india

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்...

வைப்பதற்கு இடமில்லை... வெள்ளி செங்கற்கள் போதும்!

நாடு முழுவதும் நன்கொடையாளர்களி டமிருந்து நான்கு குவிண்டால் (400 கிலோ) அளவுக்கு வெள்ளி செங்கற்கள் (silver bricks) நன்கொடை கிடைத்திருப்பதாகவும், தற்போது இவற்றைச் சேமித்து வைப்பதே மிகவும் கடினமான பணியாக இருப்பதால், நன்கொடை கொடுக்க விரும்புபவர்கள் அதைப் பணமாக வழங்குமாறும் ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் வேண்டுகோள் விடுத்துள்ளார். ரூ. 1100 கோடி பட்ஜெட் இலக்கைத் தாண்டி, ராமர் 
கோயிலுக்கு இதுவரை மட்டும் ரூ. 1511 கோடி வசூலாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

                                                                         ***********************

விலைவாசி உயர்வால் ஏழைமக்கள் அவதி!

“மத்திய அரசு பிப்ரவரி 1 அன்று பட்ஜெட் தாக்கல் செய்தது. அதன்பிறகு இரும்பு, சிமெண்ட், பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர் விலை உயர்ந்து உள்ளது. இந்த விலை உயர்வுகளால் சாதாரண மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். மத்திய அரசு இதில் உடனடியாக தலையிட்டு விலையை குறைக்க வேண்டும்” என்று மகாராஷ்டிர துணைமுதல்வர் அஜித் பவார் வலியுறுத்தியுள்ளார். மகாராஷ்டிராவில் ஒரு சில இடங்களில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ தாண்டிவிட்டது குறிப்பிடத்தக்கது.

                                                                         ***********************

கால்நடைகளுக்கு  தனி ஆம்புலன்ஸ் வசதி!

உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் போன்ற ஏனைய பாஜக ஆளும் மாநிலங்களைப் போல, கர்நாடகத்திலும் பசுவதைத் தடை சட்டம் அமலுக்கு வந்துள்ளது. பசுவதைத் தடை சட்டத்தை மீறுபவருக்கு 7 ஆண்டு சிறையும், ரூ.1 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும் என்று எடியூரப்பா அரசு கூறியுள்ளது. இதனிடையே, கால்நடைகளை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கென தனி ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தப்பட உள்ளதாக அம்மாநில கால்நடைத்துறை அமைச்சர் பிரபு சவான் அறிவித்துள்ளார்.

                                                                         ***********************

கொரோனாவுக்கு மருந்து அடம்பிடிக்கும் ராம்தேவ்..

பதஞ்சலி நிறுவன முதலாளியும் சாமியார் என்று சொல்லிக் கொள்பவருமான ராம்தேவ், கடந்த 2020 ஜூன் மாதமே, கொரோனாவுக்கு ‘கொரோனில் மற்றும் ஸ்வாசாரி’ என்றஆயுர்வேத மருந்தை அறிமுகப்படுத்தினார். இது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்பதால், மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து கொரோனாவை தடுக்கும் நோய் எதிர்ப்பையே இந்த மருந்து தருகிறது என்று பின்வாங்கினார். எனினும் அடங்காத அவர், கொரோனா மருந்து குறித்த முதல் அறிவியல் ஆய்வுக் கட்டுரை என ஒன்றை, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், மத்திய அமைச்சர் நிதின் கட்காரி ஆகியோர் முன்னிலையில் தற்போது வெளியிட்டுள்ளார்.

                                                                         ***********************

அமித்ஷா மகனுக்கு எப்படி இவ்வளவு பணம் வந்தது?

“பாஜக மூத்த தலைவர் அமித்ஷா இங்கே வந்தார். சாகர் தீவுக்குச் சென்றார். கங்கா சாகர்பகுதியின் வளர்ச்சிக்காக நாம் எதுவும் செய்யவில்லை என்று குற்றம்சாட்டினார். ஒவ்வொரு நாளும் அவர் எனக்கு சவால் விடுகிறார். நான் அவருக்கு சவால் விட விரும்புகிறேன். அமித்ஷாவின் மகன் ஜெய்ஷாவுக்கு இவ்வளவு பணம் எங்கிருந்து வருகிறது? பிசிசிஐ-யின் உயர்ந்த பதவியில் இருப்பதற்கு ஜெய்ஷாவுக்கு என்ன தகுதி இருக்கிறது? என்று கேட்கிறேன். அமித்ஷா என்னை அவதூறாக பேச
லாம். ஆனால், என்னை புறக்கணிக்க முடியாது” என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆவேசப்பட்டுள்ளார்.

;