india

img

அயோத்திக்கு நன்கொடை தராதவர்களின் வீடுகள் மீது அடையாளக் குறி இடுகிறார்கள்... ‘நாஜி’ முகத்தை காட்டத் துவங்கியது ஆர்எஸ்எஸ்.... கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி பகிரங்க குற்றச்சாட்டு....

பெங்களூரு:
அயோத்தி ராமர் கோயிலுக்கு நன்கொடை அளிக்காதவர்களின் வீடுகள் மீது அடையாளக் குறி இடப்படுவதாகவும், இது ஜெர்மனியில் ஹிட்லரின் நாஜி கட்சி பின்பற்றிய நடைமுறை என்பதால், தனக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்துவதாகவும் கர்நாடக முன்னாள் முதல்வரும், மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் தலைவருமான எச்.டி. குமாரசாமி பரபரப்புக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில், ராமர் கோயில் கட்டிக்கொள்ள, ரஞ்சன் கோகோய் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு அனுமதி அளித்தது. அதைத்தொடர்ந்து, ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ர டிரஸ்ட் என்ற பெயரில் அறக்கட்டளை அமைக்கப்பட்டு- பிரதமர் மோடியே முன்னின்று கோயில் கட்டும் பணியைத் துவக்கி வைத்தார்.ராமர் கோயிலை பிரம்மாண்டமாக கட்ட வேண்டும் என்ற அடிப்படையில், ஆர்எஸ்எஸ், விஸ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புக்களைச் சேர்ந்த பல லட்சம் பேர், நாடு முழுவதும் வீடு, வீடாகச் சென்று நன்கொடைவசூலித்து வருகின்றனர். சுமார் 4 லட்சம் பேர் இந்த பணியில் ஈடுபட்டிருப்பதாக கூறப்படும் நிலையில், இவர்கள் கையில் தடியுடனும், கத்திகளுடனும் செல்கின்றனர்; மிரட்டிப் பணம் கேட்கின்றனர் என்று மத்தியப்பிரதேச மாநில முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங் அண்மையில் குற்றம் சாட்டினார். அதற்கேற்ப இந்தூர் அருகே சந்தன்கெடி கிராம முஸ்லிம் குடியிருப்புக்குள் புகுந்த, இந்துத்துவா கும்பல், ராமர் கோயிலுக்கு நன்கொடை கேட்டு கலவரத்தில் ஈடுபட்ட சம்பவம் நடந்தது.

ராமர் கோயில் நன்கொடை வசூலை வைத்து, நாடு முழுவதும் சிறுபான்மையினர் மீது மிகப்பெரிய தாக்குதலுக்கு பாஜக திட்டமிடுவதாகவும், 2024 மக்களவைத் தேர்தலை மனத்தில் கொண்டு இதைச் செய்வதாகவும் பாஜக-வின் நீண்டநாள் கூட்டாளியான சிவசேனா கட்சியே வாக்குமூலம் அளித்தது.இந்நிலையில்தான், ராமர் கோயிலுக்கு நன்கொடை தராதவர்களின் பெயர்கள் குறித்து வைக்கப்பட்டு வருவதாகவும், இது அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்துவதாகவும் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் தலைவர் எச்.டி. குமாரசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் மேலும் அவர் கூறியிருப்பதாவது:

‘’நான் அண்மைக் காலமாக சில விஷயங்களை அறிந்தேன். ஆனால், இதுபோன்ற சம்பவங்கள் நம்மை எங்கு கொண்டுபோய் நிறுத்தப் போகின்றன என்பது எனக்குத் தெரியவில்லை.கர்நாடக மாநிலத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கு ஆர்எஸ்எஸ் அமைப்பினர் பலரிடம் நிதி கோருகிறார்கள். இதில், நன்கொடை அளித்தவர்களின் வீடுகளில் ஒரு மாதிரியாகவும், நன்கொடை அளிக்காதவர்களின் வீடுகளில் தனியாகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிர்வாகிகள் அடையாளக் குறியிட்டு செல்கின்றனர். இது எதற்கு எனத் தெரியவில்லை.ஜெர்மனியில் நாஜிக்கள் (Nazi Party)ஆட்சியில் என்ன நடந்தது என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஹிட்லரின் பதவிக் காலத்தின்போது, நாஜி கட்சியினர் இதேபோலத்தான் செய்தனர். லட்சக்கணக்கான யூதர்கள் வாழ்க்கையை இழந்தார்கள், கொல்லப்பட்டார்கள்.அதேபோன்ற நடைமுறையை ஆர்எஸ்எஸ்பின்பற்றுவதைப் பார்க்கும்போது நமது நாடு எதை நோக்கிச் செல்கிறது என்ற அச்சம் எழுகிறது. ஜெர்மனியின் நாஜி கட்சி எப்போது துவங்கியதோ, அதே காலகட்டத்தில்தான் இந்தியாவில்ஆர்எஸ்எஸ் அமைப்பும் பிறந்தது. நாஜி கட்சி எந்த மாதிரி திட்டங்களைக் கையில் எடுத்ததோ, தற்போது அதேபோன்ற திட்டங்களை ஆர்எஸ்எஸ்-ஸூம் செயல்படுத்தினால் என்ன நடக்கும்? என்பது கவலையளிக்கிறது. நாட்டில் மக்களின் அடிப்படை உரிமைகள் நசுக்கப்படுவதை பார்க்கும்போது இந்த சந்தேகம் அதிகரிக்கிறது. 

தற்போது நமது நாட்டில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது. மக்கள் தங்களது கருத்துக்களை சுதந்திரமாக சொல்வதற்கு முடியவில்லை. ஊடகங்களின் சுதந்திரத் தன்மை வருங்காலங்களில் முழுமையாக பறிபோகும் நிலைமை உருவாகியுள்ளது. அரசு சொல்லும் செய்திகளை மட்டுமே ஊடகங்கள் தெரிவித்தால் நிலைமை என்ன ஆகும்? என்று மக்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். தற்போது உள்ள நிலவரத்தை பார்த்தால், நாட்டில் என்ன வேண்டுமானாலும் நடக்கும் என்ற அச்சம் இருக்கிறது.இவ்வாறு குமாரசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

;