இந்தியாவில் விற்பனையாகும் அனைத்து மொபைல்களிலும் சஞ்சார் சாத்தி செயலி கட்டாயம் இடம் பெற வேண்டும் என்ற ஒன்றிய அரசின் உத்தரவு, தனியுரிமை மீதான தாக்குதல் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
இது குறித்து சிபிஎம் மத்தியக்குழு தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:
"இந்தியாவில் வெளிவரும் ஒவ்வொரு புதிய மொபைல் போன்களிலும் இப்போது கட்டாயமாக “சஞ்சார் சாதி” எனப்படும் கண்காணிப்பு செயலியை முன்பே நிறுவியிருக்க வேண்டும் என்ற உத்தரவு மோடி அரசின் சமீபத்திய தனியுரிமை மீதான தாக்குதல்.
இதற்கு ஒப்புதல் கேட்கபடவில்லை. செயலியை நீக்க அனுமதி இல்லை. பொதுமக்களிடம் ஆலோசனை கேட்கப்படவில்லை.
IMEI மோசடியைத் தடுப்பதாக கூறி, ஒவ்வொரு சாதனத்திலும் கட்டாயமாக அரசின் உளவு மென்பொருள், அடிப்படை (root-level) அணுகலுடன் நிறுவப்படுகிறது.
இது மோசடியை தடுக்க கொண்டுவரப்பட்டது அல்ல. இது மோடி அரசின் முழுமையான டிஜிட்டல் கண்காணிப்பை நோக்கி எடுத்துச் செல்லும் முயற்சி — தனியுரிமை என்ற அடிப்படை உரிமைக்கு நேரடி தாக்குதல்.
அரசியலமைப்புக்கு முரணான இந்த நடவடிக்கையை சிபிஎம் மிகக் கடுமையாக கண்டிக்கிறது. இந்த உத்தரவை திரும்பப் பெறுக. அரசியலமைப்பை மதித்திடுக. மக்களின் மொபைல் போனில் கை வைக்காதே!" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
