india

img

மத்திய அரசிடமிருந்து ஆக்சிஜன் அவசரமாக கோரியது கர்நாடகா....

பெங்களூரு:
கர்நாடகத்தில் கடுமையான ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், அவசரமாக ஆக்சிஜன் தருமாறு மத்திய அரசை அம்மாநில அரசு கேட்டுக்கொண்டுள்ளது. தினமும் 1,500 டன் மருத்துவ ஆக்சிஜன் மத்திய அரசிடமிருந்து கோரப்பட்டுள்ளது.

இதுகுறித்து கர்நாடக மாநில சுகாதார அமைச்சர் கே.சுதாகர் செய்தியாளர்களிடம் கூறுகையில், மாநிலத்திற்கு 300 டன் ஆக்சிஜன் ஒதுக்கப்பட்டிருந்தாலும், நோயாளிகள் அதிகரிப்பதால் தினசரி ஆக்சிஜனுக்கான தேவை இரட்டிப்பாகியுள்ளது. எதிர்வரும் வாரங்களில் கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, எனவே இந்த மாதத்தில் ஒரு நாளைக்கு 600 டன் ஆக்சிஜன் தேவைப்படுகிறது, மே மாதத்தில் 1,500 டன் தேவைப்படுகிறது. மத்திய அரசிடம் ஆக்சிஜன் வழங்குமாறு கேட்டு முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா கடிதம் எழுதியுள்ளார்.

இரண்டாவது அலை தீவிரமாக இருக்கும்போது ஆக்ஸிஜன் சிலிண்டர்களின் பற்றாக்குறையும் ஒரு பெரும் கவலையாக மாறியிருக்கிறது. நாட்டின் பெரும்பாலான மாநிலங்கள் ஆக்சிஜன் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றன. ஆக்சிஜன் பற்றாக்குறை தேசிய தலைநகரில் ஒரு முக்கிய பிரச்சனையாக உள்ளது.கோவிட்டின் இரண்டாவது அலை வெடித்துக் கிளம்பியதைத் தொடர்ந்து மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறையைப் போக்க உற்பத்தியை அதிகரிக்காததற்காக, தில்லி உயர் நீதிமன்றம் திங்களன்று மத்திய அரசைக் கண்டித்தது. இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசை நீதிமன்றம் மிகக் கடுமையான வகையில் விமர்சித்தது. ஆக்சிஜன் வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பு என்றும், அதைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை கண்டுகொள்ளாமல் மத்திய அரசால் எவ்வாறு புறக்கணிக்க முடியும் என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

குடிமக்கள் அரசாங்கத்தை நம்பலாம் அல்லவா. இது அரசாங்கத்தின் பொறுப்பு. நீங்கள் என்ன பிச்சை எடுத்தாலும், கடன் வாங்கினாலும், திருடினாலும் எதை வேண்டுமானாலும் செய்து மக்களுக்கு ஆக்சிஜன் கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது.

;