india

img

தமிழக அரசின் கோரிக்கை ஏற்பு:  கோவின் இணையதளத்தில் தமிழ் மொழி சேர்ப்பு....

புதுதில்லி:
கொரோனா தடுப்பூசி போட பதிவு செய்யும் கோவின் இணையதளத்தில் இந்தி,ஆங்கிலம் மொழிகள் மட்டுமே இருந்தன.தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகள் புறக்கணிக்கப்பட்டது. ஒன்றிய அரசின் இச்செயலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.
தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்த விவரங்களை அறிந்து கொள்வதற்கும், தடுப்பூசி போடப்பட்டுள்ள விவரங்களை அறிந்துகொள்வதற்கும் ஒன்றிய அரசு சார்பில் கோவின் என்ற இணையதளம் தொடங்கப்பட்டது. இது ஆண்ட்ராய்டு மொபைல் போன்களுக்கு ஏற்ற வடிவில் கோவின் என்ற செயலியாகவும் உள்ளது.  

மாநில மொழிகளை நீக்கியதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த பின்னரே , ஜூன்  4-ம் தேதியன்று பிற மாநில மொழிகளும் கோவின் இணையதளத்தில் சேர்க்கப்பட்டன. மேலும் 9 மொழிகளாக மராத்தி, மலையாளம், பஞ்சாப், தெலுங்கு, குஜராத்தி, அசாமி, வங்காளம், கன்னடா, ஒடியா ஆகிய மொழிகள் இடம்பெற்றன. ஆனால், அதில் தமிழ் மொழி இடம்பெற வில்லை. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கோவின் இணையதள பக்கத்தில் தமிழ் மொழி சேர்க்கப்படவேண்டும் என்று தமிழக அரசு சார்பில் ஒன்றிய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. 

இதையடுத்து, ஆங்கிலம், இந்தி தவிர மற்ற  மொழிகளை கோவின் செயலியில் இருந்து நீக்கிய ஒன்றிய அரசு 2 நாட்களில் தமிழ் மொழியும் சேர்க்கப்படும் என்று உறுதியளித்தது.  கோவின் இணையதளத்தில் மொத்தம் 12 மொழிகள் இடம்பெற்றுள்ளன. அதில், ஆங்கிலம், தமிழ்,  மலையாளம், இந்தி, மராத்தி, பஞ்சாபி, தெலுங்கு, குஜராத்தி, அசாமி, பெங்காலி, கன்னடம், ஒரியா ஆகிய மொழிகள் இடம்பெற்றுள்ளன.

;