india

img

மருத்துவமனைப் படுக்கையோடு பிணைக்கப்பட்டிருக்கும் ஒரு பத்திரிகையாளர்.... பினராயி கடிதம் கண்டு மனம் மாறுவாரா யோகி?

உத்தரப்பிரதேச மாநில காவல்துறையால் கைது செய்யப்பட்டு, தற்போது கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ள பத்திரிகையாளர் சித்திக் கப்பான் வசதியான மருத்துவமனைக்கு மாற்றப்பட வேண்டும், மனிதநேயத்துடன் நடத்தப்பட வேண்டும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கேட்டுக்கொண்டுள்ளார். உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கப்பானுக்கு அனைத்து மருத்துவ வசதிகளும் கிடைப்பதை உறுதிப்படுத்தக் கோரியுள்ளார். கப்பான் நீரிழிவு, இதயப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர் என்று தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள பினராயி விஜயன், ‘‘கோவிட்-19 தொற்று ஏற்பட்ட பிறகு அவர் மதுரா நகரில் உள்ளகேஎம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை கவலைக்குரியதாக உள்ள போதிலும் அவர் படுக்கையில் சங்கிலியால் பிணைக்கப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது’’ என்று எழுதியுள்ளார்.‘

‘தாங்கள் இதில் தலையிட்டு, கப்பானுக்கு மனிதநேயத்துடன் சிகிச்சை கிடைக்கச் செய்ய வேண்டும்.அவருக்குத் தேவைப்படுகிற வல்லுநர்களின் மருத்துவக் கவனிப்பும், நவீன உயிர்காக்கும் வசதிகள் உள்ளமருத்துவமனையும் அவருக்கு உறுதிப்படுத்தப்பட வேண்டும். பொதுவாக மக்களும், குறிப்பாக ஊடக சகாக்களும் அவரது நிலைமை குறித்தும், மனித உரிமைகள் குறித்தும்அறிந்துகொள்ள அக்கறைப்படு கிறார்கள். அவரது அவலநிலை குறித்துப் பெரிதும் கவலை கொண்டிருக்கிறார்கள். அவருக்கு அனைத்து மருத்துவ வசதிகளும் கிடைப்பதை உறுதிப்படுத்திடுமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறேன்’’ என்றும் எழுதியுள்ளார்.

தலைமை நீதிபதி தலையிட கோரிக்கை
சிறைச்சாலையில் கப்பான் சுயநினைவின்றி கீழே விழுந்து காயமடைந்து, பின்னர் மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டதாகக் கூறப்படு கிறது. கப்பானின் இணையர் ரெய்ஹானத் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணாவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘‘மதுரா மருத்துவமனையில், சித்திக் கப்பான்அபாயகரமான நிலையில் இருக்கிறார். படுக்கையோடு சேர்த்து சங்கிலியால் கட்டப்பட்டுள்ளார். கழிப்பறை செல்வதற்குக் கூட அனுமதிக்கப்படுவதில்லை’’ என்று தெரிவித்திருக்கிறார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இதில் தலையிடக் கோரி கேரள உழைக்கும் பத்திரிகையாளர் சங்கமும் கடிதம் அனுப்பியிருக்கிறது. கேரள ஐக்கிய ஜனநாயக முன்னணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் தலைமை நீதிபதிக்கு இதே போன்ற கடிதத்தை அனுப்பியுள்ளனர். ரெய்ஹானத்தும், பத்திரிகையாளர்களும் பினராயியை சந்தித்து அவர் தலையிடக் கேட்டுக்கொண்டனர்.

சித்திக் சிறைவைப்பு ஏன்?
சென்ற ஆண்டு செப்டம்பர் 14 அன்று உ.பி. மாநிலத்தின் ஹாத்ராஸ்நகரில் 19 வயது தலித் பெண், ஆதிக்க சாதியைச் சேர்ந்த ஒரு கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். கடுமையான காயங்களுடன் அலிகார் நகரின் ஜவஹர்லால் நேரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கே உடல்நிலை மோசமானது. செப்டம்பர் 22 அன்று, மருத்துவமனையிலேயே அவர் ஒரு நீதிபதியின் முன் மரண வாக்குமூலம் அளித்தார். பின்னர் புதுதில்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், இரண்டு வார கால உயிர்ப் போராட்டத்திற்குப் பிறகு மரணமடைந்தார்.

நாடு தழுவிய அளவில் பாலியல் வன்முறைக் கொடுமைக்கும், காவல்துறையினர் கையாண்ட விதத்திற்கும் கண்டன முழக்கங்கள் எழுந்தன. உ.பி. மாநில அரசு விசாரணையை சிறப்புப் புலனாய்வுப் பிரிவு நடத்தும் என்று அறிவித்தது. ஆனால் கண்டன இயக்கங்கள் வலுவடைந்ததைத் தொடர்ந்த விசாரணை மத்திய புலனாய்வு நிறுவனத்திடம் (சிபிஐ) ஒப்படைக்கப்பட்டது. இதனிடையே, இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சிபிஐ தனது விசாரணையை அலகாபாத் உயர்நீதிமன்ற கண்காணிப்பில் நடத்த வேண்டும் என்று ஆணையிட்டது. சிபிஐ, நான்கு பேர் மீதுகுற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அந்த நான்கு பேரும் ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்கள்.இந்தப் பின்னணியில் கடந்தஅக்டோபரில் சித்திக் கப்பான் ஹாத்ராஸ் சென்றார். செல்லும் வழியிலேயே உ.பி. காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர். அவரோடு காரில் இருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்திய தண்டனைச்சட்டம், சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டம் (யுஏபிஏ) ஆகியவற்றின் பல்வேறு பிரிவுகளில் அவர்கள் மீது வழக்குகள் போடப்பட்டுள்ளன. ஹாத்ராஸ் பகுதியில் சட்டம்-ஒழுங்கு நிலையை சீர்குலைத்து, சாதிக் கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடனேயே அவர்கள் அங்கு சென்றார்கள் என்று காவல்துறை தனது அறிக்கையில் பதிவு செய்துள்ளது. 

சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச்சட்டத்தின் (யுஏபிஏ) பல்வேறு பிரிவுகளில் சித்திக் மீதும், அந்த இளைஞர்கள் மீதும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்துள்ள காவல்துறையினர், அவர் ஒரு பத்திரிகையாளரே அல்ல, அவரும் அவருடன் இருந்தவர்களும் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறியுள்ளது. கலவரம் மூட்டுவதற்காக அவர்களுக்கு வெளிநாட்டிலிருந்து 80 லட்சம் ரூபாய் பணம் வந்திருக்கிறது என்றும் அதில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை மறுத்துள்ள கேரள உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம், அவர் ‘ஆழிமுகம்’ என்ற மலையாள இணையதளப் பத்திரிகையின் செய்தியா ளர்தான் என்று கூறியுள்ளனர்.

கேரள முதல்வரின் கடிதம் கண்டாவது, சித்திக்கின் நிலைமை மேலும் மோசமடைவதற்குள் உ.பி. முதல்வரின் மனம் மாறுமா? உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதிஎவ்வாறு தலையிடப் போகிறார்? ஊடகவியலாளர்களின் உரிமைக் காகக் குரல் கொடுப்போர் மட்டுமல்ல, தலித் பெண்களின் சுயமரியாதைக்காக வாதாடுவோரும் அடுத்து வரும் நிகழ்வுகளைக் கவலையோடு கவனித்து வருகிறார்கள். 

தொகுப்பு : அ.குமரேசன்

;