india

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்...

வங்கமொழி நடிகர்களை வளைத்துப் பிடிக்கும் பாஜக!

மேற்குவங்கத்தில் நடிகர்- நடிகையரை கட்சிக்கு இழுப்பதில் திரிணாமுல், பாஜக போட்டா போட்டியில் இறங்கியுள்ளன. கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி, வங்கமொழி நடிகர்கள் ராஜ் சக்ரவர்த்தி, காஞ்சன் மல்லிக், சயோனி கோஷ் உள்ளிட்டோர் 2 நாட்களுக்கு முன்பு, முதல்வர் மம்தா பானர்ஜி முன்னிலையில் திரிணாமுல் கட்சியில் சேர்ந்தனர். இந்நிலையில், பிரபல நடிகை பாயல் சர்காரை, பாஜக வளைத்துப் போட்டுள்ளது. மாநில தலைவர் திலீப் கோஷ் முன்னிலையில் பாயல் பாஜக-வில் இணைந்துள்ளார். நடிகர் யாஷ் தாஸ்குப்தா, கிரிக்கெட் வீரர் அசோக் டிண்டாவும் பாஜக-வில் சேர்ந்துள்ளனர்.

                                                  *************************

கோட்சே சிலை வைத்தவர் காங்கிரசில் இணைந்தார்..

“மகாத்மா காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சேவைப் பின்பற்றுவேன், அவரின் கொள்கைகளை மக்களிடம் பரப்புவேன்” என்றதுடன், அவருக்கு கோயில் கட்டி சிலை வைத்தவர் பாபுலால் சவுராஸியா. ம.பி. மாநிலத்தைச் சேர்ந்த இவர், முன்னாள் முதல்வர் கமல்நாத் முன்னிலையில், திடீரென காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். “நான் இந்து மகா சபையில் இருந்தபோது, கோட்சேவை வழிபட வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டேன். ஆனால், தொடக்கத்தில் இருந்தே நான் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவன். இப்போது மீண்டும் அந்தக் குடும்பத்துக்கே சென்றுள்ளேன்” என்று சவுராஸியா பேட்டி அளித்துள்ளார்.

                                                  *************************

சித்தராமையாவை  ராமரின் சாபம் சும்மா விடாது!

“பசுக்களின் சாபத்தாலேயே கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்தது. சித்தராமையாவும் முதல்வர் பதவியை  இழந்தார். தற்போது ராமர் கோவில் கட்டுவது குறித்து சித்தராமையா கணக்கு கேட்டு வருகிறார். அடுத்து ராமரின் சாபமும் சித்தராமையா- காங்கிரசை சும்மா விடாது. நாட்டில்  காங்கிரஸ் கட்சி காணாமல் போகும் நிலை ஏற்படும்” என்று கர்நாடக மாநில பாஜக அமைச்சர் ஈசுவரப்பா கூறியுள்ளார். “கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனது சொந்த மாவட்டமான மைசூருவிலேயே சித்தராமையா தோல்வி அடைந்ததை மறந்து விடக்கூடாது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

                                                  *************************

மராட்டியத்திலும் ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி?

“புதுச்சேரியில் பாஜக-வின் தவளைகள், தாமரையை நாடும் வண்டுகளாகி விட்டன. இதனால் புதுவை நாராயணசாமி அரசு கவிழ்க்கப்பட்டது. அதே பாணியில் மகாராஷ்டிரா கூட்டணி அரசை கவிழ்க்க ஆபரேஷன் லோட்டஸை செயல்படுத்த பாஜக திட்டமிட்டுள்ளது. பாஜக அல்லாத மாநில அரசுகளை கலைக்க எம்.எல்.ஏ.க்களை மிரட்டும் வகையில் மத்திய ஏஜென்சிகளான சிபிஐ, அமலாக்கப் பிரிவு, வருமான வரித்துறை ஆகியவற்றை ஏவி விடுகிறது பாஜக. பாஜக-வின் இந்த அணுகுமுறை ஜனநாயகத்துக்கு ஆரோக்கியமானது அல்ல!” என்று சிவசேனா குறிப்பிட்டுள்ளது.

                                                  *************************

மக்களைப் பிளவுபடுத்திக் கொண்டிருப்பது பாஜகதான்..

“ராகுல் காந்தி வட இந்தியர்களை அவமதித்து விட்டதாக பாஜக கூறுகிறது. எந்த சூழலில் ராகுல் பேசினார் என்பது எனக்குத் தெரியாது. என்னைப் பொறுத்தவரை அனைத்து வாக்காளர்களையும் நாம் மதிக்க வேண்டும் யாருக்கு, எதற்காக வாக்களிக்க வேண்டும் என்று மக்களுக்கு தெரியும். அதற்காக, காங்கிரஸ் இந்தியாவைப் பிரித்து ஆள முயல்வதாக பாஜக கூறுவது கேலிக்கூத்தானது. மோடி அரசு ஆட்சிக்கு வந்தது முதலே மக்களைப் பிளவுபடுத்திக் கொண்டுதான் இருக்கிறது” என்று காங்கிரஸ் மூத்தத் தலைவர் கபில் சிபல் கூறியுள்ளார்.

;