india

img

‘கொரோனா’ நல்லது.... ( தெய்வத்தை கூறுபோட்டு விற்ற கதை)

ஆப்பிள் நிறுவனத்திற்கு துணைக் கருவிகளைத் தயாரித்து வழங்கும் நிறுவனம் ‘விஸ்ட்ரான்’ கர்நாடகத்தின் கோலார் மாவட்டத்தில் செயல்படுகிறது.   இந்தத் தொழிற்சாலை அண்மையில் தாக்குதலுக்கு ஆளானது. ‘செய்யும் தொழிலே தெய்வமன்றோ’ என்ற தலைப்பில் பேராசிரியர் தி.இராசகோபாலன்  தீட்டிய கட்டுரை தினமணி 19.3.2021 ஏட்டில் வெளியாகியுள்ளது. தொழிலாளர்கள் அழிவுப்பாதையில் சென்றது சரியா என்று கட்டுரையாளர் கேள்வி எழுப்புகிறார். 8000 தொழிலாளிகள் ‘விஸ்ட்ரான்’ நிறுவனத்தில் பணியாற்றுகிறார்கள். நிர்வாகத்தால் நேரடியாக பணிக்கு அமர்த்தப்பட்டவர்கள் 1400 பேர் மட்டுமே. மற்றவர்கள் ஒப்பந்தக்காரர்களால் அமர்த்தப்பட்டவர்கள்.

இது கட்டுரையாளர் தரும் விபரம். நிறுவனத்தில் பணியாற்றும் 8000 பேரில் 6600 பேர் ஒப்பந்தப் பணியாளர்கள். கொத்தடிமை வேலைமுறைக்கு இதைவிட வேறு சான்று வேண்டுமா?நான்கு மாதங்களாக ஊதியம் வழங்கப்படாமை; 8 மணி நேர வேலைக்குப் பதிலாக 14 மணி நேரம் வேலை வாங்கியது போன்ற காரணங்களால் தொழிலாளர்கள் ஆயுதங்களை ஏந்தியிருக்கிறார்கள் என்று கட்டுரையாளர் ஆதங்கப்படுகிறார். உலக கோடீஸ்வரர் ராக்பெல்லர் தனது நிறுவனத்தில் வேலைநிறுத்தம் செய்த தொழிலாளர்களை அழைத்துப் பேசி தீர்வுகண்டதை கட்டுரையாளர் மேற்கோள் காட்டுகிறார். 

தொழிலாளிக்கு 4 மாத ஊதியம் தரப்படாத கொடுமையை மாநிலத்தில் உள்ள அரசு ஏன் கண்டுகொள்ளவில்லை.  தில்லியிலிருந்து ஒலிபரப்பாகும் மனதின் குரலுக்கும் இது ஏன் எட்டவில்லை. நொடிப்பொழுதில் தகவல் திரட்டும் ஆப்பிள் நிறுவனமும் கைகட்டி, வாய்பொத்தி ஏன்கிடந்தது. தொழிலாளிகளின் வியர்வையும் இரத்தமும் அவ்வளவு மலிவாகிப்போனதா?கொரோனா காலத்தில் உலகத்தரம் வாய்ந்த ஐபோன் நிறுவனம் இரண்டு சிப்டு இயங்குவதை எண்ணி மகிழ்ச்சியடைய வேண்டாமா என்று கட்டுரையாளர் கேட்கிறார். ‘கறை நல்லது’ என்று தொலைக்காட்சி விளம்பரம் கூறும்.  அதுபோல ‘கொரோனா நல்லது’ என்று தொழிலாளிகளின் இரத்தத்தை உறிஞ்சுவதற்கு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு இதுவே தக்க தருணம்.

‘செய்யும் தொழிலே தெய்வமன்றோ’ என்று கட்டுரையாளர் கேட்கிறார். உண்மைதான். அந்தத் தெய்வத்தை கூறுபோட்டு சில்லரையாகவும், மொத்தமாகவும் மத்திய ஆட்சியாளர்கள் விற்றுவருவதை கட்டுரையாளர் கண்திறந்து பார்ப்பது நல்லது.          

வி.பி.

;