india

img

3 வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்கும் விவகாரம்.... மத்திய அமைச்சரவையின் முன்மொழிவு பாஜக அரசின் நாடகமே....

புதுதில்லி:
மூன்று வேளாண் சட்டங்களையும் 18 மாதங்களுக்கு நிறுத்தி வைப்பதற்கு மத்தியஅமைச்சரவை முன்மொழிவினை அளித்திருப்பதாகக் கூறுவது சட்டப்படி நிலையானதல்ல என்று அகில இந்திய விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சங்கத்தின் அகில இந்திய தலைவர் டாக்டர் அசோக் தாவ்லே,  பொதுச் செயலாளர் ஹன்னன்முல்லா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மூன்று வேளாண் சட்டங்களை மத்தியஅமைச்சரவை 18 மாதங்களுக்கு நிறுத்திவைத்திட முன்மொழிந்திருப்பதற்கு சட்டஅனுமதி ஏதேனும் உண்டா என்று விளக்கவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை அகில இந்திய விவசாயிகள் சங்கம் கேட்டுக் கொள்கிறது. அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மையத்திற்குக் கிடைத்துள்ள சட்டரீதியான கருத்தின்படி, “மத்தியஅரசாங்கம் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டத்தை நிறுத்தி வைத்திடவோ அல்லது சஸ்பெண்ட் செய்திடவோ அதிகாரம் எதுவும் பெற்றிருக்கவில்லை. நாடாளுமன்றத்திற்கு மட்டும்தான் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டத்தை திருத்தவோஅல்லது ரத்து செய்யவோ அதிகாரம்உண்டு. எனவே, மத்திய அமைச்சரவையின் முன்மொழிவு நாடாளுமன்றத்தின் அதிகாரங்களை மீறும் மற்றும் ஆக்கிரமிக்கும் செயலாகும் என்றும் இது சட்டத்தின்படி நிலைக்கத்தக்கதல்ல” என்றும் கூறுகிறது.

மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதற்கான கோரிக்கையானது அனைத்து சட்ட அம்சங்களையும் கலந்தாலோசனை செய்தபின் உருவாக்கப்பட்டது. இந்தக் கோரிக்கையை நீர்த்துப்போகச் செய்ய முடியாது.மூன்று வேளாண் சட்டங்களின் அமலாக்கத்தையும் உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்திருப்பதால், மத்திய அரசாங்கம் அதனை அமல்படுத்துவது தொடர்பாக எதுவும் செய்யமுடியாத நிலையில் இருக்கிறது. இப்போது 18 மாதங்களுக்கு நிறுத்திவைத்திட அரசாங்கம் ஒப்புக்கொள்ளும் போது, அதனை ரத்து செய்வதற்கு அது ஏன்ஒப்புக்கொள்ள முடியாது என்றும், விவசாயிகளின் நலன்களைப் பாதுகாப்பதற்காக ஏன் புதிய சட்டங்களை இயற்றக்கூடாது என்றும் கேட்கிறோம்.இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

;