india

img

நாட்டின் 78 சதவிகித பள்ளிகளில் இணையவசதி இல்லை.... பாஜக ஆளும் மாநிலங்களின் நிலைமை இன்னும் படுமோசம்....

புதுதில்லி:
கொரோனா தொற்றின் முதல் அலை துவங்கிய 2020 மார்ச் மாதத்திற்குப் பிறகு, தற்போதுவரை பள்ளி - கல்லூரிகளை திறக்க முடியவில்லை. அதற்குள் கொரோனா 2-ஆவது அலையும் வந்து விட்டது. 2021-22 கல்வியாண்டிலும் முன்புபோல கல்வி நிலையங்கள் செயல்படுமா? என்பது சந்தேகமாகவே உள்ளது. 

தொடர்ந்து ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடைபெறும் என்று அறிவித்துள்ள பல்வேறு கல்வி நிறுவனங்கள், அதனடிப்படையில் கல்விக் கட்டண வசூலிலும் தீவிரமாக இறங்கியுள்ளன.இந்நிலையில்தான், இந்தியாவில் 78 சதவிகித பள்ளிகளில் இணையதள வசதி இல்லை; 61 சதவிகித பள்ளிகளில் கணினிகளே கிடையாது என்ற உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஒன்றிய அரசின் கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பு (UDISE PLUS) நாட்டிலுள்ள 15 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்களைத் தொகுத்துள்ளது.

அதில்தான், கேரளா மற்றும் சில யூனியன் பிரதேசங்களில் 90 சதவிகித பள்ளிகளில் கணினி வசதி உள்ளது. தமிழ்நாடு (77%), குஜராத் (74%), மகாராஷ்டிரா (71%) ஆகிய மாநிலங்களில் அரசுப் பள்ளிகளை விட தனியார் பள்ளிகளில் கணினி வசதிகள் உள்ளன. சத்தீஸ்கர் (83%), ஜார்க்கண்ட் (73%) மாநிலங்களில் அரசுப் பள்ளிகளிலும்கூட கணினிகள் நிர்மாணிக்கப்பட்டு உள்ளன.ஆனால் பாஜக ஆளும் அசாம் (13%), மத்தியப்பிரதேசம் (13%), பீகார் (14%), திரிபுரா (15%), உ.பி. (18%) மற்றும் திரிணாமுல் ஆளும் மேற்குவங்கம் (14%) ஆகிய மாநிலங்களில் 5 பள்ளிகளுக்கு ஒரு பள்ளி என்ற விகிதத்தில் கூட கணினிகள் இல்லை என்பது தெரியவந்துள்ளது. 

அரசுப்பள்ளிகளில் நிலைமை இன்னும் மிக மோசமாக இருந்துள்ளது. அதிலும் இணையதள இணைப்பைப் பற்றி கூறவே வேண்டியதில்லை.நாட்டிலேயே, கேரளா (88 சதவிகிதம்), தில்லி (86%), குஜராத் (71%) ஆகிய மாநிலங்களில் மட்டுமே பாதிக்கும் அதிகமான பள்ளிகளில் இணையதள வசதி இருப்பதாக ஒன்றிய அரசின் கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பு (UDISE PLUS) தெரிவித்துள்ளது.

இதேபோல 84 சதவிகித பள்ளிகளில் நூலகங்கள் மற்றும் வாசிப்பு அறைகள் இருந்தாலும், அவற்றில் 69.4 சதவிகித பள்ளிகள் மட்டுமே புத்தகங்களைக் கொண்ட நூலகங்களாக இருப்பதாகவும் யுடிஐஎஸ்இ பிளஸ் கூறியுள்ளது.

;