india

img

தீக்கதிர் சில வரிச் செய்திகள்...

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை மன்றத்தில் மீண்டும் இணைந்து கொள்ள அமெரிக்காவின் ஜோ பைடன் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஐ.நா. மனித உரிமை மன்றத்திலிருந்து 2018 ஆம் ஆண்டு, இம்மன்றத்தில் இஸ்ரேலுக்கு எதிராக பாரபட்சம் இழைக்கப்படுவதாகவும், நிர்வாக சீர்திருத்தம் செய்ய மறுப்பதாகவும் சொத்தையான காரணங்களை காட்டி டொனால்டு டிரம்ப் நிர்வாகம் வெளியேறி இருந்தது. இந்நிலையில், அந்த முடிவை ரத்து செய்துள்ளது அமெரிக்கா.

                                      ****************

அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள நிலையில், சீன ஜனாதிபதியுடன் தொடர்புகொண்டு பேசுவதற்கு பொருத்தமான தருணம் இன்னும் வாய்க்கவில்லை என்று ஜோ பைடன் கூறியுள்ளார். சீனாவுடன் டிரம்ப் நிர்வாகம் மேற்கொண்டதை போல அல்லாமல் வேறுபட்ட உறவினை நிச்சம் மேற்கொள்வோம் என குறிப்பிட்ட பைடன், “நாங்கள் அவர்களுடன் மோதிக்கொண்டிருக்க தேவையில்லை; ஆனால் கடுமையான போட்டி நடந்து கொண்டிருக்கிறது” என கூறியுள்ளார்.

                                      ****************

ஈரானுடனான அணுசக்தி உடன்பாட்டை மீண்டும் உறுதி செய்வதற்காக, பேச்சுவார்த்தை நடத்தும் பொருட்டு, ஈரான் சொல்வது போல அந்நாட்டின் மீதான தடைகளை அமெரிக்கா தளர்த்தி கொள்ளாது என்று ஜோ பைடன் பல்டியடித்துள்ளார். முன்னதாக இதுபற்றி பரிசீலிப்போம் என்று அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. யுரேனியம் செறிவூட்டும் நடவடிக்கையை ஈரான் முதலில் நிறுத்திக் கொள்ள வேண்டும்என்றும் பைடன் நிர்ப்பந்தம் வெளியிட்டுள்ளார். ஆனால் இதை நிராகரித்துள்ள ஈரான் தடைகளைநீக்கினால் பேசுவோம் என கூறியுள்ளது.

                                      ****************

மார்ச் மாதத்தில் தென்கொரியா, ஜப்பான், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 18நாடுகளுக்கு சொந்தமான 40 சிறிய ரக செயற்கைக்கோள்களை ரஷ்யா விண்ணில் செலுத்துகிறது. ரஷ்யாவின் பிரபலமான சோயுஸ் 2 ராக்கெட் மூலம்இந்த செயற்கைக் கோள்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன.

                                      ****************

ஆக்ஸ்போர்டு - அஸ்ட்ரா ஜென்கா தயாரிப்பில் உருவான கோவிட் தடுப்பூசி, தென்னாப்பிரிக்க வகையை சேர்ந்த கொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை தடுப்பதில் தோல்வி அடைந்திருப்பதாக அறிக்கை வெளியானதை தொடர்ந்து, இந்த மருந்தை தென்னாப்பிரிக்காவில் பயன்படுத்துவதை அந்நாட்டு அரசு நிறுத்தி வைத்துள்ளது.

                                      ****************

மியான்மரில் ராணுவ சர்வாதிகளின் ஆட்சி அமலாக்கப்பட்டிருப்பதை எதிர்த்து கடந்த ஒரு வாரகாலமாக தலைநகர் நேபிடாவிலும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டுள்ளது ராணுவ அரசு.

                                      ****************

பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசுக்கு எதிராக பாகிஸ்தான் ஜனநாயக கூட்டணி போராட்டத்தில் இறங்கியுள்ளது. மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தவறிய இம்ரான் அரசு, ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் புதிய தேர்தல் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி மார்ச் 26 முதல் நாடு தழுவிய நீண்டபயணத்தை மேற்கொள்ள இருப்பதாக ஜனநாயக கூட்டணியின் தலைவர் மவுலானா பஸ்லூர் ரஹ்மான் கூறியுள்ளார்.

                                      ****************

காங்கோவில் மீண்டும் எபோலா கொள்ளை நோய் பரவுகிறது. கடந்த 7 மாதங்களில் பாதிப்பு எதுவும் இல்லாதிருந்த நிலையில், எபோலா மரணங்கள் பதிவாக துவங்கியிருப்பதாக காங்கோ ஜனநாயக குடியரசு தெரிவித்துள்ளது.

;