india

img

ஆப்கானிஸ்தான் வான்வெளி மூடப்பட்டது.... காபூலுக்கு ஏர் இந்தியா விமானங்கள் ரத்து..

புதுதில்லி:
ஆப்கானிஸ்தான் நாட்டின்பெரும்பகுதியைத் தலிபான்கள் கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதையடுத்து, அந்நாட்டின் வான்வெளி மூடப்பட்டு விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க,நேட்டோ படைகள் வெளியேறத் தொடங்கியபின், ஆப்கன் அரசுப் படைகளுக்கும், தலிபான் தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. ஏராளமான மக்கள், குழந்தைகள் கொல்லப்பட்டனர். அந்நாட்டில் உள்ள 34 மாகாணங்களில் முக்கியமான 15-க்கும் மேற்பட்ட மாகாணங்களைத் தலிபான் தீவிரவாதிகள்கைப்பற்றினர்.

தலைநகர் காபூல் நகரையும் தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து, அதிபர் அஷ்ரப் கானி நாட்டை விட்டு வெளியேறினார். அதிபர் மாளிகையைக் கையகப்படுத்திய தலிபான்கள் அங்கு குழுமியுள்ளனர்.காபூல் நகரில் உள்ள ஹமீது கர்சாய் விமான நிலையத்திலிருந்து பல்வேறு நாடுகளுக்குச் செல்லும் விமானத்தில் செல்ல மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. தலிபான்களிடம் சிக்கிச் சாவதைவிட, வேறு ஏதாவது நாட்டுக்குத்தப்பிவிடலாம் என மக்கள் வெளியேறிவருகின்றனர். இதனால் விமானநிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதைக் கட்டுப்படுத்த போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே ஆப்கன் வான்வெளியைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், திங்களன்று காபூல் சென்று, அங்கிருந்து இந்தியர்களை அழைத்துவரத் திட்டமிடப்பட்டிருந்த ஏர் இந்தியா விமான சேவை ரத்து செய்யப்பட்டது.இதுகுறித்து ஏர் இந்தியா தரப்பில் கூறுகையில், ‘‘ஆப்கானிஸ்தான் தனது வான்வெளி யை மூடிவிட்டதால், இந்தியாவிலிருந்து காபூல் நகருக்கு எந்தவித விமானங்களும் இயக்கப்படாது’’ எனத் தெரிவிக்கப்பட்டது. ஏர் இந்தியா விமானத்தின் ஏஐ126 என்ற சிக்காகோ நகர் செல்லும் விமானம் ஆப்கானிஸ்தான்வழியாகச் செல்லாமல், வளைகுடா நாடுகள்வான்வெளியைப் பயன்படுத்திச்செல்கின்றன.இதையடுத்து, கனடா, பிரிட்டன், ஜெர்மனி,பிரான்ஸ் ஆகிய நாடுகள் தங்கள் விமானங்களை 25 ஆயிரம் அடிக்கு மேல் பறக்க அறிவுறுத்தியுள்ளன. மறு அறிவிப்பு வரும்வரை காபூல் நகருக்கு விமானங்கள் இயக்கப் படாது எனத் தெரிவித்துள்ளன.

உலகம் எங்களை கைவிட்டுவிட்டது
முன்னதாக, ஏர் இந்தியா விமானம் ஏஐ244 என்ற சிறப்பு விமானம் ஞாயிறன்று காபூலில் இருந்து 129 ஆப்கன் மக்களுடன் நள்ளிரவு தில்லி வந்து சேர்ந்தது.தில்லி வந்து சேர்ந்த ஆப்கனைச் சேர்ந்தஒரு பெண் பயணி நிருபர்களிடம் கூறுகையில், ‘‘உலகம் எங்களை கைவிட்டுவிட்டது என்பதை என்னால் நம்பமுடியவில்லை. என்னுடைய நண்பர்கள் கொல்லப்படு வார்கள். தலிபான்கள் எங்களை கொன்றுவிடுவார்கள். எங்கள் பெண்களுக்கு இனிமேல் உரிமைகள் கிடைக்காது’’ எனத்தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தான் மாணவர்
பெங்களூரில் ஒரு கல்லூரியில் பிபிஏ படித்துவரும் காபூல் நகரைச் சேர்ந்த மாணவர் அப்துல்லா மசூதி கூறுகையில், ‘‘காபூல் நகரில் ஏராளமான மக்கள் வங்கி முன் பணம்எடுக்க காத்திருக்கிறார்கள். ஆனால், எந்த இடத்திலும் வன்முறை நடக்கவில்லை. ஆனால், வன்முறை இல்லை என்று கூற மாட்டேன். என்னுடைய குடும்பம் ஆப்கானிஸ்தானில்தான் இருக்கிறது. என்னுடைய விமானப் பயணம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டதால் நான் வெளியேறினேன். பலரும்காபூலில் இருந்து வெளியேறத் துடிக்கிறார் கள்’’ எனத் தெரிவித்தார். காபூல் நகரம் தலிபான்கள் வசம் வந்துவிட்டதையடுத்து, அங்கிருந்து ஏராளமான மக்கள், அரசியல் தலைவர்கள், முக்கிய விஐபிக்கள் தில்லி வந்தவாறு உள்ளனர். 

ஆப்கானிஸ்தான் அதிபரின் மூத்த ஆலோசகர் எம்பி ரிஸ்வானுல்லா அஹமதாசி தில்லிக்கு தப்பிவந்துள்ளார். அவர் கூறுகையில், ‘‘ஆப்கானிஸ்தானில் பெரும்பாலான பகுதிகளில் நிசப்தம் நிலவுகிறது. பெரும்பாலான அரசியல் தலைவர்கள் காபூல் நகரைவிட்டு வெளியேறிவிட்டனர். 200க்கும் அதிகமானோர் தில்லி வந்துள்ளனர். இந்த புதிய தலிபான்கள் ஆட்சி பெண்களுக்கு அதிகமானஉரிமைகளை வழங்குவார்கள் என நம்புகிறேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.

தில்லி வந்த ஆப்கன் பயணிகள்
இதற்கிடையே காபூல் நகரில் சிக்கி இருக்கும் இந்தியர்களை அழைத்துக் கொண்டு திங்களன்று காலை காபூலில் இருந்து மற்றொரு ஏர் இந்தியா விமானம் தில்லி வந்தது.காபூல் நகரம் தலிபான்கள் வசம் வந்தபோதிலும், இன்னும் இந்திய அரசு தனது தூதரகத்தை மூடவில்லை. அதுகுறித்து ஒன்றிய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இதற்கிடையே காபூலில் இருந்து அதிகமான மக்களை வெளியேற்ற வேண்டிய சூழல்ஏற்பட்டால், அங்கு செல்வதற்கு சி17 குளோப்மாஸ்டர் விமானம் தயார்நிலையில் உள்ளது. இதற்கிடையே காபூலில் உள்ள இந்தியத் தூதரகத்திற்கு ஏராளமான ஆப்கன் மக்கள் விசா கேட்டு விண்ணப்பித்துள்ளனர். மேலும்ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த இந்துக்கள், சீக்கியர்களை பாதுகாப்பாக இந்தியா அழைத்துவருவதை ஒன்றிய அரசு உறுதி செய்யும் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

;