india

img

ஐஐஎம்-களில் 60% இதர பிற்படுத்தப்பட்டவர்கள், தலித்துகள் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன.....

புதுதில்லி:
நாட்டில் உள்ள ஐஐஎம்-களில் 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தலித்துகளுக்கான பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக இருக்கின்றன. நாட்டில் உள்ள மத்தியப் பல்கலைக் கழகங்களில் 93 சதவீதத்தினருக்கும் மேற்பட்ட பழங்குடியினருக்கான பேராசிரியர் பணியிடங்களும் நிரப்பப்படாமல் காலியாக இருக்கின்றன.

இதேபோன்றே மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான பணியிடங்களில் பாதிக்கும்மேற்பட்டவையும், தலித்/பழங்குடியினருக்கான பணியிடங்களில் சுமார் 40 சதவீதப்பணியிடங்களும் நிரப்பப்படாமல் காலியாகஇருக்கின்றன.இந்த உண்மைகள் அனைத்தும் திங்கள்அன்று மக்களவையில் கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்கள் கேட்டிருந்த கேள்விக்கு மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிசாங்க் அளித்த பதிலில் கிடைத்த விவரங்களாகும்.
மற்றொரு கேள்விக்கு கல்வி அமைச்சர் அளித்துள்ள பதிலிலிருந்து மேலும் சில விவரங்கள் தெரிய வந்திருக்கின்றன. அவை வருமாறு:

மத்தியப் பல்கலைக் கழகங்களில், பேராசிரியர் பணியிடங்களைப் பொறுத்தவரை, காலியிடங்கள் அதிகமாகும். நாட்டிலுள்ள42 பல்கலைக்கழகங்களில் பழங்குடியினருக்கான உதவிப் பேராசிரியர் பணியிடங்கள்709 ஆகும். இதில் 500க்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. அதேபோன்று மொத்தம் பழங்குடியினருக்கான 137 பேராசிரியர் பணியிடங்களில் ஒன்பது இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டிருக்கின்றன. இதன்பொருள், 93 சதவீதப் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை என்பதாகும்.
மத்தியப் பல்கலைக் கழகங்களில் பணியாற்றும் 1,062 பேராசிரியர்களில் 1 சதவீதத்திற்கும் குறைவானவர்களே பழங்குடியினராவார்கள். அதேபோன்று இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கான உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் 2,206இல் 64 சதவீதமேநிரப்பப்பட்டிருக்கின்றன. இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 378 பேராசிரியர் பணியிடங்களில் 5 சதவீதம் மட்டுமே நிரப்பப்பட்டிருக்கின்றன.  (ந.நி.)

;