india

img

தங்க கடத்தல் விசாரணை தொடங்கி ஓராண்டு... எந்த கட்டத்தையும் தாண்டாத புலனாய்வு அமைப்புகள்...

திருவனந்தபுரம்:
ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பாதுகாப்புபெற்ற பார்சல்களில் திருவனந்தபுரம் விமான நிலையம் வழியாக கடத்தப்பட்ட 30 கிலோ தங்கம்பறிமுதல் செய்யப்பட்டு இன்று (ஜூலை 5) ஒருவருடம் நிறைவடைகிறது. ஐந்து மத்திய ஏஜென்சிகள் ஒரே நேரத்தில் வரி ஏய்ப்பு முதல் பணமோசடி மற்றும் சர்வதேச பயங்கரவாத தொடர்புகள் வரை அனைத்தையும் விசாரித்தன.

இதுவரை, 53 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், ஆனால் தங்கத்தை வெளிநாட்டிலிருந்து ஏற்றி அனுப்பியவரும், கள்ளக்கடத்தலில் முக்கிய புள்ளிகளான ஐக்கிய அரபுஅமீரக தூதரக அதிகாரிகளும் எங்கே இருக்கிறார்கள்  என்கிற கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை. சர்வதேச பயங்கரவாத தொடர்புகள் இருப்பதாகக் கூறப்படும் வழக்கில்ஆதாரங்கள் எங்கே என்ற நீதிமன்றத்தின் கேள்விக்கு பதிலளிக்கப் படவில்லை. ஒன்றிய அரசின் புலனாய்வு அமைப்புகளுக்கு அவமானம் அளித்த ஒரு வழக்கின் ஒரு வருடம் உருண்டோடியது என்றாலும், கேரள அரசியலில்தங்கக் கடத்தல் விவகாரம் ஏற்படுத்திய தாக்கம்சொற்பமானது அல்ல.

ஜூன் 30, 2020 அன்று, திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் முகவரிக்கு சுங்க சரக்கு வளாகத்திற்கு அந்த பார்சல் வந்தடைந்தது.  ரகசிய தகவல்களைத் தொடர்ந்து சுங்கத்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டது. சுங்கத்துறை வழக்கு ஜூலை 5 ஆம் தேதி பார்சல்களை திறந்து பரிசோதித்ததிலிருந்து தொடங்கியது. தூதரகத்தின் மக்கள்தொடர்பு அதிகாரியாக ஏற்கனவே பணியாற்றிய சரித், முதலில் கைது செய்யப்பட்டார். மாநில அரசின் வேண்டுகோளின் பேரில் ஒன்றிய அரசின் உத்தரவின்பேரில் ஜூலை 10 ஆம் தேதி என்ஐஏ இந்த வழக்கை ஏற்று விசாரித்தது.. குற்றம் சாட்டப்பட்ட இரண்டு மற்றும் நான்காவது குற்றவாளிகளான சொப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயர் ஆகியோரை பெங்களூருவில்என்ஐஏ கைது செய்தது. குற்றம்சாட்டப்பட்ட வர்களின் பண மோசடி குறித்து விசாரிக்க அமலாக்கத்துறையும் ஒரு வழக்கை பதிவு செய்தது.

இதற்கிடையில், இந்த வழக்கு தொடர்பாக சுமார் 10 பேரை சுங்கத்துறையினர் கைதுசெய்தனர். பல வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட கே.டி.ராமிஸ் மற்றும் வெளிநாடுகளில் முக்கிய குற்றவாளிகள் என்று நம்பப்படும் பைசல் பரீத்- இன் கூட்டாளியான ராபின்ஸ் ஆகியோர் பின்னர்கைது செய்யப்பட்டனர், இதில் தங்கக் கடத்தலுக்காக பணம் திரட்டியவர்கள் மற்றும் கடத்தலுக் காக தங்கம் வாங்கியவர்கள் உட்பட கடத்தலில் தூதரகம் மற்றும் அட்டாச்சே- இன் பங்கை அவர்கள் வெளிப்படுத்தியிருந்தனர். ஆயினும் முதல் கட்டத்தில் அவர்கள் மீது குற்றம் சாட்டப்படவில்லை. இதற்கிடையில், அவர்கள் நாட்டை விட்டு வெளியேறினர்.

சொப்னாவுக்கு ஐடி செயலாளர் எம்.சிவசங்கருடனான தொடர்பை பயன்படுத்தி, மாநில அரசை நோக்கி வழக்கை கொண்டு செல்ல முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 100 மணி நேரத்திற்கும் மேலாக சிவசங்கர் விசாரிக்கப்பட்ட போதிலும், ஆதாரங்கள் இல்லாததால் என்ஐஏ வழக்கில் அவர் மீது குற்றம்சாட்டப்படவில்லை. குர்ஆன் விநியோகம் என்ற போர்வையில் தங்கம் கடத்தியதாக குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சரான கே.டி.ஜலீல் விசாரிக்கப்பட்டார். குற்றம்சாட்டப்பட்டவர் களில் ஒருவரின் வாக்குமூலத்தை தொடர்ந்து முதல்வரின் கூடுதல் தனி செயலாளர் சி.என்.ரவீந்திரன் விசாரிக்கப்பட்டார். ஆனால், அது பலனளிக்கவில்லை. லைப் மிஷன் மற்றும் கே தொலைபேசி திட்டங்கள் குறித்து சர்ச்சையை உருவாக்கும் முயற்சியும் நடந்தது.
நீதிமன்றங்களிலிருந்து புலனாய்வு அமைப்புகளுக்கு எதிராக பல முறை கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. யுஏபிஏ  சட்டம் போன்ற கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்துவதற் கான ஆதாரங்கள் எங்கே என்ற கேள்வியை நீதிமன்றம் மீண்டும் மீண்டும் எழுப்பியது. அதைத் தொடர்ந்து என்ஐஏ வழக்கில் உட்பட முக்கியகுற்றம் சாட்டப்பட்டவர்கள் அப்ரூவர்களாக மாறினர். சுங்க வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் பெரும்பாலோர் சாட்சியங்கள் இல்லாததால் குற்றப்பத்திரிகை தாமதமாக வந்தபோது ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். விசாரணை தொடங்கி ஒரு வருடம் கழித்து, முக்கிய குற்றம் சாட்டப்பட்ட பைசல் பரீத் எங்கிருக்கிறார் என்பது குறித்த நீதிமன்றத்தின் கேள்விக்கு என்ஐஏவால் பதிலளிக்க முடியவில்லை.

நாட்டைவிட்டு வெளியேறிய தூதர் மற்றும் அட்டாசேயை விசாரிக்க நோட்டீஸ் அனுப்பிவிட்டு காத்திருக்கிறது சுங்கத்துறை. குற்றம்சாட்டப்பட்டவர்களை அச்சுறுத்தியது, முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக சாட்சியங்களை உருவாக்க முயன்ற தற்காக அமலாக்க இயக்குநரகம் நீதி விசாரணையை எதிர்கொள்கிறது.

;