை வைத்திருக்கிறது என்பதையும் அவர்கள் நன்கு அறிவார்கள். மோடி அரசாங்கம் அவிழ்த்துவிடும் ஒவ்வொரு சரடையும் அவர்கள் நன்கு புரிந்து வைத்திருக்கிறார்கள்.

குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டம் இயற்றுக!
விவசாயிகளுக்கும் விவசாய கூட்டுறவு சங்கங்களுக்கும் அதிக கடன்கள் தேவையல்ல.மாறாக கடன்வலையிலிருந்து விடுதலையையே அவர்கள் கோருகிறார்கள். அவர்களின் உற்பத்திப் பொருள்களுக்கு சட்டரீதியாக உத்தரவாதம் அளிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதார விலையையே அவர்கள் கோருகிறார்கள். மோடிஅரசாங்கம் மூன்று வேளாண் சட்டங்கள் தொடர்பாக பொய் வாக்குறுதிகள் அளிப்பதை நிறுத் திக்கொள்ள வேண்டும் என்றும், அவற்றை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும்அனைத்து விவசாய முன்னணி கோருகிறது. இத்துடன் அனைத்து விவசாய உற்பத்திப் பொருள்களுக்கும் உத்தரவாதம் அளிக்கக் கூடிய குறைந்தபட்ச ஆதார விலையை அளிப்பதற்காக புதிய சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்றும் எஸ்கேஎம் கோருகிறது. இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.    (ந.நி.)

;