india

img

இந்தியாவின் ஜிடிபி கணிப்பை குறைத்த ஏடிபி..... நடப்பு நிதியாண்டில் 10 சதவிகிதமாக இருக்கும்...

புதுதில்லி:
இந்தியப் பொருளாதார வளர்ச்சிதொடர்பான தனது கணிப்பை ஆசிய வளர்ச்சி வங்கி குறைத்துள்ளது. நடப்பு2021-22 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி 10 சதவிகிதமாக மட்டுமே இருக்கும் என்று கூறியுள்ளது.

2021-22 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 11 சதவிகிதமாக இருக்கும் என்று ஆசிய வளர்ச்சி வங்கி (Asian Development Bank) முன்பு கணித்திருந்தது.அண்மையில், இந்தியப் பொருளாதார வளர்ச்சி குறித்துப் பேசிய இந்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகரான கிருஷ்ண மூர்த்தி சுப்பிரமணியனும், நடப்பு நிதியாண்டில் 11 சதவிகித வளர்ச்சியை இந்தியா அடையும் என நம்பிக்கை தெரிவித்திருந்தார். கொரோனா இரண்டாம் அலையால் மிகப் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என அவர் கூறியிருந்தார்.

கடந்த 2021 ஜனவரி மாதத்தில் வெளியிடப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் 11 சதவிகித வளர்ச்சி இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், ஆய்வறிக்கை க்குப் பின்னர்தான் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் ஏற்பட்டதால், 11 சதவிகித வளர்ச்சி இலக்கை எட்ட முடியுமா என்ற சந்தேகம் இருந்தது. கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியனோ,  நிர்ணயித்தபடி 11 சதவிகித வளர்ச்சி இலக்கை இந்தியா கட்டாயம் எட்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.இதனிடையே, 2021-22 நிதியாண்டின் ஜூன் காலாண்டில் கொரோனா தொற்றின் 2-ஆவது அலை உச்சத்தை அடைந்து கடும் பாதிப்புகளை ஏற்படுத்திய நிலையில், 2021- 2022 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மதிப்பீட்டை ஆசிய வளர்ச்சிவங்கி 10 சதவிகிதமாககுறைத்துள்ளது. 10 சதவிகித வளர்ச்சி என்பது, இந்தியா போட்டிப்போடும் சக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி அளவை விடவும் குறைவு என்பது குறிப்பிடத் தக்கது.  2022-ஆம் நிதியாண்டில் நாட்டின் பணவீக்கம் 5.5 சதவிகிதம் வரையில் உயரும் என்றும் ஆசிய வளர்ச்சி வங்கி கணித்துள்ளது.

;