india

img

தீக்கதிர் சில வரிச் செய்திகள் ...

பாஜக-வுக்கு செல்லவில்லை: மிதுன் சக்கரவர்த்தி மறுப்பு!

மேற்குவங்கத்தைச் சேர்ந்த பாலிவுட் திரைப்பிரபலம் மிதுன் சக்கரவர்த்தியை, மும்பையிலுள்ள அவரது வீட்டிற்கே சென்று, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் சந்தித்தார். இதையடுத்து அவர் பாஜக-வில் சேரவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், எதையும் யூகிக்காதீர்கள்; அப்படியான எதுவும் நடைபெறவில்லை என்று நடிகர் மிதுன் சக்கரவர்த்தி மறுத்துள்ளார். திரிணாமுல் காங்கிரசில் எம்.பி.யாக இருந்த மிதுன் சக்கரவர்த்தி, சாரதா நிதிநிறுவன மோசடி வழக்கில் சிக்கியதற்குப் பின், தீவிர அரசியலிலிருந்து ஒதுங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

                                                                                 *******************

தேசத்துரோக வழக்கை ரத்து செய்யுங்கள்..!

பாஜக ஆதரவு நடிகையான கங்கனா ரணாவத், இரு தரப்பினரிடையே வெறுப்பை தூண்டும்வகையில், டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாக கூறி, முன்னாவர் அலி சையது என்பவர் காவல்துறையில் புகார் அளித்திருந்தார். அதன்பேரில் கங்கனா மீது மும்பை போலீசார் தேசத்துரோக வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் ‘டுவிட்டரில் கருத்துச் சொல்வது வன்முறை ஆகாது’ என்றும், தன்மீதான தேசத்துரோக வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும் கங்கனா மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு 26-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

                                                                                 *******************

கழிப்பறை இல்லையென வேட்பு மனு தள்ளுபடி!

அகமதாபாத் மாவட்ட ஊராட்சி வார்டில் போட்டியிட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கிரினா பட்டேல் என்ற பெண் வேட்புமனு தாக்கல் செய்து இருந்தார். இவரது சொந்த ஊர் கன்பா கிராமம் என்றாலும், நரோடா என்ற இடத்திலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தற்காலிகமாக குடியிருந்து வந்தார். இந்நிலையில் வேட்புமனு பரிசீலனையின்போது, கிரினாவின் கன்பா கிராமத்திலுள்ள வீட்டில் கழிப்பறை இல்லாததால், அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று பாஜக வேட்பாளர் கோரிக்கை விடுத்தார். தேர்தல் அதிகாரியும் இதை ஏற்று, கிரினாவின் வேட்புமனுவை தள்ளுபடி செய்துள்ளார்.

                                                                                 *******************

வீட்டுச்சிறைதான் புதிய ஜனநாயகமா?

“நான், எனது தந்தையும் எம்.பி.யுமான பரூக் அப்துல்லா உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளோம். இதுதான் புதிய ஜனநாயகமா?” என்று ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா மத்திய பாஜக அரசுக்கு கேள்வி எழுப்பிஉள்ளார். “எவ்வித விளக்கமும் அளிக்காமல் எங்களை வீட்டுக் காவலில் வைத்தது ஏன்?” என்றும் அவர் கேட்டுள்ளார்.

                                                                                 *******************

பாஜக-வை இலங்கையில் தொடங்க விட மாட்டோம்...

இலங்கை, நேபாளம் ஆகிய நாடுகளிலும் பாஜக கிளை துவங்கப்படும் என்று அமித்ஷா தன்னிடம் கூறியதாக திரிபுரா பாஜக முதல்வர் பிப்லப் தேவ் குமார் கூறியிருந்தார். இந்நிலையில், பாஜகவினரின் இந்த காமெடியையும் சீரியசாக எடுத்துக்கொண்டு இலங்கை தேர்தல் ஆணையர் நிமல் புஞ்சிவேவா பதிலளித்துள்ளார். “எந்தவொரு இலங்கை அரசியல் கட்சிகளும் அல்லது குழுவும் வெளிநாடுகளில் உள்ள எந்தவொரு கட்சியுடனும் அல்லது குழுவுடனும் வெளிப்புற தொடர்புகளை வைத்திருக்க அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால் வெளிநாட்டு அரசியல் கட்சிகள் இங்கு செயலாற்ற இலங்கை தேர்தல் சட்டங்கள் அனுமதிக்கவில்லை” என்று புஞ்சிவேவா தெரிவித்துள்ளார்.

;