india

img

எரிபொருள் விலை ஏற்றத்துக்கு எதிராக கேரள எல்டிஎப் போராட்டம்....

திருவனந்தபுரம்:
எரிபொருள் விலை அதிகரிப்பதை எதிர்த்து கேரளம் முழுவதும் எல்டிஎப் போராட்டம் நடத்த உள்ளதாக எல்டிஎப் ஒருங்கிணைப்பாளர் ஏ.விஜயராகவன் தெரிவித்தார்.

திங்களன்று (ஜுன் 21) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநிலக்குழு கூட்டம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்றது. பின்னர் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ஏ.விஜயராகவன் கூறியதாவது: கேரளம் முழுவதும் ஜுன் 30 மாலை 4 மணிக்கு எரிபொருள் விலை அதிகரிப்பதற்கு எதிரான போராட்டம் வார்டு மற்றும் டிவிசன் மட்டங்களில் நடைபெறும். ஒவ்வொரு மையத்திலும் கோவிட்கட்டுப்பாடுகளை பின்பற்றி நான்கு பேர் பங்கேற்பார்கள். ஒவ்வொரு பஞ்சாயத்து வார்டிலும் 25 மையங்களிலும், மாநகராட்சிகளில் ஒவ்வொரு டிவிசன்களில் 100 மையங்களிலும் போராட்டங்கள் நடைபெறும். அதிகரித்து வரும் எரிபொருள் விலைகளுக்கு எதிரான, நாட்டின் மிகப்பெரிய மக்கள் இயக்கமாக இது மாறும். ரூ.50 க்கு பெட்ரோல் தருவதாகக் கூறி பாஜக ஆட்சிக்கு வந்தது. இப்போது விலை நூறை எட்டுகிறது. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு மட்டும் விலைகள் 31 முறை உயர்த்தப்பட்டுள்ளன. பணப் பற்றாக்குறை ஏற்படும் போதெல்லாம் ஒன்றிய அரசு நாட்டு மக்களின் பைகளில் கைவைக்கிறது.

இரண்டாவது பினராயி அரசாங்கம் ஒரு நல்ல தொடக்கத்தில் உள்ளது என்று மாநிலக் குழு மதிப்பீடு செய்தது. ஜனரஞ்சக முடிவுகள் எடுக்கப்பட்ட நேரத்தில் கோவிட் நெருக்கடி ஏற்பட்டது. முதல் பட்ஜெட் சாமானியர் களுக்கு நிவாரணம் வழங்கும். மக்களுடைய வாழ்க்கையை சிரமப்படுத்த ஒன்றியஅரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏப்ரல் முதல் உணவு மற்றும் பிற நுகர்வோர் பொருட்களின் விலைகள் 10.6 சதவிகிதம் உயர்ந்தன. மாநில அரசுகளின் அனைத்து வருவாய் நீரோட்டங்களையும் மூடும்கொள்கையை ஒன்றிய அரசு பின்பற்றுகிறது என்றார்.

;