india

img

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் மீண்டும் தீவிரம்.. ஹரியானா-வில் விரட்டியடிக்கப்படும் பாஜக தலைவர்கள்...

சண்டிகர்:
இந்திய விவசாயிகளை, அம்பானி, அதானி போன்ற பெருமுதலாளிகளிடம் அடிமையாக்கும் வகையில், மூன்று புதிய வேளாண் சட்டங்களை மோடி அரசு கொண்டுவந்துள்ள நிலையில், அதற்கு எதிராக கடந்த ஓராண்டாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.குறிப்பாக, தலைநகர் தில்லிக்குச் செல்லும் மூன்று முக்கிய நுழைவாயில்களான திக்ரி, காஜிப்பூர், சிங்கு ஆகியவற்றை முற்றுகையிட்டு, பல லட்சம் விவசாயிகள் கடந்த 9 மாதங்களாக போராடி வருகின்றனர். 350-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்தக் காலத்தில் உயிரை விட்டுள்ளனர். எனினும்,  மோடி அரசை வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறச் செய்யாமல் ஊருக்குத் திரும்ப மாட்டோம் என்று தில்லி, ஹரியானா, பஞ்சாப், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து கொண்டிருக்கின்றனர்.

இதனிடையே, அண்மையில் ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், “வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை!” என்று கூறி, விவசாயிகளிடம் ஆத்திரத்தைக் கிளப்பினார்.  இதுதொடர்பாக ஒன்றாகக் கூடி ஆலோசித்த 40 விவசாயிகள் சங்கங்களைக் கொண்ட ‘சம்யுக்தா கிஷான் மோர்ச்சா’ மோடி அரசுக்கு எதிராக போராட்டத்தைத் தீவிரப்படுத்துவதென அறிவித்தது.
இந்நிலையில்தான், ஹரியானா மாநிலத்தில் பாஜக தலைவர்கள் மற்றும் அதன் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் எந்த நிகழ்ச்சியையும் நடத்தவிட மாட்டோம் என்று அங்குள்ள விவசாயிகள் சனிக்கிழமை முதல் கிளர்ச்சிப் போராட்டத்தை துவங்கியுள்ளனர்.அன்றைய தினம் யமுனாநகர் மாவட்டத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் மூல்சந்த் சர்மாவின் பொதுகூட்டத்தை குறிவைத்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதேபோல ஹிசார் மாவட்டத்தில் பாஜக  மாநிலத் தலைவர் ஓம் பிரகாஷ் தங்கார் வருகைக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

ஞாயிறன்று பதேகாபாத் மாவட்டத்தில் மாநில கூட்டுறவுத்துறை அமைச்சர் பன்வாரி லால், ஒரு கூட்டத்தில் பங்கேற்றபோது விவசாயிகள் அவரை முற்றுகையிட்டனர்.ஜஜ்ஜார் பகுதியில் அரவிந்த் சர்மா எம்.பி., பகுதி பொறுப்பாளர் வினோத் தாவ்டே, ஓம் பிரகாஷ் தங்கார் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியை குறிவைத்தும் விவசாயிகள் போராட்டம் நடத்தி, பாஜகவினரை விரட்டியடித்தனர். முன்னதாக கூட்டம் நடைபெறும் இடத்தை பாஜக-வினர் மிகவும் ரகசியமாகவே வைத்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்திருந்தனர். ஆனாலும் கடைசி நேரத்தில் அங்கு குவிந்த விவசாயிகள், போலீசார் அமைத்திருந்த பேரிகார்டுகளையும் தள்ளிவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஹரியானா துணை சபாநாயகர் ரன்பிர் கங்வா நிகழ்ச்சி ஒன்றுக்குச் சென்றுவிட்டு திரும்பி வரும் வழியில் அவரது காரையும் விவசாயிகள் முற்றுகையிட்டனர். இதில், காரின் பின்பக்கக் கண்ணாடி சேதமடைந்ததுடன், துணை சபாநாயகர் காயங்களின்றி உயிர் தப்பியதாக ஹரியானா காவல்துறையினர் தெரிவித்துள்ள னர்.

;