india

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்

கோகோய் மீது வழக்கு தொடர அனுமதி மறுப்பு!

 ரபேல் ஊழல், பாபர்மசூதி உள்ளிட்ட வழக்குகளில் பாஜக-வுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியதாக கடும் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளானவர் ரஞ்சன் கோகோய், பணி ஓய்வுக்குப் பின், இவருக்கு நியமன எம்.பி. பதவி வழங்கப்பட்டது, அந்த குற்றச்சாட்டுக்களை உறுதியும் செய்தது. இதனிடையே, அண்மையில் ‘இந்தியா டுடே’ விழாவில் பங்கேற்ற கோகோய், நீதித்துறை மீதே விமர்சனங்களை வைத்தது சர்ச்சைகளை கிளப்பியது. அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப் போவதாக சமூக ஆர்வலர் சாஹேத் கோகலே அறிவித்திருந்தார். ஆனால், மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் அதற்கு தற்போது அனுமதி மறுத்துள்ளார்.

                                                ******************

கடைசி டுவீட் ஆக்கி விடாதீர்... கிஷோர் உருக்கம்!

மேற்குவங்க தேர்தலில், ஆளும் திரிணாமுல் கட்சிக்கு, வியூக வகுப்பாளராக வேலை பார்ப்பவர் பிரசாந்த் கிஷோர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, டுவீட் ஒன்றைப் போட்ட அவர், “மேற்குவங்கத்தில் பாஜக சிறப்பான வெற்றியைப் பெற்றுவிட்டால், நான் டுவிட்டரிலிருந்தே விலகி விடுகிறேன்” என்று சவால் விட்டார். மேலும், பாஜக மூன்று இலக்கத்தில் எம்எல்ஏ-க்களை பெற வாய்ப்பில்லை என்றும், 200 இடங்களுக்கு குறைவாக வென்றால்,பாஜக தலைவர்கள் ராஜினாமா செய்வார்களா? என்றும் கேட்டிருந்தார். இந்நிலையில், புதிய டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள அவர், “வாக்கு எண்ணிக்கை நடக்கும் மே 2-ஆம் தேதியுடன் எனது டுவீட்டை, கடைசி ட்வீட்டாக ஆக்கி விடாதீர்கள்...” என்று மக்களிடம் உருக்கமாக கெஞ்சியுள்ளார்.

                                                ******************

மோடியைப் பெரிய ஆளாக நினைப்பது குருட்டுத்தனம்!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு மோடியின் பெயர் சூட்டப்பட்டதை சிவசேனா கட்சி கண்டித்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக காங்கிரஸ் அல்லது நேரு குடும்பத்தினர் சர்தார் படேலின் பெயரை அழிக்க முயற்சிப்பதாக பாஜக குற்றம் சாட்டியது. ஆனால் தற்போது அவரது பெயரை யார் அழிக்க முயற்சிக்கிறார்கள்? என்ற உண்மை வெளிவந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி ஒரு சிறந்த தலைவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் மகாத்மா காந்தி, பண்டிட் நேரு, சர்தார் பட்டேல் அல்லது இந்திரா காந்தி ஆகியோரை விட பெரியவர் என்று அவரை பின்தொடர்பவர்கள் நம்பினால் அது குருட்டுத்தனம் என தெரிவித்துள்ளது.

                                                ******************

ராமர் கோயிலுக்கு  ரூ. 2,100 கோடி குவிந்தது!

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில், ராமர் கோயில் கட்டுவதற்கான நிதி வசூலில் ஆர்எஸ்எஸ் பரிவாரங்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதில், 2021 ஜனவரி 15 முதல் பிப்ரவரி 27 வரையிலான 44 நாட்களுக்குள் மட்டும் ரூ. 2100 கோடி நன்கொடை திரண்டுள்ளதாக ராமர் கோயில் அறக்கட்டளை பொருளாளர் கோவிந்த் தேவ் கிரி தெரிவித்துள்ளார். கோயிலுக்கு ரூ. 400 கோடி, கோயில் வளாகத்திற்கு ரூ. 700 கோடி என மொத்த பட்ஜெட்டே ரூ. 1,100 கோடிதான் என்பது குறிப்பிடத்தக்கது.

                                                ******************

முன்கூட்டியே வெளியான ராணுவத் தேர்வு வினாத்தாள்

அகில இந்திய அளவிலான பொதுப்பணி வீரர்கள்நியமனத்துக்கான நுழைவுத்தேர்வை நடத்த ராணுவம் தயாராகி இருந்தது. இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் புனேயில் உள்ளூர் போலீசாருடன் இணைந்து ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கையில், குறிப்பிட்ட தேர்வுக்கான கேள்வித்தாள் வெளியாகி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. அதைத் தொடர்ந்து, வீரர்கள் நியமனத்துக்கான நுழைவுத்தேர்வை ராணுவம் ரத்து செய்துஉள்ளது. 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

;