india

img

கிராமப்புற மக்களைப் பாதுகாத்த 100 நாள் வேலைத்திட்டம்.... 11 மாதங்களில் 7.17 கோடி குடும்பங்கள் - 10.5 கோடி தனிநபர்கள் பயனடைந்தனர்....

புதுதில்லி:
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முதலாவது ஆட்சிக் காலத்தில், 61 எம்.பி.க்களைப் பெற்றிருந்த இடதுசாரிக் கட்சிகளின் முன்முயற்சியில் கொண்டுவரப்பட்டது, மகாத்மா காந்தி ஊரக வேலையுறுதி அளிப்புச் சட்டம் அல்லது நூறுநாள் வேலைத் திட்டமாகும்.

கிராமப்புற வறுமையைப் போக்குவதற்காக, அங்குள்ள மக்களுக்கு ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை கிடைப்பதை உத்தரவாதப்படுத்தும் நோக்குடன் இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆரம்பத்தில் வேண்டா வெறுப்பாகவே இந்த சட்டத்தை ஆட்சியாளர்கள் அமல்படுத்தினர். வேலைகளை உருவாக்காமலும், வேலைநாட்களை குறைத்தும், நிர்ணயிக்கப்பட்ட கூலி வழங்காமலும் திட்டத்தை சீர்குலைக்க முயன்றனர். ஆனால், இடதுசாரிகளின் தலைமையில் தொடர்ச்சியான போராட்டம் நடத்தி, கிராமப்புற விவசாயத் தொழிலாளர்கள் நூறுநாள் வேலைத் திட்டத்தை பாதுகாத்தனர். மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, நூறுநாள் வேலைத்திட்டத்தை முற்றிலுமாகவே ரத்து செய்யும் முயற்சி நடந்தது. ஆனால், அதனையும் தொழிலாளர்கள் முறியடித்தனர். இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை மட்டும் கொஞ்சம் கொஞ்சமாக மோடி அரசு குறைத்து வந்தது.இதற்கும் கொரோனா காலத்தில் ஒரு முற்றுப்புள்ளி ஏற்பட்டது. நாட்டில் வேலைவாய்ப்பையும், மக்களின் கைகளில் பணப்புழக்கத்தையும் அதிகரிக்க நூறுநாள் வேலைத்திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளான மோடி அரசு அதற்கான நிதி ஒதுக்கீட்டையும் வேறுவழியே இன்றி அதிகப்படுத்தியது. அதற்கு பயனும் கிடைத்தது. கொரோனா நெருக்கடி சூழலில், நூறுநாள் வேலைத்திட்டத்தால், நாடு முழுவதும் பல கோடிப் பேர்களுக்கு வேலை கிடைத்தது. அவர்கள் பட்டினியிலிருந்து காப்பாற்றப்பட்டனர்.இந்நிலையில், நூறுநாள் வேலைத் திட்டம் மூலமாகத்தான், கிராமப்புறங்கள் காப்பாற்றப்பட்டதற்கான புள்ளிவிவரங்களும் தற்போது வெளியாகியுள்ளன.

ஒவ்வொரு மாதமும் சுமார் இரண்டு கோடி அல்லது அதற்கு மேற்பட்ட குடும்பங்கள் கிராமப்புற வேலை உத்தரவாதத் திட்டத்தில் பயனடைந்து கொண்டிருக்கின்றன.நடப்பு நிதியாண்டில் இன்று வரை சுமார் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் முழு 100 நாள் வேலைவாய்ப்பை பெற்றுள்ளன. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கொரோனா உச்சத்தில் இருந்தபோது நூறுநாள் வேலைத் திட்டத்தில் எத்தனை லட்சம் பேர் வேலை பெற்றார்களோ, அந்த எண்ணிக்கை 2021 ஆம் ஆண்டு பிறந்தும் அப்படியே தொடர்கிறது. 

2020 ஏப்ரல் முதல் 2021 பிப்ரவரி 17 வரை, 7 கோடியே 17 லட்சம் குடும்பங்கள் (10 கோடியே 51 லட்சம் தனிநபர்கள்) நூறுநாள் வேலைத்திட்டத்தில் பணிவாய்ப்பு பெற்றுள்ளனர்.கடந்த 2020 ஜூனில், 3 கோடியே 89 லட்சம் குடும்பங்கள் நூறுநாள் வேலைத்திட்டத்தில் பதிவு செய்திருந்தன. இது 2019 ஜூன் மாதத்தை விட 80 சதவிகிதம் அதிகமாகும். இதேபோல 2020 ஜூலையில் வேலைபெற்ற தொழிலாளர்களின் எண்ணிக்கை 2 கோடியே 75 லட்சம். இது 2019 ஜூலையை விட இது 83 சதவிகிதம் அதிகம்.ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் ஆகிய மாதங்களில் வேலை பெற்ற குடும்பங்களின் எண்ணிக்கை இரண்டு கோடியாக உள்ளது. இது, 2020-இன் இதே மாதங்களில் வேலை பெற்ற குடும்பங்களின் எண்ணிக்கையை விட 62 முதல் 82 சதவிகிதம் அதிகம்.

2020 நவம்பரில் இந்த எண்ணிக்கை (1.84 கோடி) வீழ்ச்சியடைந்த போதிலும் கூட, 2019நவம்பரில் கையெழுத்திட்டவர்களை விட, மேற்கண்ட எண்ணிக்கை 47 சதவிகிதம் அதிகமாகும். டிசம்பர் 2020 மற்றும் ஜனவரி 2021-இல் இந்த எண்ணிக்கை மீண்டும் 2.08 கோடியாக அதிகரித்துள்ளது. இது, 2019 டிசம்பரை விட 46.8 சதவிகிதம் அதிகம். 2020 ஜனவரியைக் காட்டிலும் 30.36 சதவிகிதம் அதிகம்.இதன்மூலம் நூறுநாள் வேலைத்திட்டமானது இந்திய மக்களின் வறுமை ஒழிப்புத் திட்டத்திலிருந்து பிரிக்க முடியாத ஒன்றாக இருப்பது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. குறிப்பாக, தமிழ்நாடு, மேற்கு வங்கம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில்தான் 100 நாள் வேலைக்கு தேவை அதிகமாக இருந்துள்ளதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

;