india

img

நாட்டின் முதலாவது டிஜிட்டல் பல்கலைக்கழகம் கேரளத்தில் திறப்பு... இனி விரல் நுனியில் நூலகங்கள்....

திருவனந்தபுரம்:
அறிவு சார் சமூகமாக மாறுவதற் கான கேரளத்தின் தேடலை கேரளடிஜிட்டல் அறிவியல் கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (டிஜிட்டல் பல்கலைக்கழகம்) எளிதாக்கியுள்ளது.

உயர்கல்வி மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கான உலகளாவிய மையமாக நிறுவப்பட்ட பல்கலைக்கழகம் இது. நாட்டை அறிவுசார் பொருளாதாரத்தின் மூலம் மேம்படுத்தும் நாட்டின் முதலாவது டிஜிட்டல் பல்கலைக்கழகம் திருவனந்தபுரத்தில் உள்ள கழக்கூட்டம் டெக்னோசிட்டியில் நிறுவப்பட்டுள்ளது. இதனை பல்கலைக்கழக வேந்தருமான ஆளுநர் ஆரிப் முகமது கான் ஞாயிறன்று (பிப்.21) காணொலி வாயிலாக திறந்துவைத்தார். விழாவிற்கு முதல்வர் பினராயி விஜயன் தலைமை தாங்கினார்.

புதிய மாற்றங்களை ஏற்றுக்கொள்வதற்கான கேரளத்தின் உறுதியை டிஜிட்டல் பல்கலைக்கழகம் காட்டுகிறது என்று ஆளுநர் கூறினார். இது  இளைஞர்களின் எதிர்காலத்தை  நோக்கிய முக்கியமான படிக்கட்டு என்று முதல்வர் கூறினார். ஆளுநர் பல்கலைக்கழக வார்ப்புருவை (லோகோ) வெளியிட்டார்.  டிஜிட்டல் பல்கலைக் கழக வளாகத்தின் ஒரு குறுகிய  வீடியோவும் காட்டப்பட்டது. உயர்கல்வித் துறை அமைச்சர் கே.டி.ஜலீல், துணை சபாநாயகர் வி.சசி, அடூர் பிரகாஷ்எம்.பி., டிஜிட்டல் பல்கலைக்கழக துணை வேந்தர் சஜி கோபிநாத், டாக்டர்.எலிசபெத் ஷெர்லி ஆகியோர்பேசினர்.

விரல் நுனியில் நூலகங்கள்
கேரளத்தின் அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் நூலகங்களை ஒரு வலையமைப்பு மூலம் இணைக்கும் கால்நெட் (கேரள கல்வி நூலக வலையமைப்பு) சாத்தியமாகியுள்ளது என்று முதல்வர் பினராயி விஜயன் கூறினார். உலகில் எங்கிருந்தும் ஆன்லைனில் ஆராய்ச்சியாளர்கள் மாநிலத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகநூலகங்களிலும் புத்தகங்கள், பத்திரிகைகள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகளைக் கண்டுபிடித்து மின்னஞ்சல் மூலம் தேவையான உள்ளடக்கத்தைப் பெறலாம். படிப்படியாக, வலைத்தளத்திலிருந்தே உள்ளடக்கம் படிக்கப்படும்வகையில் அனைத்து கல்லூரி நூலகங்களும் விரைவில் கால்நெட்டின் ஒருபகுதியாக மாறும். உயர்கல்வித் துறையில் ஒரு முக்கியமான நடவடிக்கை உயர்கல்வி கவுன்சிலின் தலைமையில் சாத்தியமானது என்று முதல்வர் கூறினார்.

;