india

img

217 சதவீதம்.... 6 ஆண்டுகளில் அதிகரித்த பெட்ரோலிய வரிகள்....

புதுதில்லி:
மத்திய அரசு, பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலைகளை மீண்டும் உயர்த்தி இருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் அது மேலும் கூறியிருப்பதாவது:

இவ்வாறு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் மீதான கலால் வரிகள் உயர்வு என்பது, சர்வதேச சந்தையில் எண்ணெய் விலைகள் வீழ்ச்சி அடைந்திருக்கும் சமயத்தில் வந்திருக்கிறது. சர்வதேச சந்தையில் பெட்ரோலின் அடிப்படை விலை 2014இல் ரூ. 47.12 ஆகவும், 2021இல் ரூ.29.34 ஆகவும், அதாவது சுமார் 50 சதவீதம், வீழ்ச்சி அடைந்திருக்கிறது.பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வுக்குப் பிரதான காரணம், அவற்றின்மீது மத்திய அரசாங்கம் கட்டுப்பாடு எதுவுமின்றி கலால் தீர்வைகளை உயர்த்திக்கொண்டே இருப்பதாகும். இன்றையதினம் அது பெட்ரோலின் அடக்கவிலையைக் காட்டிலும் 38 சதவீதம் அதிகமாக இருக்கிறது. மேலும் மத்திய அரசின் வரிவிதிப்பும், மோடி அரசாங்கம் 2014இல் ஆட்சிப் பொறுப்பை ஏற்றபின் இதுவரையிலும் 217 சதவீதம் அதிகரித்திருக்கிறது.

இந்த உயர்வுகள் கார்ப்பரேட்டுகளுக்கும் வருமான வரி செலுத்துவோருக்கும் அளித்துள்ள வரிச் சலுகைகள் காரணமாக, அரசாங்கத்திற்கு வரவேண்டிய வருவாய்களில் இழப்பு ஏற்பட்டிருப்பதைச் சரி செய்வதற்காகவே என்பது தெளிவாகத் தெரிகிறது. கார்ப்பரேட்டுகளுக்கும் வருமான வரி செலுத்துவோருக்கும் 2020-21 பட்ஜெட்டில் 5.47 மற்றும் 5.61 லட்சம் கோடி ரூபாய்கள் வரிச் சலுகை அளிக்கப்பட்டிருந்ததைக் காட்டிலும், இந்த ஆண்டு அவர்களுக்கு முறையே 6.81 மற்றும் 6.38 லட்சம் கோடி ரூபாய்கள் வரிச் சலுகைகள் அளிக்கப்பட்டிருக்கின்றன.

மோடி அரசாங்கம், கார்ப்பரேட்டுகளுக்கு அளித்துவரும் சலுகைகளை, சாமானிய மக்கள் மீது  கலால் தீர்வைகள் மூலம் மேலும் சுமைகளை ஏற்றிச் சரி செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறது.    ஏற்கனவே  கொரோனா வைரஸ் தொற்றாலும், பொருளாதார மந்தத்தாலும் கடும் தாக்குதல்களுக்கு ஆளாகியுள்ள மக்கள் மீது மேலும் சுமைகளை ஏற்றியிருக்கிறது.மேலும், பெட்ரோலியப் பொருட்கள் மீதான விலை உயர்வுகள், போக்குவரத்துக் கட்டணங்களை மேலும் அதிகரித்திடும். அதன் காரணமாக அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தின் விலைகளும் உயரும். இவற்றால் ஏற்படும் பணவீக்கம் பொருளாதார மந்தத்தை மேலும் மோசமாக்கிடும்.

இவ்வாறு மத்திய அரசு பெட்ரோலியப் பொருட்களின் மீது உயர்த்தியுள்ள கலால் தீர்வைகளைத் திரும்பப் பெற வேண்டும் என்று கோரி கிளர்ச்சி இயக்கங்களை நடத்திடுமாறு நாட்டிலுள்ள அனைத்துக் கட்சிக் கிளைகளுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு அறைகூவி அழைக்கிறது.இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் தெரிவித்துள்ளது.(ந.நி.)

;